×

ஆசிய விளையாட்டு போட்டி 2023: பதக்கங்களை சுட்டுத்தள்ளும் இந்தியர்கள்; தங்கம் வென்ற 17வயது பாலக்

ஹாங்சோ: ஆசிய விளையாட்டுப் போட்டி துப்பாக்கி சுடும்போட்டிகளில் நேற்று ஒரே நாளில் 2 தங்கம்,3 வெள்ளி என 5பதக்கங்களை இந்தியச வென்றது. முதலில் நடந்த 50மீட்டர் ரைபிள் ஆடவர் குழுப் போட்டியின் இறுதி ஆட்டம் நடந்தது. அதில் இந்திய வீரர்கள் ஐஸ்வரி பிரதாப் சிங், ஸ்வாப்னில் குசேலே, அஹில் ஷெரோன் ஆகியோர் அடங்கிய குழு 1769புள்ளிகள் குவித்து முதலிடம் பிடித்தது. கூடவே போட்டியின் 7வது நாளான நேற்று முதல் தங்கத்தை சுட்டு தூக்கியது. தொடர்ந்து ஐஸ்வரி பிரதாப் சிங் நேற்று நடந்த ஆடவர் 50மீட்டர் ரைபிள் பிரிவிலும் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

தொடர்ந்து மகளிர் குழு 10மீட்டர் ஏர் பிஸ்டல் பதக்கப் போட்டி நடந்ததது. அதில் இந்திய வீராங்கனைகள் பாலக் குலியா, ஈஷா சிங், திவ்யா சுப்ராஜூ ஆகியோர் களம் கண்டனர். மொத்தம் நடந்த 6 சுற்றுகளில் தொடர்ந்து 4 சுற்றுகளில் சீன மகளிர் முதலிடத்திலும், இந்திய மகளிர் 2 வது இடத்திலும் இருந்தனர். ஆனால் 5வது சுற்றில் இந்திய மகளிர் முந்த தங்கக் கனவு அதிகரித்தது. ஆனால் 6 வது சுற்றில் மீண்டும் சீனா முன்னிலைப் பெற்றது. அதனால் சீன மகளிர் 1736புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. இந்திய மகளிர் பாலக், ஈஷா, திவ்யா ஆகியோர் 1721 புள்ளிகள் குவித்து 2வது இடம் பிடித்த வெள்ளியை வசப்படுத்தினர். அதேநேரத்தில் 1723 புள்ளிகள் சேர்த்த தைவான் வெண்கலம் வென்றது.

குழுப் போட்டியில் பங்கேற்ற இந்திய வீராங்கனைகள் பாலக் குலியா, ஈஷா சிங் ஆகியோர் தனிநபர் மகளிர் 10மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு பதக்கச் சுற்றில் களமிறங்கினர். ஆரம்பம் முதலே எல்லாச்சுற்றுகளிலும் முன்னிலை வகித்த 17வயதான இந்திய வீராங்கனை பாலக் முதலிடம் பிடித்த தங்கத்தை முத்தமிட்டார். அவர் 242.1புள்ளிகளை குவித்தார். இது நேற்று இந்தியா வென்ற 2வது தங்கமாகும். மற்றொரு இந்திய வீராங்கனை ஈஷா சிங் 239.7 புள்ளிகள் சேர்த்து வெள்ளியை வசப்படு்த்தினார். ஈஷாவுக்கு இது நேற்று கிடைத்த 2வது வெள்ளி. மொத்தம் 218.2 புள்ளிகள் பெற்ற பாகிஸ்தான் வீராங்கனை இஸ்மாலா வெண்கலம் வென்றார். துப்பாக்கிச் சுடுதலில் நேற்று ஒரே நாளில் 2 தங்கம், 3 வெள்ளி என 5 பதக்கங்களை இந்தியா வென்றது. இதுவரை துப்பாக்கிச்சுடும் போட்டியில் இந்தியா 6 தங்கம், 7வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 18 பதக்கங்களை கைப்பற்றி உள்ளது.

* பதக்கப்பட்டியலில் முன்னேற்றம்
இந்தியா நேற்று துப்பாக்கிச் சுடுதலில் 5பதக்கங்கள், டென்னிசில் ஒரு வெள்ளி, ஸ்குவாஷில் ஒரு வெண்கலம் என மொத்தம் 7பதக்கங்களை கைப்பற்றியது. அதனால் பதக்கப்பட்டியலில் 32 பதக்கங்களுடன் 5வது இடத்தில் இருந்து 4வது இடத்துக்கு இந்தியா முன்னேறியது.

The post ஆசிய விளையாட்டு போட்டி 2023: பதக்கங்களை சுட்டுத்தள்ளும் இந்தியர்கள்; தங்கம் வென்ற 17வயது பாலக் appeared first on Dinakaran.

Tags : Asian Games 2023 ,Indians ,Palak ,Hangzhou ,Asian Games ,India ,Dinakaran ,
× RELATED கம்போடியாவில் இருந்து 60 இந்தியர்கள் மீட்பு