×

பதவி கேட்டு சேலத்துக்காரருக்கு நெருக்கடி தர மாஜி மந்திரி போட்டிருக்கும் திட்டம் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘வாங்குறதுக்கு காசு கொடுக்க மாட்டேன்னு அடம் புடிப்பாராமே டபுள் ஸ்டார் காக்கி…’’ என சிரித்தார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர் மாவட்டத்துல, சிட்டி சென்டர்ல காக்கிகள் நிலையம் இருக்குது. இந்த நிலையத்தோட கட்டுப்பாட்டுலதான் முக்கிய நிர்வாக அமைப்புகள் இருக்குது. இதனால எப்போதும் அந்த நிலையம் பரபரப்பாக இயங்கி வரும். அங்க இருக்குற காக்கிகளும் பரபரப்பாக இருப்பாங்க. இப்படி பரபரப்புக்கு பஞ்சமில்லாத அந்த நிலையத்துல, 2 ஸ்டார் காக்கி இருக்காராம். இவரு கடைக்கு போய் பொருட்கள் வாங்குனா அதுக்கு காசு கொடுக்க மாட்டாராம். எல்லாமே ஓசி தானாம். இதுல இவரு அடிக்கடி சைட்டிஷ் தான் அதிகம் வாங்குவாராம். எத்தனை நாள்தான் ஓசியில கொடுக்குறதுன்னு கடைக்காரங்க புலம்பத்தொடங்கியிருக்காங்க. அதோட பைக்கையும் தாறுமாறாக ஓட்டுறாராம். உயர் காக்கிங்க விசாரிச்சு நடவடிக்கை எடுக்கணும்னு கோரிக்கை குரல் ஒலிக்கத்தொடங்கியிருக்குது’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பதவியை கேட்டு சேலத்துக்காரருக்கு நெருக்கடி தர மாஜி அமைச்சர் முடிவு செய்திருக்கிறாராமே’’… என்றார் பீட்டர் மாமா.
‘‘தாமரை கட்சியுடன் இலை கட்சி கூட்டணியை முறித்து கொண்டது. தொடர்ந்து, இரு கட்சிகளும் போஸ்டர் யுத்தத்தில் இறங்கியுள்ளது. இலை கட்சியில் அதிருப்தியில் உள்ளவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் தாமரை கட்சி இறங்கி உள்ளது. அதற்கான வேலையில் தாமரை கட்சியினர் தீவிரமாக இறங்கியுள்ளார்கள். இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள டெல்டா மாவட்டத்தில் உள்ள இலை கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆரம்பித்துள்ளார்கள். இலை கட்சியில் சேலத்துக்காரரின் கை ஓங்கிய பிறகு, இலை கட்சியில் ஐக்கியமான பெரும்பாலனோருக்கு பதவிகள் கிடைக்கவில்லை. தற்போது, சேலத்துக்காரரிடம் பதவி கேட்டால் கட்டாயம் கொடுப்பார் என நினைத்து பதவிகளை கேட்டு அடம் பிடித்து வருகின்றார்கள். கடலோர மாவட்டத்தை சேர்ந்த மாஜி அமைச்சர் கடைசி எழுத்தில் முடியக்கூடிய பால் என்பவரும் கூட பதவி கேட்டு நெருக்கடி கொடுத்து வருகிறராம்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மெடல் மாவட்ட இலைக்கட்சியில் கொந்தளிப்பு என்ன?… என்றார் பீட்டர் மாமா.
‘‘இலை கட்சியில் கடந்த உள்ளாட்சி தேர்தலில் வெடி தொகுதியில் நின்று 10 கவுன்சிலர்கள் வரை ஜெயித்தனர். அதன்பின் கட்சி தலைமையில் ஏற்பட்ட குளறுபடி மற்றும் ஆட்சி மாற்றத்தினால் ஜெயித்த கவுன்சிலர்கள் கட்சி மாறினர். கட்சி மாறி சென்ற கவுன்சிலர்கள் பற்றி கட்சி தலைமைக்கு தகவல் தெரிந்ததோ, தெரியவில்லையோ தெரியவில்லை. இலை கட்சியில் தற்போது ஒற்றை தலைமை ஏற்பட்டுள்ள நிலையில், போன மச்சான் திரும்பி வந்தாரு கதையாக இலை கட்சிக்குள் கொள்ளைப்புற வாசல் வழியே மீண்டும் நுழைந்து விட்டனர். திரும்பி வந்த உடனே கட்சியிலும் பொறுப்புகள் வழங்கி கவுரவப்படுத்தி விட்டனர். கட்சி மாறி சென்று ஓசை படாமல் திரும்பி வந்த விவகாரம் தெரிந்திருந்தால் தலைமை பதவி கொடுத்திருக்காதாம். ஆனால் முன்னாள் பால்வளம் தனது இஷ்டத்திற்கு, கட்சியே கதியாக இருந்தவர்களுக்கு பொறுப்பை அளிக்காமல், கட்சியில் பிரச்னை என்றதும் ஓடிச்சென்று, திரும்பி வந்தவர்களுக்கு பொறுப்பை கொடுத்திருப்பதாக இலை கட்சியினர் கொந்தளிப்பில் உள்ளனர்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘அத்துமீறும் ஆசிரியையால் பிரச்னை மேல் பிரச்னை வருகிறதாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘நெல்லை மாவட்டத்தில் நாங்குநேரி மாணவர் மீதான தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த மாணவருக்கு அரசும் ஆதரவுக்கரம் நீட்டியது. இந்நிலையில் அதே பகுதியில் அரசு பள்ளி ஆசிரியை அரங்கேற்றிய குடுமிப்பிடி சம்பவம் கல்வித்துறையை அதிர வைத்துள்ளது. அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் மாணவிகளை ஒரு ஆசிரியை கடுமையாக திட்டி மிரட்டினாராம். இதுகுறித்து அந்த பள்ளி தலைமை ஆசிரியைக்கு புகார் செல்ல, அவரோ சம்பந்தப்பட்ட ஆசிரியையை அழைத்து எச்சரித்து விளக்கமும் எழுதி வாங்கி விட்டாராம். இதை பொறுக்காத அந்த ஆசிரியை, தலைமை ஆசிரியையிடமும் மல்லு கட்டியுள்ளார். அவரது செயினை பிடித்து அறுத்து கையையும் கடித்துள்ளார். இந்த விஷயம் போலீசுக்கு தெரியவர, உடனடியாக புகாரை பெற்று அந்த ஆசிரியை மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவும் செய்யப்பட்டதாம். தற்போது அந்த ஆசிரியை மீது பள்ளிக் கல்வித்துறை துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளதாம். மாணவர்களுக்கு கல்வி, ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டிய ஆசிரியர்களே இப்படி நடந்து கொண்டால் எப்படி என கல்வித் துறையினர் ஆதங்கப்படுகின்றனர்’’ என்றார் விக்கியானந்தா.

The post பதவி கேட்டு சேலத்துக்காரருக்கு நெருக்கடி தர மாஜி மந்திரி போட்டிருக்கும் திட்டம் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Selathukkar ,wiki ,Uncle ,Peter ,Adam Budipparame ,Vellore district ,Selathukkars ,
× RELATED பூமர் அங்கிள் விமர்சனம்