
சென்னை: தமிழ்நாடு காவல் அருங்காட்சியகம் 2ம் ஆண்டு விழாவை முன்னிட்டு அஞ்சல் அட்டை மற்றும் சிறப்பு தபால் உறைகளை டிஜிபி சங்கர் ஜிவால் வெளியிட்டார். சென்னை, எழும்பூர், பாந்தியன் சாலையில் உள்ள பழைய காவல் ஆணையரக கட்டிடம் 2013ம் ஆண்டு வரை சென்னை காவல் ஆணையரகமாக, சுமார் 150 ஆண்டுகளாக இயங்கி வந்தது. 2013ம் ஆண்டு வேப்பேரியில் புதிய காவல் ஆணையரகம் திறக்கப்பட்ட பிறகு இந்த கட்டிடத்தை பாரம்பரியமிக்க கட்டிடமாகவும், சென்னை காவல்துறையின் அடையாளமாகவும் பராமரிக்க, தமிழக அரசு உத்தரவின்பேரில், சுமார் ரூபாய் 6.47 கோடி செலவில் தமிழ்நாடு காவல் அருங்காட்சியகமாக புனரமைக்கப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 28.09.2021 அன்று தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார்.
இந்நிலையில் ,தமிழ்நாடு காவல் தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், மற்றும் சென்னை காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், ஆகியோர் நேற்று எழும்பூர், காவல் அருங்காட்சியகத்தில் தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தின் 2ம் ஆண்டு நிறைவு விழாவை துவக்கி வைத்தனர். பின்னர், சென்னை காவல் சார்பில், 2ம் ஆண்டை முன்னிட்டு நடத்தப்பட்ட மாறுவேடம், பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மற்றும் காவல் சிறார், சிறுமியர் மன்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர்.
மேலும், மூத்த பொது தபால்துறை அதிகாரி, தமிழ்நாடு வட்டம், சாருகேசி, தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தின் சிறப்பு தபால் அட்டை மற்றும் தபால் உறையை வெளியிட, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில், காவல்துறை இயக்குநர்கள் ஏ.கே.விஸ்வநாதன், சீமா அகர்வால், (தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம்), தாம்பரம் காவல் ஆணையாளர் அமல்ராஜ், சென்னை காவல் கூடுதல் ஆணையாளர்கள் கபில்குமார் தலைமையிடம்), மகேஸ்வரி, (மத்திய குற்றப்பிரிவு), காவல் இணை ஆணையாளர் (தலைமையிடம்) கயல்விழி, துணை ஆணையாளர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
The post தமிழ்நாடு காவல் அருங்காட்சியகம் இரண்டாம் ஆண்டு விழா அஞ்சல் அட்டை மற்றும் சிறப்பு தபால் உறைகள் வெளியீடு appeared first on Dinakaran.