×

விஷாலிடம் சென்சார் போர்டு லஞ்சம் விசாரணை நடத்த ஒன்றிய அரசு உத்தரவு

சென்னை: சென்சார் போர்டின் லஞ்சம் குறித்து நடிகர் விஷால் வீடியோ வெளியிட்டதை அடுத்து, இதுகுறித்து விசாரிக்க ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஷால் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: நான் நடித்த ‘மார்க் ஆண்டனி’ படத்தை தணிக்கை செய்வதற்காக மும்பையில் எனது குழுவினர் விண்ணப்பித்தபோது, அதற்குரிய இடைத்தரகர் ஒருவர், படத்தை திரையிட 3 லட்ச ரூபாயும், சான்றிதழ் வழங்க 3.5 லட்ச ரூபாயும் வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளார். படத்தின் வெளியீடு செப்டம்பர் 28ம் தேதி என்று முடிவாகிவிட்டதால், வேறு வழியில்லாமல் அந்த பணத்தைக் கொடுத்து அதற்கான பணிகளை மேற்கொண்டோம்.

ஆனால், இது தவறான அணுகுமுறை, தவறான செயல் என்பதை சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன். எனது திரைப்பயணத்தில் இதுபோன்ற ஒரு சம்பவத்தை நான் எதிர்கொண்டதில்லை. நான் உழைத்து சம்பாதித்த பணம் இப்படி வீணாக சென்றதில் அதிக மன வருத்தம் கொண்டிருக்கிறேன். இந்த விஷயத்தை மகாராஷ்டிர மாநில முதல்வர் மற்றும் பிரதமர் கவனத்துக்கு கொண்டு செல்கிறேன் என தெரிவித்து இருந்தார். விஷாலின் இந்தப் புகாருக்கு ஒன்றிய தகவல் ஒலிபரப்புத் துறை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிலளித்துள்ளது.

அதில் கூறப்பட்டிருப்பதாவது: சென்சார் போர்டு ஊழல் விவகாரத்தை நடிகர் விஷால் முன்வைத்தது மிகவும் துரதிருஷ்டவசமானது. அரசாங்கம் ஊழலை சற்றும் பொறுத்துக் கொள்ளாது. இதில் யாரேனும் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து விசாரிக்க தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இன்றே மும்பைக்கு அனுப்பப்பட்டுள்ளார். jsfilms.inb@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியில் சென்சார் வாரியத்தால் துன்புறுத்தப்பட்ட நிகழ்வுகள் ஏதேனும் இருந்தால் அதைப் பற்றிய தகவலை வழங்குவதன் மூலம், அமைச்சகத்துடன் ஒத்துழைக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

The post விஷாலிடம் சென்சார் போர்டு லஞ்சம் விசாரணை நடத்த ஒன்றிய அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Union government ,Censor Board ,Vishal ,Chennai ,
× RELATED சென்சார் போர்டு லஞ்சம் விஷாலிடம் சிபிஐ விசாரணை