×

பிளாக்கில் விற்ற டிக்கெட்டுக்கு பரிசா? தமிழகத்தை சேர்ந்த 4 பேருக்கு ரூ.25 கோடி கிடைப்பதில் சிக்கல்: எதிர்ப்பு தெரிவித்து கேரள முதல்வருக்கு கடிதம்

திருவனந்தபுரம்: கேரளாவில் அரசு லாட்டரித்துறை சார்பில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கடந்த வாரம் நடந்த லாட்டரி குலுக்கலில் முதல் பரிசு ரூ.25 கோடி வாளையாரில் ஒரு கடையிலிருந்து திருப்பூரை சேர்ந்த பாண்டியராஜன் உள்பட 4 பேர் சேர்ந்து எடுத்த டிக்கெட்டுக்கு கிடைத்தது. இவர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரித் துறை அலுவலகத்தில் பரிசு விழுந்த டிக்கெட்டை ஒப்படைத்தனர். வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு பரிசு கிடைத்தால் லாட்டரி வாங்கியவர்கள் எதற்காக கேரளா வந்தார்கள் என்பது குறித்த விவரங்களை தாக்கல் செய்தால் மட்டுமே பரிசுத் தொகை கிடைக்கும்.

இதனால் இந்த வருட ஓணம் பம்பர் பரிசுத்தொகை திருப்பூரை சேர்ந்தவர்களுக்கு கிடைப்பதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உடல் நலக்குறைவு ஏற்பட்ட ஒருவரை சந்திப்பதற்கு கேரளா வந்தபோது டிக்கெட்டை எடுத்ததாக பரிசு கிடைத்தவர்கள் தெரிவித்தனர். ஆனால் அது பொய். இவர்கள் கேரளாவில் இருந்து லாட்டரிகளை வாங்கி அதை தமிழ்நாட்டில் பிளாக்கில் விற்பனை செய்தார்கள் என்றும், அதில் ஒரு டிக்கெட்டுக்குத் தான் பரிசு விழுந்தது என்றும் கூறி தமிழ்நாட்டைச் சேர்ந்த அம்புரோஸ் என்பவர் கேரள முதல்வர் பினராயி விஜயன், லாட்டரித் துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

பிளாக்கில் விற்பனை செய்த டிக்கெட்டுக்கு பரிசு கிடைத்திருப்பதால் அவர்களுக்கு பரிசுத் தொகையை கொடுக்கக் கூடாது. அதை சமூக சேவைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து கேரள அரசு லாட்டரித் துறை அதிகாரிகள் கூறியதாவது, “ வெளி மாநிலத்தினருக்கு பரிசு விழுந்தால் அவர்கள் கேரளாவுக்கு எதற்காக வந்தார்கள் என்பது உள்பட அனைத்து ஆவணங்களையும் பரிசோதித்த பின்னர் மட்டுமே பரிசுத் தொகையை கொடுக்க முடியும்” என்று தெரிவித்தனர்.

The post பிளாக்கில் விற்ற டிக்கெட்டுக்கு பரிசா? தமிழகத்தை சேர்ந்த 4 பேருக்கு ரூ.25 கோடி கிடைப்பதில் சிக்கல்: எதிர்ப்பு தெரிவித்து கேரள முதல்வருக்கு கடிதம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Kerala ,Chief Minister ,Thiruvananthapuram ,Onam festival ,
× RELATED தமிழக-கேரள எல்லையில் சீசன் நிறைவு;...