×

கனடா உடனான மோதலுக்கு மத்தியில் இந்திய – அமெரிக்க வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு: ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க மறுப்பு

வாஷிங்டன்: கனடா உடனான மோதலுக்கு மத்தியில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சரை சந்தித்து பேசினார். காலிஸ்தான் தீவிரவாதி கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கனை வாஷிங்டனில் சந்தித்து பேசினார். அப்போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேசப்பட்டதாக கூறப்பட்டது.

தொடர்ந்து ஜெய்சங்கரும், ஆண்டனி பிளிங்கனும் செய்தியாளர்களை சந்தித்தினர். அப்போது ஜெய்சங்கர் பேசுகையில், ‘இந்தியாவில் நடந்த ஜி-20 மாநாட்டிற்கு ஆதரவு அளித்த அமெரிக்காவுக்கு நன்றி’ என்றார். தொடர்ந்து ஆண்டனி பிளிங்கன் கூறுகையில், ‘கடந்த சில வாரங்களில் இந்தியாவில் நடந்த ஜி20 மாநாடு, நியூயார்க்கில் நடந்த ஐ.நா பொதுச் சபை கூட்டம் உள்ளிட்ட சந்தர்ப்பங்களில், இந்திய தலைவர்களை சந்தித்தேன். இந்திய பிரதமர் மோடியுடன் பேசுவதற்கு ஆவலுடன் உள்ளேன்’ என்றார்.

எனினும், இரு தலைவர்களும் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை. முன்னதாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறுகையில், ‘ஜெய்சங்கருடன் அவர் (பிளிங்கன்) என்ன விவாதிப்பார் என்பது குறித்து நான் எதுவும் கருத்து கூற விரும்பவில்லை. ஆனால் கனடாவின் விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வோம்’ என்றார். இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்புக்கான இந்த திட்டம், கனடாவுடனான மோதலுக்கு முந்தைய திட்டம் என்று வெளியுறவு அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post கனடா உடனான மோதலுக்கு மத்தியில் இந்திய – அமெரிக்க வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு: ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க மறுப்பு appeared first on Dinakaran.

Tags : India ,US ,Canada ,Washington ,PTI ,Foreign Minister ,Jaishankar ,
× RELATED இந்தியா கூட்டணியிலிருந்து வெளியேற பாஜக அழுத்தம்: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு