×

திருவண்ணாமலையில் 2வது நாளாக லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம்

திருவண்ணாமலை: புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் இன்று 2வது நாளாக லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் வந்தனர். பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தித்தரும் திருத்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஒவ்வொரு பவுர்ணமியன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்துவிட்டு கிரிவலம் வருகின்றனர். புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று மாலை 6.47 மணிக்கு தொடங்கி இன்று மாலை 4.34 மணிக்கு நிறைவடைவதாக அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

அதன்படி நேற்று காலையில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர். நேற்று மாலை 6 மணிக்கு பிறகு கிரிவல பக்தர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்காக அதிகரித்தது. விடியவிடிய இன்று 2வது நாளாக ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். இதனால் கிரிவலப்பாதை அமைந்துள்ள 14 கிமீ தூரமும் பக்தர்கள் வெள்ளத்தால் நிறைந்துள்ளது. கிரிவலப்பாதையில் அமைந்துள்ள அஷ்டலிங்க சன்னதிகள், அடி அண்ணாமலை கோயில், இடுக்குப் பிள்ளையார் கோயில்களை வழிபட்டபடி பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

பவுர்ணமியையொட்டி முன்னுரிமை தரிசனம், கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் தரிசன வரிசையில் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து சுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்தனர். பவுர்ணமியொட்டி தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. திருவண்ணாமலை நகரின் முக்கிய சாலைகளில் 9 தற்காலிக பஸ் நிலையங்கள் செயல்பட்டன. மேலும், வேலூர் கன்டோன்மென்ட் மற்றும் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த வழித்தடங்களில் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்கள், வேலூர் மற்றும் விழுப்புரத்தில் இருந்து சென்னை பீச் ஸ்டேஷன் வரை நீட்டிக்கப்பட்டன.

The post திருவண்ணாமலையில் 2வது நாளாக லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் appeared first on Dinakaran.

Tags : Vidiya Krivalam ,Tiruvannamalai ,Puratasi ,Vidya ,Krivalam ,
× RELATED திருவண்ணாமலை கோயில் வழக்கை சிறப்பு...