×

ஊட்டியில் 2வது சீசன் மலர் கண்காட்சி: 7500 தொட்டிகளை கொண்டு ‘சந்திரயான்-3’ வடிவமைப்பு

ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாவது சீசன் மலர் கண்காட்சியை சுற்றுலாத்துறை அமைச்சர் இன்று துவக்கி வைத்தார். 7500 பல வண்ண மலர் தொட்டிகளை கொண்டு சந்திரயான்-3 விண்கல வடிவமைப்பு சுற்றுலா பயணிகளை கவர்ந்தது. சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டு முழுவதும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் நோக்கில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசனும், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இரண்டாவது சீசனும் நடைபெறுகிறது. நடப்பு ஆண்டுக்கான இரண்டாவது சீசனுக்காக ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா உள்ளிட்ட அனைத்து பூங்காக்களும் தயார் செய்யப்பட்டன. சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்திடும் வகையில் பூங்காவின் பல்வேறு பகுதிகளிலும் சுமார் 4 லட்சம் வண்ண வண்ண மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டன.

இவை தற்போது பூத்து குலுங்குகின்றன. இவற்றை இன்று சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ வசதியாக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இரண்டாவது சீசனை முன்னிட்டு ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் காட்சி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மலர் பாத்திகளில் 4 லட்சம் மலர் செடிகளில் வண்ண வண்ண மலர்கள் பூத்து குலுங்குகின்றன. ேமலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இரண்டாம் பருவத்திற்காக டேலியா, சால்வியா, இன்கா மேரிகோல்டு, பிரெஞ்ச் மேரிகோல்டு, டெய்சி, காலண்டுலா, டயான்தஸ், பிரிமுலா, பால்சம், அஜிரெட்டம், சைக்ளமென், ஜெரோனியம், டெல்பினியம், கொச்சியா, ஆந்தூரியம் போன்ற 70 வகைகளில் 21 ஆயிரத்து 500 தொட்டிகளில் நடவு செய்யப்பட்ட மலர்கள் அலங்கார மாடங்களில் அலங்கரித்து ைவக்கப்பட்டுள்ளன.

மேலும் பசுமை தமிழகம் என்பதை வலியுறுத்தி மலர் தொட்டிகளால் ‘கோ கீரின்’ என்ற வடிவமைப்பும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் 7500 மலர் தொட்டிகளை கொண்டு புல்வெளியில் இந்தியாவின் பெருமை மற்றும் புகழினை உலகளாவிய அளவில் பறைசாற்றிய சந்திரயான்- 3 விண்கல வடிவமைப்பு, நெகிழி பைகளை தவிர்க்கும் வகையில் மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்த ஊக்குவிக்க 1000 தொட்டிகளை கொண்டு அலங்கரிக்கப்பட்ட வடிவமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இவை சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்துபடைக்கும். இவ்வாறு அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.

The post ஊட்டியில் 2வது சீசன் மலர் கண்காட்சி: 7500 தொட்டிகளை கொண்டு ‘சந்திரயான்-3’ வடிவமைப்பு appeared first on Dinakaran.

Tags : 2nd Season Flower Show ,Ooty ,Tourism Minister ,Ooty Government Botanical Garden ,
× RELATED கோடை சீசன் நடவு பணிகளுக்காக ஊட்டி...