×

மாம்பலத்தைக் கலக்கும் தோசை மன்னர்!

சென்னையின் முக்கிய பகுதிகளான தி.நகர், கோடம்பாக்கம், அசோக்நகர் மற்றும் சைதாப்பேட்டைக்கு மத்தியில் அமைந்திருக்கிறது மேற்கு மாம்பலம். இங்குள்ள ஒவ்வொரு தெருவிலும் ஏதாவது ஒரு ஸ்பெஷல் இருக்கும். அதிலும் ஆரிய கவுடா சாலையில் சுடச்சுட கிடைக்கும் போளி, நெய் முறுக்கு போன்ற அயிட்டங்கள் வெரி ஸ்பெஷல் ரகம். விழாக்காலங்களில் இந்த சாலை விசேஷமாக களைகட்டும். கார்த்திகை தீபம் என்றால் ஆரிய கவுடா சாலையை அகல் விளக்குகள் அலங்கரிக்கும். விஜயதசமி என்றால் கொலு பொம்மைகள் வீற்றிருக்கும். இப்படியொரு அழகான சாலையின் மற்றுமொரு அடையாளமாகி இருக்கிறது பாரதி டிபன் சென்டர். இந்தக்கடையின் பல வித தோசைகள்தான் அதற்கு காரணம். மொறு மொறு பக்குவத்தில் பூண்டு தோசை, புதினா தோசை, வல்லாரை தோசை, மல்லி தோசை என விதம் விதமான தோசைகள் இங்கு வரும் கஸ்டமர்களை ஈர்த்து வருகின்றன. சுமார் 15 ஆண்டுகளாக இந்தக்கடையை நடத்தி வரும் ரவிச்சந்திரன் தோசை மாமா என்றே இப்பகுதியினரால் அழைக்கப்படுகிறார். ஓர் இசைக்கருவியை இசைப்பது போல தோசைக்கல்லில் மாவை ஊற்றி, தோசையை உருவாக்கிக் கொண்டிருந்தரவிச்சந்திரனைச் சந்தித்தோம்…“அப்பா வெங்கட்ராமன் நல்ல சமையல் கலைஞர்.

சமையலில் விதம் விதமா செஞ்சி அசத்துவார். அவருகிட்ட சமையல் நுணுக்கங்களை கத்துக்கிட்டேன். அதை வச்சி சமையல் வேலைக்கு போனேன். என்னோட சமையல் எல்லோருக்கும் பிடிக்கும். இனி நாம வேற ஒருத்தர்கிட்ட வேலைக்கு போகக்கூடாது, நாமே தொழில் பண்ணணும்னு முடிவு செஞ்சேன். 1990ம் வருசத்துல ஆரிய கவுடா சாலையில தள்ளுவண்டிக்கடை ஆரம்பிச்சேன். ஆரம்பிச்சப்ப இட்லி, தோசைன்னு கொடுத்தேன். டேஸ்ட் பிடிச்சி போயி நிறைய பேரு வந்து சாப்பிட்டாங்க. ஆனா சில பேரு, அவசரமா வந்து சாப்பிடுவாங்க. ரெடி பண்ண லேட் ஆயிடுச்சின்னா போயிடுவாங்க. சாப்பாடுங்குறது நம்ம பசிக்கு மட்டுமில்ல. அது ஆரோக்கியம் சம்பந்தப்பட்டது. அவசரமா சாப்பிடக்கூடாது. அப்படி அவசரமா வரவங்களையும் நிதானமா சாப்பிட வைக்கணும். அதுக்கு என்ன பண்ணலாம்னு யோசிச்சப்ப, வித விதமா தோசை பண்ணி கொடுக்கலாம்னு தோணிச்சி. அதன்படி விதம் விதமான தோசைகளை கொடுக்க ஆரம்பிச்சேன். அதுவும் உடலுக்கு ரொம்ப ஆரோக்கியமான பொருட்களை வச்சி தோசை ரெடி பண்ணேன். நல்லா வொர்க் அவுட் ஆயிடுச்சி. இப்போ எவ்ளோ நேரம் ஆனாலும் நம்ம கஸ்டமர்ங்க வெயிட் பண்ணி சாப்பிடுறாங்க. வயிறும், மனசும் நெறஞ்சி போறாங்க’’ என தனது வெரைட்டி தோசை ஐடியா குறித்து தெரிவித்த ரவிச்சந்திரன், தொடர்ந்து பேசினார். “ஆரிய கவுடா சாலையில் விவேகாநந்தபுரம்தான் எனக்கு அடையாளம்.

சாயங்காலம் ஆயிடுச்சின்னா சாப்பிடறதுக்கு நிறைய பேரு வந்துடுவாங்க. அவுங்களுக்கு ஏத்த மாதிரி தோசைகளை தயார் பண்ணுவேன். எல்லாமே நான் ஒரு ஆளுதான். ஒன்மேன் ஆர்மி. ஆரம்பத்துல 4 இட்லி 12 ரூபாய்னு கொடுப்பேன். ஒரு தோசை 8 ரூபாய். 20 ரூபாய் இருந்தால் நம்ம கடையில தாராளமா சாப்பிட்டுட்டு போயிடலாம். இட்லி, தோசைக்கு தேவையான சட்னி, சாம்பார்லாம் தரமா தயார் பண்ணிடுவேன். தக்காளி சட்னி, தேங்காய், புதினா சட்னின்னு தரோம். அது இல்லாம சுடச்சுட சாம்பாரும் ரெடி பண்ணிடுவேன். இந்த சட்னி, சாம்பார் கூட இட்லி, தோசையை தொட்டு சாப்பிட கஸ்டமர்கள் அதிகமா வர ஆரம்பிச்சாங்க. இப்ப தோசை 50 ரூபாய்னு தரோம். இட்லி 10 ரூபாய். பொங்கல், கிச்சடி 40 ரூபாய், 3 பூரி 40 ரூபாய்னு கொடுக்கிறோம். தோசையில பூண்டு தோசை, புதினா தோசை, வல்லாரை தோசை, தக்காளி தோசை, மல்லி தோசை, ஆனியன், வெஜ் தோசை, வெஜ் ஊத்தாப்பம், பொடி தோசை, கறிவேப்பிலை தோசை, எள்ளுப்பொடி தோசை, தேங்காய்ப்பொடி தோசை, வேர்க்கடலைப் பொடி தோசை, பொடி ஊத்தாப்பம், நெய் ஊத்தாப்பம், மசால் தோசை, மைசூர் மசால் தோசை, செட் தோசை வடகறின்னு பல ரகத்துல கொடுக்குறோம். இது இல்லாம அடை, நெய் அடையும் ரெடி பண்றோம்.

இது எல்லாமே 50 ரூபாய்தான். இது இல்லாம ஒவ்வொரு நாளுக்கும் ஒரு ஸ்பெஷல் தோசை கொடுக்குறோம். திங்கள்கிழமை ராகி தோசை, செவ்வாய்க்கிழமை கம்பு தோசை, புதன்கிழமை பெசரட் (பச்சைப்பயறு) தோசை, வியாழக்கிழமை அடை அவியல்,வெள்ளிக்கிழமை மிளகு தோசைன்னு கிழமை வாரியாக ரெடி பண்றோம். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள்ல 7 டேஸ்ட் ஊத்தாப்பம்னு ஒரு வெரைட்டி ரெடி பண்றோம். இதுல வெஜ், ஆனியன், பொடி, நெய்னு 7 டேஸ்ட்ல சின்ன சின்னதா ஊத்தாப்பம் ரெடி பண்ணி கொடுப்போம். இந்த 7 ஊத்தாப்பமும் 105 ரூபாய்க்கு கொடுக்குறோம். இதோட ரவா தோசை, ஆனியன் தோசை, முந்திரி ரவா தோசை, வெஜிடபிள் மசாலா டபுள் தோசைன்னு சில ரகம் ரெடி பண்றோம். அதேபோல நெய் ரோஸ்ட், நெய் பொடி தோசை, நெய் மசால் தோசை, முந்திரி ஊத்தாப்பம், டிரை ப்ரூட் ஊத்தாப்பம்னு சில வெரைட்டி கொடுக்கிறோம். இதெல்லாம் ரூ.60தான். எல்லா வேலையும் நானேபார்த்துக்கிட்டிருந்த நிலையில எனக்கு இப்ப உடம்புக்கு கொஞ்சம் முடியாம இருக்கு. பசங்க ரெண்டு பேரும் படிச்சிட்டு வேலையில இருக்காங்க. நீங்க கஷ்டப்பட வேணாம், வீட்லயே இருங்கப்பான்னு சொல்றாங்க. ஆனா நம்மளோட டேஸ்ட்டுக்காக நிறைய பேரு தினமும் வராங்க.

அவுங்கள ஏமாத்தக்கூடாது இல்லையா? நான் ரெண்டு நாள் உடம்பு முடியலன்னு கடையைத் திறக்கலன்னா கூட என்னைப் பார்த்து விசாரிக்குறாங்க. அவுங்களுக்காகத்தான் தொடர்ந்து கடை நடத்துறேன். இப்போ ஆரிய கவுடா சாலை, பிருந்தாவன் சாலை சந்திக்கும் நான்கு முனை சந்திப்பு பக்கத்துல இருக்குற தனியார் ஸ்வீட் கடையை ஒட்டி புதுசா கடை போட்டுருக்கோம். 4 பேருக்கு வேலை தரோம். தோசை மாமா கடைன்னா சாயங்கால கடைன்னுதான் பேர் இருக்கும். இப்போ காலையிலயும் கடை இயங்குது. காலை 6.30க்கு தொடங்கி, 11 மணி வரைக்கும் கடை இருக்கும். இங்க நாங்க பயன்படுத்துற பொருள் எல்லாமே தரமானதா இருக்கும். இட்லி, தோசைக்கு தேவையான மாவை நாங்களே அரைக்கிறோம். பொங்கல், தோசைக்கு தரமான நெய்தான் பயன்படுத்துறோம். எங்களுக்கு தேவையான நெய்யை ஆவினில் வாங்குறோம். அது பத்தலன்னா கடையில முதல்தர நெய் வாங்குவோம். இங்க வர்ற கஸ்டமர்ஸ் நெய் ரோஸ்ட் அதிகமா கேப்பாங்க. அதேபோல பூண்டு தோசை, வெஜிடபிள் தோசையும் அதிகமா கேப்பாங்க. இங்க சாதாரண தொழிலாளிகள்ல இருந்து பல விஐபி வரை வராங்க. எல்லாருமே என் மேல அன்பு வச்சிருக்காங்க. எங்க மேல எந்த புகாரும் சொல்ல மாட்டாங்க. கஸ்டமர்களின் திருப்திதான் நம்மளோட வெற்றின்னு எப்பவும் நினைப்பேன். அதுதான் என்னை தொடர்ந்து இயங்க வைக்குது’’ என நெகிழ்ச்சியுடன் கூறி முடிக்கிறார் ரவிச்சந்திரன்.

– அ.உ.வீரமணி
படங்கள்: அருணாச்சலம்

The post மாம்பலத்தைக் கலக்கும் தோசை மன்னர்! appeared first on Dinakaran.

Tags : West Mambalam ,Chennai ,D. Nagar ,Kodambakkam ,Ashoknagar ,Saidapet ,Dosa ,
× RELATED சென்னையில் அச்சகத்தின் பெயரின்றி...