×

வழிபாட்டின் வேர்களைத் தேடி… பிறப்பு மற்றும் இறப்பு சார்ந்த வழிபாடுகள்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

வழிபாடு என்பது ஒரு பண்பாட்டுக் கூறாகும். பண்பாடு என்பது மானுடவியலின் இதயமாகும். இன வரைவியலும் ஆராய்ச்சியும் பண்பாடு சார்ந்தது. ஒரு இனத்தவர் மற்றொரு இனத்தின் பண்பாட்டைப் பின்பற்றும் முறையும் தற்போது வளர்ந்து விட்டது. காலங்காலமாக வழிபாட்டு முறைகளை விமர்சிக்கப்படாத விதிகளாக பண்பாட்டு விதிகளாக ஒவ்வொரு இனமும் பின்பற்றி வருகிறது. ஓர் இனத்தில் குடும்பப் பெரியவர்கள் மற்றும் ஆன்மிகப் பெரியவர்கள் மூலமாக பண்பாட்டு விதிகள் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகின்றன அல்லது கற்றுத் தரப்படுகின்றன.

வாழ்க்கைச் சிக்கல்களோடு தொடர்புடையனவாக சிந்திக்கவும் செயல்படவும் சரியான வழியைக் காட்ட இப்பண்பாட்டு விதிமுறைகளை இளைய தலைமுறையினருக்கு மூத்தவர்கள் கற்றுக் கொடுக்கின்றனர். இக்கருத்தை எட்கர் சீன் என்ற இனவரைவியல் அறிஞர் எடுத்துரைக்கின்றார். பண்பாடு என்பது கற்பிக்கப்படும் நடத்தை முறை அல்லது கற்கப்படும் நடத்தை முறை (Learnt or Taught behaviour) என்கிறார் ஒவ்வொரு பண்பாட்டு விதியும் வழிபாட்டுச் சடங்கும் ஒவ்வொருவருக்கும் முதன்முதலாக எவ்வாறு அறிமுகம் ஆகிறது, ஏன் அறிமுகம் செய்யப்படுகிறது, யாரால் கற்றுத் தரப்படுகிறது என்பதை பண்பாட்டு ஆய்வாளர்கள் ஆராயும் போது வழிபாட்டின் பல அம்சங்களும் இவ்வாறு பற்பல தலைமுறைகளாகப் பெரியவர்களால் கற்றுத் தரப்பட்டு வந்திருப்பதை உறுதி செய்கின்றனர்.

ஆதியில் தன்னைத் சுற்றிக் காணப்பட்ட, தனது மனதுக்கு இன்பம் அளித்த நறுமணம் நிறைந்த இலை தழைகளாலும் பூக்களாலும் தான் போற்றிய கடவுளுக்கு வழிபாடு செய்த சடங்கு முறை இன்று வரை மூத்தோர்களால் கற்பிக்கப்பட்ட பூஜை முறையாக ஒரு நடத்தை முறையாகத் தொடர்ந்து வருகிறது.

வழிபாட்டில் உயிர்ப் பலி

உயிருக்கு உயிர் என்ற நம்பிக்கையில் உயிர்ப்பலி கொடுக்கப்படும் ரத்த பலிச் சடங்குகள் அனைத்தும் பாரம்பரியமாக வேளாண் குடி மக்களின் பண்பாட்டுடன் இணைந்து உள்ளன என்பது இனவரைவியலாரின் (Ethnographists) கருத்தாகும். ஆடு, கோழி ஆகியவற்றைப் பலி கொடுக்கும் போது இவற்றில் ஆண்களையே பலி கொடுப்பர். கோழி என்று சொன்னாலும் சேவல் தான் பலி கொடுக்கப்படும். பெண் உயிரினம் அதன் வம்ச விருத்திக்கு உரியது என்பதால் அதனைப் பலி கொடுப்பது கிடையாது. வேளாண் சமூகம் வளமைக் கோட்பாட்டைப் (Fertility Cult) பின்பற்றுவதால் அங்கு மக்கட்பேறு என்பது அனைத்து உயிர் வகைகளிலும் முக்கியமானதாகும். இவ்வழிபாட்டு முறை கிராம தெய்வக் கோயில்களில் இன்று வரை கடைப்பிடிக்கப்படுகிறது.

சைவ உயிர்ப்பலி

ரத்தப் பலியின் போன்மைச் சடங்காக (Imitative ritual) எலுமிச்சம் பழத்தில் குங்குமம் வைத்துச் சிவப்பாகப் பிழிவதும் வண்டி வாகனங்கள் வாங்கும்போது புது பயணங்கள் தொடங்கும்போது சக்கரங்களின் பழங்களை வைத்து நசுக்குவதும் திருஷ்டி கழிப்புக்காக பூசணிக்காய்க்குள் குங்குமத்தை கொட்டி உடைத்து ரத்தம் போல சிவப்பாக சிதறடிப்பதும் இன்று நடைமுறையில் உள்ளன. இவை ரத்தத்தை போன்று ஒரு போலியான தோற்றத்தை ஏற்படுத்தும் மந்திரச் சடங்கு வழிபாட்டு முறை ஆகும். இவற்றைச் சைவ உயிர்ப் பலிகள் எனலாம்.

பிறப்பு வழிபாடுகள்

வழிபாட்டு முறைகள் தொன்மச் சம்பவங்களாக கதைகளில் இடம் பெற்றுள்ளன. கரு மரணம் என்பது நிலத்தில் புதைக்கப்படுவதை குறிக்கின்றது. நிலத்தில் புதைக்கப்படும் விதை நெல், மண்ணிலிருந்து மீண்டும் வளர்ந்து அறுவடைக்குத் தயாராகி பல நூறு நெல்மணிகளைத் தருவதால் ஒவ்வொரு நாட்டிலும் புதுப் பிறப்பு அல்லது புத்தாண்டு கொண்டாட்டம் இணைந்தோ அல்லது தனித்தனியாகவோ கொண்டாடப்படுகிறது.

பிறப்பும் விதைப்பும்

ஆடி மாதத்தில் பல ஊர்களில் முளைப்பாரி எடுத்து அம்மனை வழிபடும் மரபு உள்ளது. மீனாட்சியம்மன் கோயிலில் முளைக் கொட்டுவிழா இம்மாதத்தில் மீனாட்சிக்கு மட்டும் தனியாகக் கொண்டாடப்படும். முளைப்பாரி என்பது பயிர்களின் முளைப்பு மற்றும் விளைச்சல் குறித்து அறியும் அறிவியல் முறை. ஆடி விதைப்புக் காலம். ஆடிப்பட்டம் தேடி விதை என்பது ஆன்றோர் வாக்கு. ஆடியில் மீனாட்சி அம்மன் பூப்பெய்தியதாக விழா நடைபெறுகிறது. பூப்பு என்பது இங்கு விதைப்புக்கான தயார்நிலையைக் குறிக்கின்றது. ஆடி மாதம் பெண். தெய்வங்களுக்கு நடக்கும் விழாக்கள் பிறப்பு, விதைப்பு, முளைப்பு தொடர்பான சிறப்பு வழிபாடுகள் ஆகும்.

உலகப் பிறப்பு

வழிபாடும் கதையும் பிறப்பு அல்லது வளமை சார்ந்த வழிபாடுகளில் பெண்ணின் பிள்ளைப் பேறு சிறப்பிடம் பெறுகின்றது. உலகின் எல்லா நாடுகளிலும் பிறப்பு என்பது ஒரு விழாவாக கொண்டாடப்படுகிறது. பன்னிரு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாசி மகத்தன்று கொண்டாடப்படும் மகாமகக் குளத்தின் புண்ணிய தீர்த்தமாடல் சடங்குக்கு உலகப் பிறப்பு கதையே அடிப்படைக் காரணம் ஆகும். மகாமகக் குளத்தில் மக்கள் மேற்கொள்ளும் தண்ணீர் சடங்கு, தூய்மைப்படுத்துதல் சடங்கு, தீர்த்தக் குளியல் போன்றவற்றிற்கு காரணமாக விளங்குவது உலகப் பிறப்பு அல்லது பிரபஞ்ச உற்பத்தி பற்றிய கதையாகும். தண்ணீர் கரகம் என்பது பெண்ணின் கருப்பையைக் குறிக்கும் வளமைக் குறியீடு. குழந்தை பெறும் சக்தியின் அடையாளச் சின்னம். அண்டம் அல்லது முட்டை என்பதும் பிறப்பின் குறியீடு ஆகும்.

உலகம் அழியும் தருணத்தில் பிரம்மன் தனது படைப்பு சக்தியை அமுதக் கலசமாக இமயமலை உச்சியில் பாதுகாப்பாக வைத்தார். பிரளய காலத்தில் கடல் நீர் உயர்ந்து இமயமலை உச்சி வரை சென்றது. அப்போது படைப்பு சக்தியைத் தன்னுள் கொண்ட அமுதக் கலசம் நீரில் மிதந்து சென்று ஓரிடத்தில் நின்று விட்டது. குடம் நின்ற இடம் கும்பகோணம் ஆகும். இக்கும்பத்தை வேடன் வடிவில் வந்த சிவபெருமான், அம்பெய்து உடைக்கவும் கலச நீர் அமுதம் பெருகி மகாமகக் குளமாக வடிவெடுத்தது. வரலாறு. இங்கே உள்ள சிவனை ஆதி கும்பேஸ்வரர் என்றும் அமுதேஸ்வரர் என்றும் அழைக்கின்றனர்.

மகாமகக்குளமும் கும்பத்தின் வடிவில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இக்குளம் கிழக்கு மேற்காக நீள் சதுரமாகவும், வடகரையும் தென்கரையும் சிறிது உள்ளே வளைந்தும், கிழக்கில் குறுகியும், மேற்கில் அகன்றும் குடம் போல காட்சி அளிக்கின்றது. நீர் உள்ள குடம், கலசம், கும்பம், கரகம் ஆகியன பிறப்பை வழங்கும் அடையாளச் சின்னம் ஆகும்.

மரணம் பற்றிய தொன்மம்

ஜூலூஸ் இன மக்களிடம் மரணம் குறித்த ஒரு சுவாரஸ்யமான தொன்மக்கதை உலவுகின்றது. ஒரு நாள் கடவுள் பச்சோந்தியிடம் மக்களுக்கு சாவே இல்லை என்று ஒரு தகவலை சொல்லி அனுப்பினாராம். பச்சோந்தி அந்தத் தகவலை உடனே போய் மனிதர்களிடம் சொல்லாமல் வழியில் படுத்து உறங்கி விட்டது. இந்த இடைப்பட்ட நேரத்தில் மனம் மாறிய இறைவன் மனிதர்களுக்கு சாவு வேண்டும் என்று முடிவு செய்து பல்லியை அழைத்து ‘நீ போய் மனிதர்களுக்கு சாவு உண்டு என்று சொல்லிவிட்டு வா’ என்றார். பல்லி போய் சொல்லிவிட்டு வந்துவிட்டது.

தூங்கி எழுந்த பச்சோந்தி மனிதர்களிடம் போய் கடவுள் மக்களுக்கு சாவு இல்லை என்று சொல்லச் சொன்னார் என்று தெரிவித்தது. மக்களுக்கு ஒரே குழப்பம் இப்போதுதானே பல்லி வந்து சாவு உண்டு என்று சொன்னது, பச்சோந்தி வந்து சாவு இல்லை என்கிறதே. நமக்கு சாவு உண்டா இல்லையா என்று தமக்குள் புலம்பிக் கொண்டிருக்கும்போது பல்லி சொன்ன சொல்லே உண்மையாயிற்று. இதுவும் பல்லி சொல் அல்லது கெவுளி வாக்கு உண்மையாகும் என்று இன்று வரை நம்மிடையே இருந்து வரும் நம்பிக்கை போல மற்ற நாடுகளிலும் காணப்படுகிறது.

தொகுப்பு: முனைவர் செ. ராஜேஸ்வரி

The post வழிபாட்டின் வேர்களைத் தேடி… பிறப்பு மற்றும் இறப்பு சார்ந்த வழிபாடுகள் appeared first on Dinakaran.

Tags : Thanksgiving ,
× RELATED வனப்பகுதியில் சுற்றுலா செல்பவர்கள் கவனிக்கவும்!