×

குமரியில் தொடர் மழையால் வைக்கோல் விலை கடும் சரிவு

*ஒரு கட்டு ₹150க்கு விற்பனை

நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் மழையால் வைக்கோல் விற்பனை பாதிப்பு அடைந்துள்ளது. நல்ல காய்ந்த வைக்கோல் ஒரு கட்டு ₹150க்கு வியாபாரிகள் வாங்கிச்செல்கின்றனர்.
குமரி மாவட்டத்தில் நெல் விவசாயத்தில் கன்னிப்பூ சாகுபடி முக்கிய இடத்தை பிடிக்கிறது. கன்னிப்பூ சாகுபடி செய்யும் போது நெல்பயிரில் அதிக மகசூல் கிடைத்து வருகிறது. இதனால் அதிகமான பரப்பளவில் கன்னிப்பூ சாகுபடி நடந்து வருகிறது.

கும்பபூ சாகுபடி வருடம் தோறும் குறைந்த பரப்பளவில் நடந்து வருகிறது. குமரி மாவட்டத்தில் இந்த வருடம் கன்னிப்பூ சாகுபடி தாமதமாக தொடங்கியது. ஆனால் குளத்து பாசனத்தை பயன்படுத்தி சாகுபடி செய்யப்படும் பறக்கை பகுதியில் கடந்த ஜூன் மாதத்தில் சாகுபடி பணியை விவசாயிகள் தொடங்கி, கடந்த ஆகஸ்ட் மாவத்தில் அறுவடையும் ெசய்து முடித்தனர்.
ஆனால் மாவட்டத்தில் பிற பகுதிகளில் ஒரு சில இடங்களில் அறுவடை தொடங்கியுள்ளது. ஆனால் பெரும்பாலான பகுதியில் நெல் பயிர்கள் அறுவடைக்கு தயாராக வில்லை. இருப்பினும் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் கும்பபூ சாகுபடிக்கு ஆயத்தம் ஆகி வருகின்றனர்.

பறக்கையில் கன்னிப்பூ அறுவடையை பணியை முடித்த விவசாயிகள் தற்போது கும்பபூ சாகுபடி பணியை தொடங்கியுள்ளனர். தற்போது மாவட்டத்தில் மழை பெய்து வருவதால், அறுவடை செய்யப்படும் நெல்களை விவசாயிகள் எடுத்துக்கொண்டு, வைக்கோலை வயல்களிலேயே விடும் நிலை இருந்து வருகிறது. மழை இல்லாத நேரத்தில் அறுவடை செய்யப்படும் வைக்கோல் ஒரு கட்டு ₹100 முதல் ₹150 வரை விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் இருந்து கிடைக்கும் வைக்கோல் குறைந்த விலைக்கே விற்பனை ஆகி வருகிறது.
இது குறித்து முன்னோடி விவசாயி செண்பசேகரபிள்ளை கூறியதாவது:

குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடியின் போது பேச்சிப்பாறை அணையில் தண்ணீர் இருந்தும் சரியாக தண்ணீர் விடாததால், கன்னிப்பூ சாகுபடி தாமதமாக தொடங்கியது. சரியான நேரத்தில் பறக்கை பகுதியில் சாகுபடி நடந்தது. அங்கு அறுவடையின் போது ஒரு கோட்டை (87 கிலோ) நெல் ₹2 ஆயிரத்திற்கு கொள்முதல் செய்தனர். இதுபோல் ஒரு ஏக்கர் பரப்பளவு ெகாண்ட வயலில் இருந்து கிடைத்த வைக்கோல் ₹10 ஆயிரத்திற்கு விற்பனை ஆனது.

இதனால் பறக்கை விவசாயிகளுக்கு கன்னிப்பூ அறுவடையின் மூலம் லாபம் கிடைத்தது. தற்போது குமரி மாவட்டத்தில் பல பகுதிகளில் கன்னிப்பூ அறுவடை பணி தொடங்கியுள்ளது. ஆனால் மழை பெய்து வருவதால், வைக்கோலை எடுக்கமுடியாத நிலை இருந்து வருகிறது. ஒரு சில இடங்களில் மழை இல்லாமல் அறுவடை நடக்கும் போது வைக்கோலை கட்டி விற்பனை செய்து வருகின்றனர். நல்ல காய்ந்த வைக்கோல் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் இருந்து ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரத்திற்கு வாங்கிச்செல்கின்றனர்.

ஈரப்பதம் இல்லாத நெல் ஒரு கோட்டை ₹1700 முதல் ₹1750 வரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஈரப்பதம் உள்ள நெல்லை ₹1400 முதல் ₹1500 வரை வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். மழையின் காரணமாக விவசாயிகள் வைக்கோலை விற்பனை செய்ய முடியாத நிலை இருந்து வருவதால், வயலிலேயே உரமாக பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

The post குமரியில் தொடர் மழையால் வைக்கோல் விலை கடும் சரிவு appeared first on Dinakaran.

Tags : Kumari ,Nagercoil ,Kumari district ,Dinakaran ,
× RELATED குமரி முழுவதும் பரவலாக மழை பெருஞ்சாணி...