×

புதிய ஆயக்கட்டு பாசன பகுதிக்கு ஆழியார் அணையிலிருந்து 11ம் தேதி தண்ணீர் திறக்க நடவடிக்கை

*அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையில் முடிவு

பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புதிய ஆயக்கட்டு பாசன பகுதிக்கு வருகிற 11ம் தேதி முதல் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக, அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணையிலிருந்து புதிய ஆயக்கட்டு,பழைய ஆயக்கட்டு பாசன பகுதிக்கும்,குடிநீர் தேவை மற்றும் கேரள மாநில பகுதிக்கும் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நாட்களில் ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுகிறது.இந்த ஆண்டில், பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கும்,வழியோர கிராமங்களின் குடிநீர் தேவைக்கும், கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்திலிருந்து ஆழியார் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

இதற்கிடையே, ஆழியார் அணையிலிருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்துக்குட்பட்ட பகுதி விளைநிலங்களுக்கு, வழக்கம்போல் அக்டோபர் மாதம் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் நேற்று, பொள்ளாச்சியில் உள்ள பிஏபி தலைமை அலுவலகத்தில், புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுப்பதற்கான கோரிக்கை குறித்து, பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் எடுத்துரைத்தனர்.

அதன்பின் ஆழியார் அணையிலிருந்து புதிய ஆயக்கட்டு பாசன பகுதிக்கு தண்ணீர் திறப்பது எப்போது என்பது குறித்த கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு, பிஏபி தலைமை கண்காணிப்பு பொறியாளர் (பொறுப்பு) பாண்டி தலைமை தாங்கினார், ஆழியார் நீர்தேக்க திட்டக்குழு தலைவர் செந்தில் மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன பகுதி விவசாயிகள் பலரும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின்போது விவசாயிகள் கூறுகையில்:ஆழியார் அணையிலிருந்து புதிய ஆயக்கடடு பாசனத்துக்கு தண்ணீர் பெறப்படுவது வழக்கமாக உள்ளது. ஆனால் இந்த ஆண்டில் போதிய மழையில்லாததால், ஆழியார் அணையின் நீர்மட்டம் சரிவை நோக்கி சென்றுள்ளது. இருப்பினும், புதிய ஆயக்கட்டு பாசனத்திற்குட்பட்ட விளைநிலங்களுக்கு தண்ணீர் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர் திறப்பதற்கு முன்பாக, காடம்பாறை அல்லது பரம்பிக்குளம் பகுதியிலிருந்து போதிய தண்ணீர் கொண்டு வந்து சேமிப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘புதிய ஆயக்கட்டு பாசனத்தில் உள்ள ஏ மண்டலமான பொள்ளாச்சி,சேத்துமடை, பீடர் கால்வாய் மற்றும் பி மண்டலமான வேட்டைக்காரன்புதூர் கால்வாயில் திறக்கப்படும் தண்ணீர் மூலம் சுமார் 22 ஆயிரத்து 320 ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெறுகிறது. இந்த முறை, பருவமழை எதிர்பார்த்த அளவில் இல்லாததால்,ஆழியார் அணையின் நீர்மட்டம் மிகவும் சரிந்தது. புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் திறக்கப்படும் தண்ணீர், சுமார் 75 நாட்களுக்கு மேல் குறிப்பிட்ட இடைவெளி விட்டு தண்ணீர் திறப்பு இருக்கும்.

ஆனால் இந்த முறை ஆழியார் அணையில் உள்ள நீர்இருப்பை பொறுத்து தண்ணீர் திறக்கப்படுகிறது. அதன்படி, இந்த முறை புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு வரும் 11ம் தேதி தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். நீர் இருப்பு குறைவால், தண்ணீர் திறப்பு 30 நாட்கள் மட்டுமே இருக்கும். அதற்கான அரசாணை உத்தரவு பெற்று தண்ணீர், புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதற்கபான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

The post புதிய ஆயக்கட்டு பாசன பகுதிக்கு ஆழியார் அணையிலிருந்து 11ம் தேதி தண்ணீர் திறக்க நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Aliyar dam ,Ayakattu ,Pollachi ,Anaimalai ,New Ayakatu Irrigation Area ,
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!