×

மருத்துவக் கல்வி உரிமைகளைக் காக்க தமிழக அரசு குரல் கொடுக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: மருத்துவக் கல்வி உரிமைகளைக் காக்க தமிழக அரசு குரல் கொடுக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தேசிய மருத்துவ ஆணையம் வகுத்திருக்கும் புதிய விதிகளின்படி, தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளும், அவற்றில் உள்ள மாணவர் சேர்க்கை இடங்களும் தேவைக்கும் அதிகமாக இருப்பதால், அடுத்த ஆண்டுமுதல் புதிய மருத்துவக் கல்லூரிகளை திறக்கவும், மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்கவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. உலகம் முழுவதும் மருத்துவக் கல்விக் கட்டமைப்புகளை அதிகரிக்க வேண்டும் என்ற குரல்கள் ஒலித்து வரும் நிலையில், மருத்துவ ஆணையத்தின் புதிய விதி மிகவும் பிற்போக்கானது.

மத்திய அரசிதழில் ஆகஸ்ட் 16-ஆம் நாள் வெளியிடப்பட்டுள்ள இளநிலை மருத்துவக் கல்விக்கான தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய விதிமுறைகளில், 10 லட்சம் மக்கள்தொகைக்கு அதிகபட்சமாக 100 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும், அதற்கும் கூடுதலான மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ள மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளோ, மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களோ அனுமதிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் இந்த விதிமுறைகள் தமிழகம் போன்ற வளர்ந்த மாநிலங்களையே பாதிக்கும்.

2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் மக்கள்தொகை 7.23 கோடி ஆகும். 2021-ஆம் ஆண்டில் இது 7.64 கோடியாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இந்த மக்கள்தொகைக்கு தமிழ்நாட்டில் அதிக அளவாக 7,640 மாணவர் சேர்க்கை இடங்கள் மட்டுமே இருக்க முடியும். ஆனால், தமிழ்நாட்டில் இன்றைய நிலையில், 11,600 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ளன. அதனால், இன்னும் பல பத்தாண்டுகளுக்கு தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க முடியாது; அதுமட்டுமின்றி இப்போது இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் இடங்களையும் ஏற்படுத்த முடியாது. புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய தென்மாநிலங்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும்.

தேசிய மருத்துவ ஆணையத்தின் இந்த நடவடிக்கை சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அதிகளவில் மருத்துவர்கள் உருவாக்கப்பட்டால், எதிர்காலத்தில் மருத்துவர்களுக்கு வேலை கிடைக்காது என்பதால் தான் இந்த புதிய கட்டுப்பாட்டைக் கொண்டு வந்திருப்பதாக தேசிய மருத்துவ ஆணையம் கூறுகிறது. இது அனைத்து அம்சங்களையும் ஆராயாமல் எடுக்கப்பட்ட குறைநோக்கு பார்வை கொண்ட நடவடிக்கை ஆகும். தமிழ்நாட்டில் 11,600 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் இருந்தாலும் கூட, அந்த இடங்கள் அனைத்திலும் படிப்பவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல.

தமிழகத்தில் உள்ள 12 நிகர்நிலை மருத்துவப் பல்கலைக்கழகங்களில் உள்ள 2500 இடங்கள், அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும் 783 இடங்கள், தனியார் கல்லூரிகளில் கடைசி நேரத்தில் நிர்வாகத்தால் நிரப்ப அனுமதிக்கப்படும் இடங்கள் ஆகியவற்றை சேர்த்தால் கிட்டத்தட்ட 4,000 இடங்களில் யாரை வேண்டுமானாலும் சேர்க்க முடியும். அந்த இடங்களில் பெரும்பாலும் பிற மாநில மாணவர்கள்தான் சேருகின்றனர். அதனால், அந்த இடங்கள் அனைத்தையும் தமிழகத்தின் கணக்கில் சேர்க்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

 

 

 

The post மருத்துவக் கல்வி உரிமைகளைக் காக்க தமிழக அரசு குரல் கொடுக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Ramadas ,Chennai ,Tamil Nadu government ,National Medical Commission ,Dinakaran ,
× RELATED மழை, வெள்ள நிவாரண பணிகளில் அரசு முழு...