*சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை பூங்கா பகுதியில் அமைந்துள்ள பாலம் அடிக்கடி தண்ணீரில் முழ்குவதால், சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆண்டிபட்டி அருகே வைகை அணை அமைந்துள்ளது. இந்த அணைப்பகுதியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அழகான பூங்கா பகுதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வைகை அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் குடிநீருக்கும், விவசாயத்திற்கும் முக்கிய பங்களித்து வருகிறது. இதற்கு அடுத்தப்படியாக அணைப் பகுதியில் உள்ள பூங்கா சுற்றுலா பயணிகளின் பொழுதுபோக்கில் முக்கிய பங்கு வகிக்கிறது. மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தலமாகவும் இந்த பூங்கா விளங்கி வருகிறது.
இந்த பூங்காவிற்கு தேனி மாவட்டம் மட்டுமல்லாமல் மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆயிரகணக்கில் உள்ளது. பூங்காவில் வலது கரை பூங்கா, இடது கரை பூங்கா என பிரிக்கப்பட்டு ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த இரு கரைகளையும் இணைப்பதற்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அணையின் மதகு பகுதியில் தண்ணீர் வெளியேறும் இடத்தில் இந்த பாலம் உள்ளது.
இந்த பாலம் தாழ்வானதாக இருக்கிறது. இதனால் வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக அதிகப்படியான தண்ணீர் வெளியேற்றப்படும் போதும், அணையின் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படும் போதும் இந்த பாலம் தண்ணீரில் மூழ்கி விடுகிறது. அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டால் இந்த பாலத்தை சுற்றுலா பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை தொடர்ந்து வருகிறது. அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும் போதெல்லாம் மதகுப்பகுதிக்கு முன்பாக இருக்கும் இரண்டு கரைகளை இணைக்கும் பாலம் தண்ணீரில் மூழ்கி வருகிறது. பாலத்திற்கு மேல் தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்வதால் இந்த பாலத்தை கடக்க முடியாது. சுற்றுலா பயணிகள் மறு கரைப்பகுதிக்கு சென்று சுற்றி பார்ப்பதில் சிரமம் ஏற்படுகிறது.
பாலத்திற்கு மேல் தண்ணீர் செல்லும் போது பொதுப்பணித்துறையினர் பாலத்தை சுற்றுலா பயணிகள் கடக்க கூடாது என்று இரண்டு கரை பகுதிகளிலும் தடுப்புகளை வைத்துவிடுவார்கள். இதனால் சுற்றுலா பயணிகள் வலது கரையில் இருந்து இடது கரைக்கும், இடது கரையிலிருந்து வலது கரைக்கும் பாலம் வழியாக செல்ல முடியாது.சுற்றுலா பயணிகள் பூங்காவை சுற்றிப்பார்க்க வசதியாக இரண்டு கரை பகுதிகளிலும் நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது.
ஒரு பகுதியில் நுழைவு கட்டணம் செலுத்தினால் இரண்டு பகுதிகளில் உள்ள பூங்காவை சுற்றி பார்க்கலாம். இதற்காகத்தான் இரண்டு கரை பகுதிகளை இணைக்க பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பாலத்திற்கு மேல் தண்ணீர் அதிகமாக சென்றால் வைகை அணை பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் பூங்காக்களை முழுமையாக சுற்றிப் பார்க்க முடியாமல் தவித்து வருகின்றனர். ஒரு கரை பூங்கா பகுதியை மட்டும் பார்த்துவிட்டு மற்றொரு கரை பூங்கா பகுதிக்கு செல்ல அவர்கள் அணைக்கு வெளியே வந்து சாலையின் வழியாக சுமார் 2 கி.மீ தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது.
வைகை அணை பூங்காவில் இரண்டு கரைகளை இணைக்கும் பாலத்திற்கு மேல் அடிக்கடி தண்ணீர் சென்று கொண்டிருப்பதால், பாலம் தண்ணீரில் மூழ்கி சேதமடைகிறது. தண்ணீரில் முழ்குவதால் பாலத்தில் உள்ள தடுப்பு கம்பிகளும் சேதமடைகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது.
வைகை அணையில் தண்ணீர் திறக்கும் போதெல்லாம் இந்த நிலை ஏற்படுகிறது. பருவமழை காலங்களில் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரால் பாலத்தை கடந்து செல்ல முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.எனவே சுற்றுலா பயணிகளின் சிரமத்தை குறைக்க இரண்டு கரைகளை இணைக்கும் தரைப் பாலத்தை அகற்றிவிட்டு அதே இடத்தில் உயர்மட்ட பாலம் அமைக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறியதாவது: நாங்கள் விடுமுறை நாட்களில் மிகவும் சந்தோஷமாக குடும்பம், குடும்பமாகத்தான் வைகை அணை பூங்காவை சுற்றிபார்க்க வருகிறோம். அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டால் பாலத்திற்கு மேல் தண்ணீர் செல்கிறது. அப்போது இடது கரை வழியாக பூங்காவிற்குள் செல்லும் நாங்கள் வலது கரைப்பகுதிக்கு செல்ல முடியாமல் போகிறது.
ஆனால் வலதுகரை பூங்காவில் தான் சிறுவர்களுக்கு தேவையான பொழுதுபோக்கு அம்சங்கள் அமைந்துள்ளது.
இடது கரை பூங்காவை சுற்றி பார்த்துவிட்டு வலது கரை பூங்காவிற்கு செல்ல வேண்டுமென்றால் அணையை விட்டு வெளியே சென்று சாலை வழியாக நீண்ட தூரம் சுற்றிக்கொண்டுதான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, பூங்காவின் இரு கரைகளையும் இணைக்கும் பாலத்தை உயர்மட்ட பாலமாக அமைக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.
The post ஆண்டிபட்டி அருகே அழகுமிளிர அமைந்துள்ள வைகை அணை பூங்காவில் உயர்மட்ட பாலம் தேவை appeared first on Dinakaran.