×

திருப்பூர், கோவை மாவட்டத்தில் ரூ.1,000 கோடி மதிப்பிலான விசைத்தறி ஜவுளி தேக்கம்

*உலக வர்த்தகம் பாதிப்பு

பல்லடம் : உலக வர்த்தக பாதிப்பால் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு துணி விற்பனை பாதிப்படைந்து திருப்பூர், கோவை மாவட்டத்தில் ரூபாய் ஆயிரம் கோடி மதிப்பிலான விசைத்தறி காடா துணி விற்பனை ஆகாமல் தேக்கம் அடைந்துள்ளது.திருப்பூர், கோவை மாவட்டத்தில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள், இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். உலக வர்த்தக பாதிப்பால் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு துணி விற்பனை பாதிப்படைந்து திருப்பூர், கோவை மாவட்டத்தில் ரூபாய் ஆயிரம் கோடி மதிப்பிலான விசைத்தறி காடா துணி விற்பனை ஆகாமல் தேக்கம் அடைந்துள்ளது.

இது குறித்து திருப்பூர் மாவட்ட விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் கரைப்புதூர் சக்திவேல் கூறியதாவது: உலக வர்த்தகம் பாதிப்பால் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு துணி விற்பனை பாதிப்படைந்துள்ளது. வட மாநிலங்களில் இருந்துதான் வர்த்தகர்கள் அதிக அளவில் தமிழ்நாட்டில் இருந்து காடா துணிகளை கொள்முதல் செய்து வந்தனர். தற்போது அது குறைந்துள்ளது. குஜராத், மகாராஷ்ட்டிரா, மத்தியபிரதேஷ், உத்தரபிரதேஷ் உள்ளிட்ட வட மாநிலங்களில் புதிய ஜவுளி கொள்கை ஏற்படுத்தி துணி உற்பத்தி கூடங்களுக்கு என்று தனியாக மின் கட்டண சலுகை டேரிப் அமைத்து மிக குறைந்த மின் கட்டணம் வசூல் செய்கின்றனர். மேலும் நவீன விசைத்தறிகள் வாங்க 50 சதம் முதல் 70 சதம் வரை மானியம் வழங்குகின்றனர்.

குறைந்த கூலியில் தொழிலாளர்களும் கிடைக்கின்றனர். அந்த மாநிலங்களில் தொழில் தொடங்க தேவையான உதவிகளை அதற்கு என்று அதிகாரிகள் குழுவை அமைத்து உதவிகளை வட மாநில அரசுகள் செய்து தருகின்றன. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இருந்து பெரிய நிறுவனங்கள் தங்களது விசைத்தறி துணி உற்பத்தி கூடங்களை வட மாநிலங்களுக்கு இடத்தை மாற்றி சென்று விட்டனர். மேலும் சென்றவண்ணம் உள்ளனர். குஜராத், மகாராட்டிரா மாநிலங்களில் ஒரு யூனிட் மின் கட்டணம் ரூ.4.65 பைசா முதல் ரூ.5 வரை மட்டுமே உள்ளது.

அதே சமயம் தமிழ்நாட்டில் ஒரு யூனிட் ரூ.7.45 பைசா முதல் ரூ.8 ஆக உள்ளது. வட மாநிலங்களில் துணி உற்பத்தி செலவு குறைவாக இருப்பதால் அவர்கள் காடா துணி ஒரு மீட்டர் ரூ. 50க்கு கொடுக்க முடிகிறது. அதே சமயம் தமிழ்நாட்டில் உற்பத்தி செலவு அதிகமாக இருப்பதால் ஒரு மீட்டர் ரூ.53க்கும் மேலாக விலை வைத்துதான் கொடுக்க முடிகிறது. இதனால் உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமே போட்டி போட முடியாத நிலையில் வெளிநாட்டுகளில் நிலவும் வர்த்தக போட்டியை சமாளித்து துணி ஏற்றுமதி செய்வது என்று நாங்கள் திணறி வருகிறோம்.

உலக வர்த்தக பாதிப்பால் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு துணி விற்பனை பாதிப்படைந்து கடந்த 5 மாதத்தில் திருப்பூர், கோவை மாவட்டத்தில் ரூபாய் ஆயிரம் கோடி மதிப்பிலான விசைத்தறி காடா துணி விற்பனை ஆகாமல் தேக்கம் அடைந்துள்ளது. தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை குறைக்க வேண்டும். புதிய ஜவுளி கொள்கை அமைத்து விசைத்தறி தொழில் வளர்ச்சிக்கு என்று தனியாக அதிகாரிகள் குழுவை அமைத்து ஆராய்ந்து மானியம், வங்கி கடன் உதவி உள்ளிட்ட தேவையானவற்றை கண்டறிந்து அவற்றை செய்து கொடுத்தால் விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழில் பழையபடி மீண்டும் புத்தூயிர் பெறும்.

ஒன்றிய, மாநில அரசுகள் உள்நாட்டில் ஜவுளித் தொழில் சீராகும் வரை நூல், கழிவுப்பஞ்சு மற்றும் பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும். வெளிநாட்டில் இருந்து பஞ்சு இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரியை ரத்து செய்ய வேண்டும். ஆண்டு முழுவதும் நூல் விலை சீராக இருக்கும் வகையில் நூல் விலையை அரசு கட்டுப்படுத்த வேண்டும். வரி இல்லா நூல் இறக்குமதி சலுகை அளிக்க வேண்டும். வங்கதேசத்தில் இருந்து குறைந்த விலையில் துணி இறக்குமதி செய்யப்படுகிறது. அதனை தடுக்கும் வகையில் துணி ரகங்கள் இறக்குமதிக்கு அதிக வரி விதிக்க வேண்டும். மெய் நிகர் வர்த்தகம் என்னும் இணையதள வர்த்தகத்தில் இருந்து பஞ்சுவை நீக்கம் செய்திட வேண்டும். தமிழ்நாட்டில் முன்பு அதிக அளவில் பருத்தி சாகுபடி நடைபெற்று வந்தது. தற்போது மிக குறைந்த அளவே பருத்தி சாகுபடி உள்ளது.

அதனால் வெளிமாநிலங்களில் இருந்து பஞ்சு கொள்முதல் செய்து எடுத்து வரவேண்டியது உள்ளது. அதனை தவிர்க்க தமிழ்நாட்டில் பருத்தி சாகுபடி பரப்பை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசு நூல் கொள்முதல் கமிட்டி அமைத்து பஞ்சை கொள்முதல் செய்து ஆண்டு முழுவதும் சீரான விலையில் தொழில் துறையினருக்கு கிடைக்க செய்ய வேண்டும். ஒன்றிய அரசின் பஞ்சு சேமிப்பு கிடங்கில் இருந்து இருப்பு வைக்கப்பட்டுள்ள பஞ்சுயை உள்நாட்டு தேவைக்கு மானிய விலையில் விற்பனை செய்ய வேண்டும். எப்போதும் உள்நாட்டு தேவை போக மீதம் ஆகும் உபரி பஞ்சு, நூல்களை மட்டுமே ஏற்றுமதி செய்ய வேண்டும்.

பிளாஸ்டிக் பைகளை முழுமையாக ஒழித்திட அதனை தயாரிக்கும் ஆலைகளின் உரிமத்தை ரத்து செய்திட வேண்டும். இயற்கை பருத்தி இழைகளால் உற்பத்தி செய்யப்பட்ட காடா துணி பைகள் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும். மீண்டும் மஞ்சள் பை திட்டம் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அதனை ஒரு புரட்சி இயக்கமாக நடத்தி நாட்டுகே முதன்மை மாநிலமாக தமிழகத்தை திகழ செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம். பள்ளி, கல்லூரி, காவல் துறை, தீயணைப்பு துறை உள்ளிட்ட சீருடைகளை விசைத்தறி துணி ரகங்களை பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

The post திருப்பூர், கோவை மாவட்டத்தில் ரூ.1,000 கோடி மதிப்பிலான விசைத்தறி ஜவுளி தேக்கம் appeared first on Dinakaran.

Tags : Tiruppur, Govay district ,World Trade Impact Palladam ,Thiruppur ,Tiruppur, Goa District ,Tiruppur, Goi District ,
× RELATED நீலகிரியில் கனமழையால் பவானி ஆற்றில் தண்ணீர் வரத்து