
சென்னை: சென்னையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகையை 10 ஆயிரம் வரை உயர்த்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் தலைமையில் நடைபெற்ற மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பகுதிகளில் கால்நடை வளர்ப்போர் மாடுகளை சாலைகளில் சுற்றித்திரிய விடுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு பொதுமக்கள் காயமடையும் நிலை ஏற்படுகிறது. சாலையில் திரியும் மாடுகள் திடீரென மிரண்டு, ஆக்ரோஷத்துடன் பொதுமக்களை முட்டி காயப்படுத்தும் சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறி வந்தன.
இதையடுத்து, மாடுகள் சாலையில் திரிந்தால் அதன் உரிமையாளர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது. இதை கண்டுகொள்ளாத மாடுகளின் உரிமையாளர்கள், தங்களின் மாடுகளை சாலையில் திரிய விடுவது தொடர்கிறது. சாலைகள், பொதுஇடங்களில் பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக சுற்றித் திரியும் மாடுகளுக்கு தற்போது 2 ஆயிரம் ரூபாய் வரை உரிமையாளரிடம் அபராதம் வசூலிக்கப்படுகிறது.
இந்த நிலையில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் தடுக்க மாடுகளின் உரிமையாளர்களிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் அபராதம் தொகையை 10 ஆயிரமாக உயர்த்த மாநகராட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. மாடு முதல்முறையாக பிடிக்கப்பட்டால் ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும், மீண்டும் பிடிக்கப்பட்டால் 10 ஆயிரம் ரூபாயும் அபராதமாக வசூலிக்கப்படவுள்ளது. ஜனவரி மாதம் முதல் தற்போது வரை சாலையில் சுற்றித் திரிந்த மொத்தம் 3468 மாடுகள் பிடிக்கப்பட்டு 65 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், மன்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சென்னையில் சாலைகள், பொது இடங்களில் மாடுகள் திரிந்தால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும்: சென்னை மாநகராட்சி தீர்மானம் appeared first on Dinakaran.