×

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் அரவை இயந்திரத்தில் சிக்கி வாலிபரின் கை, கால்கள் துண்டிப்பு

மதுக்கரை : வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் அரவை இயந்திரத்தில் சிக்கியதில் வாலிபரின் கை, கால்கள் துண்டாகின.கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் வெள்ளலூர் குப்பைக்கிடங்கிற்கு கொண்டு சென்று சேகரிக்கப்பட்டு மட்கும் குப்பை, மட்காத குப்பை எனதரம் பிரிக்கப்பட்டு வருகிறது.

சுமார் 650 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள கிடங்கில் பல லட்சம் டன் குப்பைகள் குவிந்துள்ளது. மாநகராட்சி சார்பில் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் விடப்பட்டு இந்த குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு வருகிறது. மேலும் கிடங்கின் ஒரு பகுதியில் குப்பைகளை தரம் பிரித்து பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகள் அரவை செய்யும் நிறுவனமும் செயல்பட்டு வருகிறது. ராட்சத இயந்திரங்கள் மூலம் குப்பைகள் அரவை செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

நேற்று காலை வழக்கம்போல கோணவாய்க்கால் பாளையத்தை சேர்ந்த சத்யா (23) மற்றும் வடமாநில இளைஞர் ஒருவர் குப்பைகளை அரவை செய்யும் பணிகளை செய்து கொண்டிருந்தனர்.
திடீரென இயந்திரம் நின்றதால் சத்யா இயந்திரத்தில் ஏறி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது திடீரென இயந்திரம் இயங்கியது. இதில் சத்யாவின் 2 கால்கள் மற்றும் வலது கை இயந்திரத்தில் சிக்கி கை, கால்கள் துண்டாகி மயங்கி விழுந்தார். இதையடுத்து இயந்திரம் நிறுத்தப்பட்டு தீயணைப்பு துறையினர் உதவியுடன் சத்யா மீட்கப்பட்டு, தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் தொடர்பாக போத்தனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாநகராட்சியில் ஒப்பந்தம் எடுத்துள்ள தனியார் நிறுவனங்களில் அலட்சியத்தால் தொழிலாளர்கள் உயிரிழப்பு நடப்பதாகவும், இதுவரை நடந்த 4 விபத்துகளில் 3 பேர் உயிரிழந்ததாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். போதிய பாதுகாப்பை தொழிலாளர்களுக்கு ஒப்பந்தம் எடுக்கும் நிறுவனங்கள் அளிப்பதில்லை எனக் கூறப்படுகிறது.

The post வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் அரவை இயந்திரத்தில் சிக்கி வாலிபரின் கை, கால்கள் துண்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Vellalur ,Madhukarai ,Coimbatore ,
× RELATED குப்பை கிடங்கில் தண்ணீர் தெளிக்க உத்தரவு