×

மாவட்ட ஆட்சியர் தலைமையில் விசாரணை காவல் நிலையத்தில் தீக்குளித்த பெண் சாவு

*₹20 லட்சம் இழப்பீடு- முதல்வர் ரங்கசாமி உத்தரவு

புதுச்சேரி : புதுச்சேரி பிள்ளைச்சாவடி மீனவர் பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (38), இவரது மனைவி கலைச்செல்வி (35). இவர்களிடம் அதேபகுதியை சேர்ந்த ஏழுமலை ரூ.5 லட்சம் கடன் வாங்கினார். கடன் தொகையை திருப்பி கேட்டபோது, ஏழுமலை காலம் கடத்தினார். நேற்று முன்தினம் சந்திரன் தனது மனைவி கலைச்செல்வியுடன் ஏழுமலை வீட்டுக்கு சென்று கடன் தொகையை திருப்பி கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து தன்னை மிரட்டுவதாக ஏழுமலை காலாப்பட்டு போலீசில் முறையிடவே, இதுதொடர்பான விசாரணைக்காக தம்பதியை காவல் நிலையம் அழைத்தனர்.
அப்போது, சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என எச்சரிக்கவே ஆத்திரமடைந்த கலைச்செல்வி, போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக கூறி அங்கு பைக்கில் இருந்த பெட்ரோலை எடுத்து தன் மீது ஊற்றி தீக்குளித்தார். ஜிப்மரில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக எஸ்ஐ இளங்கோ, ஏஎஸ்ஐ நாகராஜ் ஆகியோர் அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். முன்னதாக அவரிடம் மாஜிஸ்திரேட் மரண வாக்குமூலம் பெற்றார்.

அப்போது போலீசாரின் நடவடிக்கைகள் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாக தெரிகிறது. கலைச்செல்வி இறந்த தகவலை கேள்விப்பட்ட சந்திரனும், உறவினர்களும் சோகத்தில் கதறி அழுதனர். பிள்ளைச்சாவடி கிராமமே சோகத்தில் மூழ்கியது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதற்கிடையே காவல் நிலையத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக சீனியர் எஸ்பி நாரா சைதன்யா உத்தரவின்பேரில் துறை ரீதியான விசாரணையை நடந்து வருகிறது. கலைச்செல்வியின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள் நேற்று மதியம் காலாப்பட்டு தொகுதி எம்எல்ஏ கல்யாணசுந்தரம் தலைமையில் ஊர் பஞ்சாயத்தாரர்கள் மற்றும் பொதுமக்கள் சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்தனர்.

கலைச்செல்வி குடும்பத்துக்கு ஒரு கோடி நிதி, அரசு வேலை வழங்க வேண்டும் மற்றும் போலீசார் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முறையிட்டனர். இது தொடர்பாக 2 நாட்களில் முடிவு எடுக்கப்படும் என முதல்வர் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சட்டசபை வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ரூ. 20 லட்சம் நிவாரணம் மற்றும் போலீசார் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.

இதற்கிடையே வெளியே போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சட்டசபை காவலர்கள், அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியே அனுப்பினர். அப்போது பொதுமக்கள் சபை காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் கல்யாணசுந்தரம் எம்எல்ஏ அவர்களை சமாதானப்படுத்தி கலைந்து போக செய்தார். மாவட்ட ஆட்சியர் தலைமையில் விசாரணை நடத்தப்படும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ. 20 லட்சம் நிவாரணம் வழங்குவதாக முதல்வர் உறுதியளித்ததை தொடர்ந்து, பெண்ணின் சடலத்தை பெற்றுக்கொண்டு அடக்கம் செய்ய பஞ்சாயத்தார் ஏற்றுக்கொண்டனர்.

ஏழுமலை கைது

கலைச்செல்வி தீக்குளித்து உயிரிழந்த விவகாரத்தில், ரூ. 5 லட்சம் கடன் வாங்கிவிட்டு ஏழுமலை திரும்ப செலுத்தாமல் இருந்து வந்ததும், மேலும் அவர் கலைச்செல்வியை தற்கொலைக்கு தூண்டும் வகையில் அவதூறாக பேசியதாக தெரியவந்துள்ளது. அதன்படி ஏழுமலை மீது பிணையில் வெளியில் வர முடியாதபடி 506, 500(2) பிரிவின் கீழ் காலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்துள்ளனர்.

The post மாவட்ட ஆட்சியர் தலைமையில் விசாரணை காவல் நிலையத்தில் தீக்குளித்த பெண் சாவு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Rangasamy ,Puducherry ,Chandran ,Puducherry Pillichavadi ,
× RELATED முதல்வர் ரங்கசாமிக்கு கடிதம் எழுதி...