- Ampur
- சத்ரா
- கே.எம்
- திருப்பத்தூர் தூய மார்பு கல்லூரி
- மோஹங்கந்தி
- வாடியாம்பாடி இசுலாமியாக் கல்லூரி தமிழ் தாது
- சிவராஜி
- தின மலர்
திருப்பத்தூர்: திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் க. மோகன்காந்தி, வாணியம்பாடி இசுலாமியாக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் ப.சிவராஜி, ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குநர் வெங்கடேசன், காணிநிலம் மு.முனிசாமி ஆகியோர் மேற்கொண்ட கள ஆய்வில் புலிக்குத்திப்பட்டான் நடுகல் ஒன்றைக் கண்டறிந்துள்ளனர்.
இதுகுறித்து பேராசிரியர் க.மோகன் காந்தி கூறியதாவது:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வட்டத்திற்கு உட்பட்ட கீழ் முருங்கை கிராமத்தில் உள்ள ஞானமலைக்குத் தெற்கு மலைப் பகுதியில் மலையப்பன் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் துரிஞ்சி மரங்களுக்கடியில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது. இத்தெய்வத்தைப் பொதுமக்கள் மலையப்பன் சுவாமி என்று கூறுகின்றனர். ஆனால் இத்தெய்வம் கி.பி 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த விஜய நகரக் காலத்துப் புலிக்குத்திப்பட்டான் நடுகல்லாகும். இக்கோயிலின் கிழக்கு, மேற்கு, தெற்கு என மூன்று பக்கங்களிலும் மலைகள் சூழ்ந்துள்ளன. வடக்குத் திசையில் சிறிய கானாறு ஒன்று ஓடுகிறது.
மலைகளும், காடுகளும், ஓடைகளும் சூழ்ந்த இயற்கை சார்ந்த இந்தப் பகுதியில் கி.பி. 16ம் நூற்றாண்டு வாக்கில் கொடிய புலிகள் வாழ்ந்துள்ளன. ஊருக்குள் புகுந்து மக்களையும், ஆடு, மாடுகளையும் கொன்ற புலியை வீரன் ஒருவன் குதிரையில் ஏறிச் சென்று போரிட்டுக் கொன்றுள்ளதை நடுகல் புடைப்பு சிற்பம் வெளிப்படுத்துகிறது. முன்னங்கால்களைப் புலியின் தலைப்பகுதிக்கு மேல் தூக்கியவாறு குதிரை கோபத்தோடு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
குதிரையின் மேலமர்ந்துள்ள வீரன், கைகளில் வீரக் கடகங்களும், கால்களில் வீரக்கழல்களும் அணிந்த கோலத்தில், இடது கையால் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்த கோலத்திலும், வலது கையில் நீண்ட கூரிய வேல்கம்பு ஒன்றைப் புலியின் கொடிய வாயில் குத்துவது போன்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. புலிப் பின்னங்கால்களைத் தரையில் ஊன்றி அமர்ந்த கோலத்திலும், புலியின் முன்னங்கால்கள் மேல் நோக்கி வீரனைத் தாக்கத் தயராகும் கோலத்திலும் உள்ளன. இவ்வீரனின் தலையில் கிரீடம் போன்ற அமைப்புக் காணப்படுவதால் இவன் ஒரு இனக்குழுத் தலைவனாக இருந்திருக்க வேண்டும்.
தம் ஊரைப் புலியிடம் இருந்து காப்பாற்றுவதற்காகப் புலியோடு போரிட்டு வீரமரணம் அடைந்த இவ்வீரனைப் போற்றும் விதமாக இந்நடுகல் நடப்பட்டுள்ளது. இந்த நடுகல்லில் மூன்று வரிகள் கொண்ட கல்வெட்டு வாசகம் இடம் பெற்றுள்ளது. கல்வெட்டு வாசகம் வருமாறு: வெங்கடப்பன், அம்மகர் முத்தப்பன், கொண்டப்பன் என்று எழுதப்பட்டுள்ளது. இதுமூன்று தலைமுறையினரின் பெயரைக் குறிப்பது போல் தெரிகிறது.
இக்கல்வெட்டில் வரும் அம்மகர் என்ற சொல்லாட்சி ஆய்வில் இடம்பெற்றிருந்த வெங்கடேசன் குடும்பத்தாரை இன்றும் அதே பெயரில் அழைப்பது தெரியவருகிறது. எனவே இந்நடுகல் ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழரின் வீரம் சார்ந்த வாழ்வியலை வெளிப்படுத்துகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
The post ஆம்பூர் அருகே கி.பி 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த புலிக்குத்திப்பட்டான் நடுகல் கண்டெடுப்பு appeared first on Dinakaran.