×

கோவையில் மிலாடி நபியையொட்டி 50 ஆயிரம் பேருக்கு பிரியாணி, குஸ்கா

*சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்

கோவை : கோவையில் மிலாடி நபியையொட்டி 50 ஆயிரம் பேருக்கு பிரியாணி, குஸ்கா வழங்கப்பட்டது. இது தொடர்பாக வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
கோவையில் மிலாடி நபியையொட்டி பள்ளி வாசல்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பள்ளிவாசல் நிர்வாகத்தினர் சார்பில் உணவு தயார் செய்யப்பட்டது. கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியில் உள்ள பள்ளிவாசலில் மிலாடி நபி விழாவிற்காக பிரியாணி தயாரிக்கும் பணிகள் நேற்று முன்தினம் இரவு முதலே நடைபெற்றது.

பள்ளிவாசல் அருகில் உள்ள இடத்தில் 60 மிகப்பெரிய அண்டாக்களில் 3 ஆயிரம் கிலோ அரிசி, 3 ஆயிரத்து 200 கிலோ ஆட்டிறைச்சியை கொண்டு மட்டன் பிரியாணி தயாரிக்கப்பட்டது. 350க்கும் மேற்பட்ட ஆடுகள் வெட்டப்பட்டன. 175 பேர் விடிய விடிய பிரியாணி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். நேற்று காலை முதல் வியாபார நோக்கமின்றி ஒரு கிலோ மட்டன் பிரியாணி ஆயிரம் ரூபாய் என்ற விலையில் விற்பனை துவங்கி நடைபெற்றது.

லாப நோக்கமின்றி பிரியாணி தயாரிக்கப்பட்டு குறைந்த விலையில் இஸ்லாமியர்கள் மற்றும் ஏழைகளுக்கு வழங்கப்பட்டது. 135 ஆண்டு பழமையான கோட்டைமேடு பள்ளிவாசலில் 70 ஆண்டுகளாக இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருவதாக பள்ளிவாசல் நிர்வாகிகள் தெரிவித்தனர். ஏழை, எளிய மக்களுக்கு டோக்கன் கொடுத்து இலவசமாகவும் பிரியாணி வழங்கப்பட்டது. கடைகளில் மட்டன் பிரியாணி ஒரு கிலோ 1800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் பள்ளி வாசல் நிர்வாகத்தின் சார்பில் 1000 ரூபாய்க்கு பிரியாணி விற்பனை செய்யப்பட்டதால் கூட்டம் குவிந்தது. காலை 6 மணி முதல் பிரியாணி விற்பனை துவங்கிய நிலையில் ஏராளமான பொதுமக்கள் மட்டன் பிரியாணியை வாங்க குவிந்தனர். நாஸ் தியேட்டர் பகுதியில் பிரியாணி விற்பனை நடந்தது.

கோவை உக்கடம் ஜிஎம்.நகர் பகுதியில் சுன்னத் ஜமாத் யூத் பெடரேசன் சார்பில் இலவசமாக குஸ்கா வழங்கப்பட்டது. அல் அமீன் காலனி, குறிச்சி பிரிவு என சில இடங்களில் குஸ்கா வழங்கப்பட்டது. கோவை நகரில் பல்வேறு இடங்களில் சுமார் 50 ஆயிரம் பேருக்கு மிலாடி நபியையொட்டி பிரியாணி, குஸ்கா வழங்கப்பட்டது. பிரியாணி வாங்க ஏராளமான மக்கள் குவிந்தனர். இஸ்லாமிய அமைப்பினர் கூறுகையில், ‘‘குறைந்த விலையிலும், ஏழைகளுக்காக இலவசமாகவும் பிரியாணி, குஸ்கா வழங்கப்பட்டது. மக்கள் இதில் ஆர்வத்துடன் பங்கேற்றனர், கடந்த காலங்களை இந்த ஆண்டு மிக சிறப்பாக பிரியாணி விருந்து வழங்கப்பட்டது’’ என்றனர். இது தொடர்பாக வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

The post கோவையில் மிலாடி நபியையொட்டி 50 ஆயிரம் பேருக்கு பிரியாணி, குஸ்கா appeared first on Dinakaran.

Tags : Miladi Prophet ,Biryani, Kuska ,Miladi ,Prophet ,
× RELATED போக்குவரத்து துறை அறிவிப்பு; தொடர்...