×

வாச்சாத்தி பாலியல் வழக்கு.. 215 குற்றவாளிகளுக்கும் தண்டனை உறுதி : பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு, அரசு வேலை வழங்க தீர்ப்பு!!.

சென்னை: வாச்சாத்தி கிராமமக்கள் மீதான கொடூர பாலியல் தாக்குதல் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் குற்றவாளிகளுக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

வழக்கின் பின்னணி!!

தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி மலைகிராமத்தில் சந்தன மரங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறி, 1992 ஜூன் 20ம் தேதி வனத்துறையினர், காவலர்கள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் அங்கிருந்த இளம் பெண்கள் 18 பேரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.இந்த வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரிகள், 4 ஐஎப்எஸ் அதிகாரிகள் உள்பட வனத்துறையினர், காவல்துறையினர், வருவாய் துறையினர் என்று 215 பேர் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணையின்போது, குற்றம் சாட்டப்பட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் இறந்துவிட்டனர். வழக்கை விசாரித்த தர்மபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் என 2011ம் ஆண்டு தீர்ப்பளித்தது.பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 4 ஐஎப்எஸ் அதிகாரிகள் உள்பட 17 வனத்துறையினரில் 12 பேருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. மற்றவர்களுக்கு ஓராண்டு முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு!!

இந்த தீர்ப்பை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், வாச்சாத்தி மலை கிராமத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பளித்துள்ளார். அவர் வழங்கியுள்ள தீர்ப்பில், “குற்றவாளிகளுக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது. விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 18 பேருக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அந்த இழப்பீட்டு தொகையில் 50% ரூ.5 லட்சத்தை குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும். வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டவர்கள் இறந்திருந்தால் ரூ. 10 லட்சம் பணத்தை அவர்களது குடும்பத்திற்கு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவர்களது குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அப்போதைய ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர்.,மாவட்ட வன அதிகாரிக்கு எதிராக தமிழக அரசு நடவடிக்கை வேண்டும்,” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வாச்சாத்தி பாலியல் வழக்கு.. 215 குற்றவாளிகளுக்கும் தண்டனை உறுதி : பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு, அரசு வேலை வழங்க தீர்ப்பு!!. appeared first on Dinakaran.

Tags : Vachaty ,Chennai ,Vachachati ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...