×

கர்நாடகாவில் ‘சித்தா’ படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு: செய்தியாளர் சந்திப்பில் இருந்து பாதியிலேயே வெளியேறிய நடிகர் சித்தார்த்..!!

பெங்களூரு: பெங்களூருவில் கன்னட அமைப்பினர் தகராறு செய்ததால் சித்தா திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. நடிகர் சித்தார்த் தனது இடாகி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரித்து நடித்துள்ள படம் சித்தா. இதை பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கியுள்ளார். திபு நினன் தாமஸ் இசை அமைத்துள்ளார். சித்தார்த்துக்கும் அவர் அண்ணன் மகளுக்குமான பாசப் பிணைப்பு தான் கதை. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி உள்ளது. இந்தப் படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியது.

இந்நிலையில் சித்தா படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிக்காக நடிகர் சித்தார்த் நேற்று பெங்களூரு சென்றுள்ளார். அங்கு நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு நடிகர் சித்தார்த் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அரங்குக்குள் நுழைந்த கன்னட அமைப்பினர் தகராறில் ஈடுபட்டு, சித்தார்த் முன்பு சூழ்ந்துகொண்டு முழக்கம் எழுப்பினர். காவிரி விவகாரத்தில் கன்னட அமைப்பினர், தமிழ்நாட்டிற்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தமிழ் நடிகரான சித்தார்த்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கொடிகளுடன் சென்ற அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் மிட்டதை அடுத்து நடிகர் சித்தார்த் பாதியிலேயே வெளியேறினார். இது தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

The post கர்நாடகாவில் ‘சித்தா’ படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு: செய்தியாளர் சந்திப்பில் இருந்து பாதியிலேயே வெளியேறிய நடிகர் சித்தார்த்..!! appeared first on Dinakaran.

Tags : Siddharth ,BENGALURU ,Siddha ,Siddharth's… ,Karnataka ,
× RELATED வீடியோ கான்பரன்ஸ் விசாரணையில் தீடீரென ஆபாசப் படம் : நீதிபதிகள் அதிர்ச்சி