×

சென்னை போன்ற பெரு நகரங்களில் ஓட்டல் உணவுகளில் ஆர்வம் காட்டுவதால் வயிற்று பிரச்னைகளில் சிக்கும் பொதுமக்கள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்

சமூகத்தில் டெக்னாலஜி வளர வளர பல்வேறு துறைகளில் பல்வேறு மாற்றங்களை நாம் சந்தித்து வருகிறோம். அந்த வகையில், மனிதனின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான உணவு சம்பந்தப்பட்ட விஷயத்திலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த மாற்றங்களை மனிதன் ஏற்படுத்தினானா அல்லது வளர்ந்து வரும் சூழ்நிலைக்கு ஏற்ப தொழில்நுட்பங்கள் மனிதனை மாற்றியதா என்பது நீண்ட நெடிய விவாதம். இருப்பினும் அனைத்து காரணங்களுக்கும் தற்போதுள்ள பொதுமக்களின் அவசரமும் அவர்கள் உணவின் மீது வைத்துள்ள ஒரு அஜாக்கிரதையுமே காரணம்.

பொதுமக்கள் பல்வேறு உணவு முறைகளால் நோய்களுக்கு தள்ளப்பட்டு சராசரி மனிதனின் ஆயுட்காலமும் 70ல் இருந்து குறைந்து வருகிறது. ஆனால், மேலும் 40 வயதை தொடும்போது ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய் போன்ற பல நோய்களுக்கு இன்றைய தலைமுறையினர் பாதிப்புக்கு உள்ளாகின்றனர், அதற்கு காரணம் உணவுகள்தான்.

தற்போது உள்ள சூழ்நிலையில் உணவு பழக்கவழக்கத்தை பொறுத்தவரை சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ளவர்களில் பாதிக்கு பாதி பேர் தினமும் ஏதாவது ஒரு காரணத்திற்காக ஓட்டலில் சாப்பிடும் பழக்கத்தை கடைபிடித்து வருகின்றனர். மேலும் வேலைக்காக ரூம் எடுத்து தங்கி உள்ளவர்கள், திருமணம் ஆகாதவர்கள், வெளி ஊர்களில் இருந்து வந்தவர்கள் என பலரும் ஓட்டல்களையே நம்பி வாழ்ந்து வருகின்றனர். ஒரு காலகட்டத்தில் குறிப்பிட்ட ஓட்டல்களை நம்பி பொதுமக்கள் சென்று சாப்பிட்டு வந்தனர். அங்கு சுவை சுமாராக இருந்தாலும் உடலுக்கு எந்த தீங்கும் ஏற்படாது என்ற ரீதியில் பொதுமக்கள் சிந்தித்தனர்.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் உணவுகளின் நிறம், சுவை போன்றவற்றை பார்க்கின்றனர். இதனால் எந்த அளவிற்கு சுவையை கூட்ட முடியுமோ அந்த அளவிற்கு ஓட்டல்களில் சுவையை கூட்டி பொதுமக்களை கவர்ந்து வருகின்றனர். இதன் மூலம் படிப்படியாக வயிறு சம்பந்தமான பிரச்னைகள் தொடங்கி பல பிரச்னைகளை பொதுமக்கள் எதிர்கொள்கின்றனர்.

மார்க்கெட்டுகளில் காய்கறிகளை குப்பையில் கொட்டுவது போல கொட்டி விற்பனை செய்கின்றனர். குறிப்பாக, கருவேப்பிலை, கொத்தமல்லி, கீரை வகைகள் போன்றவற்றை முறையாக கையாள்வது கிடையாது. இதனை ஓட்டல்களுக்காக மொத்தமாக வாங்கும் நபர்கள் அதனை மூட்டைகளில் அடைத்து ஒரு மினி வேனில் தூக்கி போட்டு அப்படியே எடுத்து வந்து ஓட்டல்களில் தள்ளுகின்றனர். ஓட்டலில் சமைப்பவர்கள் அதனை ஒரு தண்ணீரில் ஒரு முறை முக்கி எடுத்து அப்படியே அறிந்து பயன்படுத்துகின்றனர். கருவேப்பிலை, கொத்தமல்லி போன்றவற்றை தண்ணீரில் அலசுவது கூட கிடையாது. ஏனென்றால் அவ்வாறு அலசினால் நிறைய இலைகள் உதிர்ந்து விடும் என்பதால் அதனை சுத்தம் செய்யாமல் அப்படியே பயன்படுத்துகின்றனர். இதனால் வெஜிடேரியன் உணவு வகைகளிலும் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.

இது ஒருபுறம் இருக்க, அசைவ ஓட்டல்களின் நிலை தற்போது வேறு மாதிரியாக உள்ளது. ஒரு ஓட்டலுக்குள் செல்லும்போது ரிசப்ஷன் மற்றும் சாப்பிடும் இடம் உள்ளவற்றை சுத்தமாக பராமரிக்கும் அவர்கள் நான்வெஜ் சமைக்கப்படும் இடத்திற்கு சென்று பார்த்தால் அந்த ஓட்டலில் சாப்பிட ஒருவர் கூட மீண்டும் அந்த ஓட்டலுக்கு செல்ல மாட்டார்கள். அந்த அளவிற்கு மிகவும் மோசமாக உள்ளது. அசைவ உணவு வகைகளை பொறுத்தவரை சமைக்காத உணவுகளை நன்கு பதப்படுத்தப்பட்ட முறையில் பதப்படுத்தி அதனை பயன்படுத்த வேண்டும் என உணவு பாதுகாப்பு துறை அறிவுறுத்தி உள்ளது. ஆனால் அந்த வழிகாட்டி நெறிமுறைகளை யாரும் முறையாக பின்பற்றுவது கிடையாது.

மேலும் அசைவ ஓட்டல்களில் குறிப்பிட்ட மசாலாக்களை விடியற்காலை தயார் செய்து வைத்துக் கொள்கிறார்கள். இரவு ஓட்டல் மூடும் வரை அந்த மசாலாக்களில் நான்வெஜ் உணவு வகைகளை அமுக்கி அனைத்திற்கும் ஒரே விதமான மசாலாக்களை பயன்படுத்துகின்றனர். மேலும் எண்ணெய் வகைகளையும் காலை சூடு செய்து பொரித்த கறி, மீன் போன்ற வகைகளை சமைக்கின்றனர். அதன் பிறகு மீண்டும் மீண்டும் அதே எண்ணெயை இரவு வரை பயன்படுத்துகின்றனர். இதனால் மீண்டும் மீண்டும் சூடு படுத்துவதால் எண்ணெயில் கொழுப்பு அதிகரித்து அதை சாப்பிடும் பொது மக்களுக்கு பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படுகின்றன.

இரவு நேரங்களில் ஓட்டல்களை மூடும்போது எந்த வகையான அசைவ உணவுகள் விற்காமல் அப்படியே உள்ளதோ அதனை மீண்டும் குளிர்சாதன பெட்டியில் எடுத்து வைத்து மறுநாள் அதனை சூடுபடுத்தி தருகின்றனர். இது உடலுக்கு மிகவும் கேடு என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். பெரிய ஓட்டல் அதிக விலை என நம்பி ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிடுகிறோம். ஆனால் அவர்கள் உணவுப் பொருட்களை பயன்படுத்தும் முறையையும் அசைவ உணவுகளை கையாளும் முறைகளையும் பார்த்தால் மீண்டும் அந்த ஓட்டல்களுக்கு நாம் செல்வோமா என்ற ஒரு கேள்வி நமது மனதிற்குள் எழுகிறது.

இதற்கு தினமும் சாலையோரங்களில் உள்ள கையேந்தி பவனுக்கு சென்று அன்றைக்கு சமைத்து அன்றைக்கே பாத்திரங்களை காலி செய்துவிட்டு செல்லும் நபர்களிடம் நின்று நம்பி சாப்பிட்டு விடலாம் என சிலர் நினைத்து விடுகின்றனர். அந்த அளவிற்கு சில உணவகங்களில் சாப்பிட்டுவிட்டு பொதுமக்கள் படும் பாடு எண்ணில் அடங்காதவை.

முந்தைய காலகட்டத்தில் காலை மதியம் இரவு என மூன்று வேளையும் வீடுகளில் சமைப்பார்கள். அந்த உணவுகளை உடனே சுட சுட சாப்பிடுவார்கள். சாப்பிட்டவுடன் அடுத்த வேலையை பார்க்க சென்று விடுவார்கள். ஆனால் இன்றைய நிலைமை அப்படி கிடையாது. காலை கிளம்பும்போது மதியத்திற்கும் சேர்த்து உணவு எடுத்துக் கொண்டு செல்கிறார்கள். சிலர் இரவிற்கும் சேர்த்து உணவு எடுத்துக் கொண்டு செல்கிறார்கள். இதனால் சமைத்த உணவுகளில் நேரம் ஆக ஆக பாக்டீரியா உருவாகி நமது உணவே நமக்கு நஞ்சு பொருளாக மாறிவிடுகிறது. தொடர்ந்து இதே உணவு முறையை பல ஆண்டுகள் கடைபிடிக்கும் போது உடம்பில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றது. சிலருக்கு இந்த உணவு பழக்க வழக்கத்தால் தான் இந்த பிரச்னை ஏற்பட்டது என்பது கூட தெரியாது.

குறிப்பாக 40 வயது கடந்த பெண்கள் தற்போது கடும் மூட்டு வலியால் பாதிக்கப்படுகிறார்கள். அதற்கு உணவு பழக்க வழக்கமும் ஒரு காரணம் என்பதை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். நமது முன்னோர்கள் நமக்கு கூறிய வாழ்க்கை முறை உணவு பழக்க வழக்க முறை போன்றவற்றில் எண்ணற்ற மாறுதல்களை செய்து விட்டோம். இதன் காரணமாக தற்போது எண்ணற்ற நோய்களும் அவற்றை கையாள்வதற்கு எண்ணற்ற மருத்துவமனைகளும் பெருகிவிட்டன. இதே நிலைமை நீடித்தால் 100 வயது வாழ்ந்த நம் முன்னோர்கள் தற்போது எழுவது என்ற ஒரு இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். நாளடைவில் இது ஐம்பதாக குறையவும் வாய்ப்புள்ளது என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

எனவே உணவு பழக்க வழக்கத்தை வீட்டிலிருந்தே முறையாக கையாள வேண்டும் எனவும் முடிந்தவரை வீட்டில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும். வாரத்திற்கு ஒரு நாள் அதுவும் ஒரு முறை வேண்டுமானால் ஓட்டல் உணவுகளை சுவைக்க பழக்கப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் தினந்தோறும் அவ்வாறு பழக்கப்படுத்தினால் பல்வேறு பக்க விளைவுகளை வருங்காலத்தில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் ஓட்டல் வைத்து நடத்துபவர்கள் மருத்துவர்களுக்கு சமம். எனவே பொதுமக்கள் உயிரோடு அவர்கள் விளையாடாமல் தரமான உணவுகளை சமைத்து தர வேண்டும் எனபதே அனைவரின் விருப்பமாக உள்ளது.

இரவில் அசைவ உணவு தவிர்ப்பது நல்லது
குடல் மற்றும் ஈரல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வெங்கடேசன் கூறுகையில், ‘‘பெரும்பாலான ஓட்டல்களில் சுத்தமான நெய், சுத்தமான எண்ணெய் எனக் கூறுகிறார்கள். ஆனால் டால்டா , பாமாயிலை பயன்படுத்துகிறார்கள். பாமாயில் மற்றும் டால்டா அதிகம் பயன்படுத்துவதால் ரத்த குழாயில் அடைப்பை ஏற்படுத்துகிறது. ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படும், ஆனால் இரண்டு இடங்களில் அடைப்பு ஏற்படும்போது அது மரணத்தை தோற்றுவிக்கிறது. குறிப்பாக மூளைக்கு செல்லும் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்படும்போதும் இதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படும் போதும் மரணம் ஏற்படுகிறது. மேலும் பெரிய ஓட்டலில் பயன்படுத்தப்பட்ட எண்ணெய்களை வாங்கி சிறிய ஓட்டல்களில் மீண்டும் பயன்படுத்துகின்றனர். எனவே முடிந்தவரை இரவு நேரங்களில் அசைவ உணவுகளை உண்பதை மக்கள் தவிர்க்க வேண்டும். முடிந்தவரை இரவு ஏழு மணிக்குள் சாப்பிட்டு முடித்து விட வேண்டும் என்றார்.

யூடியூப் சேனல்களின் அலப்பறை
தற்போது சில யூடியூப் சேனல் நடத்துபவர்கள் குறிப்பிட்ட இடங்களில் ஓட்டல் ஓட்டலாக சென்று இந்த ஓட்டலில் அந்த உணவு வகை அப்படி இருக்கும். இந்த ஓட்டலில் இந்த உணவு வகை இப்படி இருக்கும் என தங்களது இஷ்டத்திற்கு லைக் மற்றும் ஷேர் வர வேண்டும் என பல தவறான கருத்துகளை தெரிவிக்கின்றனர், எந்த அளவிற்கு சுகாதாரமாக செய்யப்படுகிறது எந்த எண்ணெயில் செய்யப்படுகிறது என்பதை விட சுவை எப்படி உள்ளது நிறம் எப்படி உள்ளது போன்றவற்றில் அதிக கவனம் செலுத்துகின்றனர், இதனை பார்க்கும் நம்மவர்களும் விதவிதமான ஓட்டலுக்கு சென்று சாப்பிடுகின்றனர் இதன் மூலம் அவர்களுக்கு உடல் உபாதைகள் மட்டுமே மிஞ்சுகிறது. யூடியூப் சேனல் நடத்துபவர்களுக்கு வருமானம் வருகிறது எனவே போலியான விளம்பரங்களை பொதுமக்கள் தவிர்ப்பது நல்லது.

மையப்படுத்தப்பட்ட சமையலறை முறையை தவிர்க்க வேண்டும்
தற்போது பல ஓட்டல்களில் சென்ட்ரலைஸ்டு கிச்சன் எனப்படும் மையப்படுத்தப்பட்ட சமையலறை முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஒரே இடத்தில் சமைத்து அந்த உணவுப் பொருட்கள் பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அதன் பிறகு அங்கு மிதமான சூடு செய்யப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது குறிப்பாக பிரியாணி போன்ற உணவு வகைகளை அனைத்து இடங்களிலும் ஒரே சுவை வரவேண்டும் என நினைப்பவர்கள் இம்முறையே பயன்படுத்துகின்றனர். அவ்வாறு உணவுகளை கொண்டு சென்று மறு இடத்தில் வைத்து மீண்டும் சூடு செய்யும் போது அதில் கொழுப்பு தன்மை அதிகரித்து உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கும். எனவே மையப்படுத்தப்பட்ட சமையலறை முறையை ஓட்டல்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

The post சென்னை போன்ற பெரு நகரங்களில் ஓட்டல் உணவுகளில் ஆர்வம் காட்டுவதால் வயிற்று பிரச்னைகளில் சிக்கும் பொதுமக்கள்: எச்சரிக்கும் மருத்துவர்கள் appeared first on Dinakaran.

Tags : Peru ,Chennai ,
× RELATED வடலூரில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற...