×

அரசு நோட்டீசை எதிர்த்து தொடர்ந்த மாயாஜால் வழக்கு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மாயாஜால் மால் நிலத்துக்கு பட்டா வழங்கிய உத்தரவுக்கு எதிராக நில அளவை மற்றும் நிலவரி திட்ட இயக்குனர் தாமாக முன் வந்து விசாரணை நடத்த பிறப்பித்த நோட்டீசை எதிர்த்து மாயாஜால் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை அடுத்த கானத்தூர் ரெட்டிக்குப்பம் கிராமத்தில் உள்ள 2 ஏக்கர் நிலத்துக்கு, மாயாஜால் நிறுவனத்துக்கு பட்டா வழங்கிய உத்தரவுக்கு எதிராக தாமாக முன் வந்து விசாரணை நடத்துவது தொடர்பாக நில அளவை மற்றும் நிலவரி திட்ட இயக்குனர் கடந்த 2018 ஜனவரி மாதம் நோட்டீஸ் அனுப்பினார்.

இந்த நோட்டீசை ரத்து செய்யக் கோரி மாயாஜால் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வி.அருண் ஆஜராகி, இந்த நிலம் அனாதீன நிலமாகும். எனவே, இந்த நிலத்திற்கு மாயாஜால் நிறுவனம் சொந்தம் கொண்டாட முடியாது என வாதிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, நிலத்தை கடந்த 1999ம் ஆண்டு வாங்கியதாக கூறும் மாயாஜால் நிறுவனம், அதற்கு பட்டா கோரி விண்ணப்பிக்கவில்லை. மாறாக 2003ம் ஆண்டு நிலத்தை 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு கோரி மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பித்ததால், அந்த நிலம் அரசு நிலமாகவே கருத வேண்டும். எனவே, மாயாஜால் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த நிலத்துக்கு பட்டா வழங்கிய உத்தரவை ரத்து செய்ததை எதிர்த்த வழக்கில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், தாமாக முன்வந்து எடுத்த விசாரணையை தொடர ஏதுவாக உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதலை பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

The post அரசு நோட்டீசை எதிர்த்து தொடர்ந்த மாயாஜால் வழக்கு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Mayajal ,Chennai ,Land Quantities and Lilavari Project ,Patta ,Mayajal Mall ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...