பாகூர், செப். 29: புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: சாத்தனூர் அணையின் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் பருவ மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அணையின் நீர் மட்டம் 116.75 அடிக்கு மேல் நிரம்பியுள்ளது. ஆகையால் அணையின் உபரி நீரினை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி நேற்று 1035 கன அடி நீர் வெளியேற்றப்படும். மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் நீர் வெளியேற்றும் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வினாடிக்கு 10,000 கன அடி வரை வெளியேற்றப்படும் என சாத்தனூர் அணை உதவி செயற்பொறியாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதன் காரணமாக தென்பெண்ணையாற்றின் நீர்வரத்து அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்பெண்னை ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள புதுவை கிராமங்களான நெட்டப்பாக்கம், பண்ட சோழநல்லூர், வடுவுகுப்பம், ஏம்பலம், நத்தமேடு, கம்பளிகாரன்குப்பம், மணமேடு, குருவிநத்தம், பரிக்கல்பட்டு, சொரியங்குப்பம், கொமந்தமேடு, உச்சிமேடு ஆகிய பகுதிகளில் கரையோரம் உள்ள மக்கள் தங்களது உடமைகளையும், கால்நடைகளையும் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ ஆற்றங்கரையை கடக்கவோ கூடாது. அதனை மீறுவோர் மீது காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இதையொட்டி பாகூர் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் தென்பெண்ணையாற்று கரையோரங்களில் உள்ள கிராமங்களில் ஒளிபரப்பின் மூலம் வெள்ள அபாயம் குறித்து பொதுமக்களுக்கு எச்சரித்து வருகின்றனர்.
The post சாத்தனூர் அணை நிரம்பியதால் தண்ணீர் திறப்பு தென்பெண்ணையாற்று கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை appeared first on Dinakaran.