×

போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் 15ம் ஊதிய பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் 15ம் ஊதிய பேச்சு வார்த்தை தொடங்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான 14ம் ஊதிய ஒப்பந்தம் கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடைந்து விட்டது. நடப்பு செப்டம்பர் மாதத்திலிருந்து 15ம் ஊதிய ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்திருக்க வேண்டிய நிலையில், அதற்கான பேச்சுக்களைக் கூட தொடங்குவதற்கு போக்குவரத்துத் துறை முன்வராதது தொழிலாளர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த காலங்களைப் போலவே 14ம் ஊதிய ஒப்பந்தத்தில் போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கான ஊதியம் 2.57 காரணியைக் கொண்டு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்த நிலையில், 2.44 காரணியைக் கொண்டு தான் நிர்ணயிக்கப்பட்டது. அதனால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யும் வகையில், இம்முறை அடிப்படை ஊதியத்தில் 20% உயர்வு வழங்கப்பட வேண்டும், ஆண்டு ஊதிய உயர்வாக 5% வழங்கப்பட வேண்டும், ஊதிய முரண்பாடுகள் களையப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 50க்கும் கூடுதலான கோரிக்கைகள் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களால் முன்வைக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து பேசித் தீர்வு காண அதிக காலம் தேவைப்படும். அதை கருத்தில் கொண்டு தான் ஊதிய ஒப்பந்தப் பேச்சுகளை உடனடியாக தொடங்க வேண்டும் என பாமக வலியுறுத்துகிறது. எனவே, அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கான 15ம் ஊதிய மாற்று ஒப்பந்தப் பேச்சுகளை உடனடியாக தொடங்கவும், 2023ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் பேச்சுகளை முடித்து ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதுவரை அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணமாக மாதம் ₹3,000 வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் ஓய்வூதியத்திற்கு கடந்த 96 மாதங்களாக வழங்கப் படாமல் இருக்கும் அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் 15ம் ஊதிய பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : wage negotiation ,Ramadoss ,Chennai ,Transport Corporation ,Ramadas ,Dinakaran ,
× RELATED வணிகர்கள் அவதிப்படுவதால்...