×

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு இதுவரை 610 பேர் பாதிப்பு: பொது சுகாதாரத்துறை தகவல்

சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை, வெயில் என நிலையில்லாமல் வானிலை இருந்து வருவதால் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தலைவலி, காய்ச்சல், சளி, இருமல், உடல்வலியுடன் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் டெங்கு காய்ச்சலும் பொதுமக்களை மிரட்டி வருகிறது.

தமிழகத்தில் தினசரி சாதாரண காய்ச்சல் முதல் வைரஸ் காய்ச்சல் வரை சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 2500 முதல் 3000 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் உள்ள 45 சுகாதார மாவட்டங்களில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருநெல்வேலி, தென்காசி, கோயம்புத்தூர், மதுரை, தேனி, கன்னியாகுமரி, திருச்சி, வேலூர், கடலூர், சேலம், ஈரோடு, தூத்துக்குடி, விருதுநகர், பூந்தமல்லி, செய்யாறு, திருவாரூர், பரமக்குடி, ராணிப்பேட்டை, அரியலூர், திருவண்ணாமலை, தர்மபுரி என 25 க்கும் மேற்பட்ட சுகாதார மாவட்டங்களில் வைரஸ் மற்றும் பாக்டீரியா பாதிப்பால் ஏற்படக்கூடிய காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்துள்ளது.

கொசுவால் பரவக்கூடிய டெங்கு பாதிப்பை பொறுத்தவரை வடகிழக்கு பருவ மழைக்கு முன்னதாகவே பாதிப்புகள் அதிகரிப்பது வழக்கம் தான். அதன்படி செப்டம்பர் மாதம் தொடக்கத்திலிருந்தே வெயில், மழை என மாறி மாறி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வானிலை நிலவரம் இருப்பதால் கொசுப்புழு உற்பத்தி அதிகரித்திருப்பதாக தெரிய வருகிறது.

இதனால் செப்டம்பர் மாதத்தில் இதுவரை தமிழகத்தில் 600க்கும் மேற்பட்டோருக்கும், குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 230 பேர் வரை டெங்குவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யபட்டுள்ளது. கடந்த மாதம் (ஆகஸ்ட்) 535 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த மாதம் (செப்டம்பர்) 610 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

The post தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு இதுவரை 610 பேர் பாதிப்பு: பொது சுகாதாரத்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Nadu ,Chennai ,Tamil Nadu ,TN ,Public Health Department ,
× RELATED கோடைகாலத்தில் சூரியனிலிருந்து வரும்...