×

பொய் சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டும்; நித்தம் நித்தம் உண்மைக்கு மாறான ஒரு பொய்…. அண்ணாமலையின் புது உருட்டு: ஆதாரத்தோடு வெளியாவதால் மக்கள் அதிர்ச்சி

சென்னை: வாயால் வடை சுட்டு கட்சியை வளர்க்கும் முயற்சியில் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை இறங்கியுள்ளதாக சமூக வலைதளங்களில் அனல் பறக்கும் வசனங்கள் வெளியாகி வருகிறது. ஒவ்வொரு கூட்டத்தில் பேசும் போதும், ஏதாவது ஒரு பொய்யை சொல்லி அதை நியாயப்படுத்துவதும் அவரது வழக்கமாகி வருகிறது. ஆனால் அவர் பேசிய சில மணி நேரங்களிலேயே, சமூக வலைதளங்களில் தகுந்த ஆதாரங்களுடன் அவர் சொல்வது பொய் என்பதை உறுதி செய்து வரும் தகவல்கள் மற்ற கட்சியினர், பொதுமக்கள் மத்தியில் மட்டுமல்ல பாஜவினருக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறது.

முதிர்ச்சியான அரசியல் புரிதல் இல்லாமல் வாய்க்கு வந்ததைப் பேசும் அண்ணாமலையின் உருட்டுகள் பொய்யானவை என்பதற்கு பல்வேறு எடுத்துக்காட்டுகள் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

* பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய பாஜ மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘பசும்பொன் தேவரின் எச்சரிகைக்குப் பிறகு அண்ணா மன்னிப்புக் கேட்டார்’ என்று போகிற போக்கில் ஒரு குண்டை தூக்கிப் போட்டுவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார்.
* 1996ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பர்கூர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதனைத் தவிர்த்து வேறு எந்த தேர்தலிலும் அவர் தோல்வி அடையவில்லை. அவர் தோல்வி அடைந்தாலும் 50,782 வாக்குகளைப் பெற்றிருந்தார். அத்தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில் சுமார் 43 சதவீத வாக்குகளை அவர் பெற்றுள்ளார். ஆனால், ஜெயலலிதா டெபாசிட் இழந்ததாக அண்ணாமலை பேசியதும் பொய்.
* இந்தியாவில் சுமார் 1,80,000க்கும் மேல் முதுநிலை மருத்துவ படிப்புக்கான இடங்கள் இருப்பதாகவும், அவ்விடங்களில் கடந்த ஆண்டு ஏகப்பட்ட சீட் நிரம்பவில்லை என்றும் பேட்டி ஒன்றில் அண்ணாமலை கூறினார். ஒன்றிய அரசின் இணையதளத்தில் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்தியாவில் 1,07,948 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் 67,802 முதுநிலை இடங்கள் மட்டுமே உள்ளன. அதேபோல் 2022-23ம் ஆண்டில் 4,400 முதுநிலை மருத்துவ இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது என ஒன்றிய அரசின் சார்பில் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 64,059 இடங்களில் 4,400 என்பது 6.87% மட்டுமே.
* முத்துராமலிங்கத் தேவர்- அண்ணாவை மன்னிப்பு கேட்க வைத்ததாக அண்ணாமலை பேசிய பொய். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆய்வு மையத்தால் வெளியிடப்பட்ட ‘பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஒர் ஆய்வுக் கண்ணோட்டம்’ ஆகிய எந்த புத்தகத்திலும் அண்ணாமலை சொன்னது போல் வரலாற்று தகவல் இடம்பெறவில்லை. கடவுள் தொடர்பான விஷயத்தில் இருவருக்கும் மாற்று கருத்துகள் இருந்துள்ளது. ஆனால், மேற்கண்ட நிகழ்வில் மன்னிப்பு கேட்க வேண்டும் என முத்துராமலிங்கத் தேவரும் கூறவில்லை. அண்ணா மன்னிப்பும் கேட்கவில்லை.
* தமிழ்நாட்டில் விநாயகர் சிலை செய்யும் கிடங்கிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்றும், இதனால் பண்டிகைகளை நம்பி இருக்கும் தொழிலாளர்களின் நிலை என்ன என்றும் அண்ணாமலை வீடியோ ஒன்றினை பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக கரூர் மாவட்ட வருவாய் துறை அதிகாரி கூறுகையில், ‘‘அங்குள்ள விநாயகர் சிலைகள் தடை செய்யப்பட்ட ரசாயனப் பொருள் கலந்த கலவையால் (பிளாஸ்டர் ஆப் பாரிஸ்) செய்யப்பட்டிருந்ததைக் கண்டறிந்தோம். இதையடுத்து விநாயகர் சதுர்த்திக்காக தயாரித்து வைக்கப்பட்டிருந்த சிலைகள் கொண்ட கிடங்கிற்கு சீல் வைத்தோம். சிலை தயாரிப்பவர்கள் பொருளாதார ரீதியாக பாதிப்படையக் கூடாது. எனவே விநாயகர் சதுர்த்தி முடிந்ததும் இந்த சிலைகள் அவர்களிடமே ஒப்படைக்கப்படும்” எனக் கூறினார்.
* ‘உசிலம்பட்டியில் திமுக வெற்றி பெற்றதே கிடையாது. பாஜ ஆட்சிக்கு வந்த பிறகு 9 ஆண்டுகளில் இந்தியாவில் குண்டுவெடிப்பு சம்பவங்களே நடக்கவில்லை’ என அண்ணாமலை பேசி இருந்தார். இது இரண்டுமே பொய். 1989ம் ஆண்டு உசிலம்பட்டியில் திமுகவை சேர்ந்த வல்லரசு’ வெற்றி பெற்றுள்ளார். அதே போல் 2016ம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி காஷ்மீரில், உரி என்னும் பகுதியில் உள்ள இந்திய ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் சுமார் 20 ராணுவ வீரர்கள் உயிர் இழந்தனர். 2019, பிப்ரவரி 14ம் தேதி, ஜம்முவில் இருந்து நகர் நோக்கி துணை இராணுவப் படை வீரர்கள் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது, புல்வாமா என்னும் இடத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 40 படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.
* மணிப்பூர் மாநிலத்தில் 2013ல் 0.5 சதவீதமாக இருந்த பாஜவின் வாக்கு சதவீதம், 9 ஆண்டில் 52 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அண்ணாமலை நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார். ஆனால், 2012ம் ஆண்டு நடைபெற்ற மணிப்பூர் சட்டமன்ற தேர்தலில் பாஜ 2.12 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. இதே போல், 2022ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 37.8 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. இதிலிருந்து அண்ணாமலை கூறியது பொய்யான தகவல்.
* 20,000 புத்தகங்களைத் தான் படித்ததாக அண்ணாமலை பேசியது பெரும் கேலிக்கு உள்ளானது. அதேபோல், “11 ஆண்டுகள் 5 ஆயிரம் நாட்கள் என்னுடைய வாழ்க்கையில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியத் தண்டனைச் சட்டம் கேஸ் (வழக்கு) போட்டு இருக்கிறேன்” எனக் கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார். 11 ஆண்டுகளில் மொத்தம் 4,015 நாட்களே வரும். ஆனால், 5,000 நாட்கள் பணியாற்றியதாகத் தவறாகக் கூறி இருக்கிறார். அவர் ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று 2011ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு மே மாதம் வரை பணியாற்றி ராஜினாமா செய்து உள்ளார்.

ஆக, 9 ஆண்டுகள் (முழுமையாக நிறைவடையவில்லை) மட்டுமே ஐபிஎஸ் பணியிலிருந்துள்ளார். என்சிஆர்பி தரவுகளின்படி 2011 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் கர்நாடகா மாநிலத்தில் மொத்தம் 12,25,950 ஐபிசி குற்ற வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. அதேபோல், அண்ணாமலை பணியாற்றிய மாவட்ட வாரியாக பதிவான ஐபிசி குற்ற வழக்குகளின் எண்ணிக்கை ஆண்டிற்கு 2 ஆயிரம் முதல் 3 ஆயிரத்திற்குள் தான் உள்ளது. இதன்படி பார்க்கையில் அவர் சுமார் 20,000 வழக்குகளை மட்டுமே பதிவு செய்திருப்பார். இரண்டு லட்சம் வழக்குள் என அவர் கூறியது பொய்.

1962 வரை மருதமலையில் கரென்ட் கிடையாது. மருதமலை முருகன் கோயிலுக்கு மின்சாரம் கொடுக்க கூடாது என்று திமுக கொள்கையாக வைத்திருந்ததாக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டியிருந்தார். இதனிடையே அண்ணாமலை பேசிய பேச்சு சர்ச்சையாக மாறி இருக்கிறது. 1962ல் திமுக ஆட்சிக்கே வராத நிலையில் திமுக தான் மருதமலை முருகன் கோயிலுக்கு மின்சாரம் தரவில்லை என்று பேசியதாக நெட்டிசன்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

அண்ணா ஆட்சிக்கு வந்த ஆண்டு 1967 என்பது தமிழ்நாட்டில் எழுத, படிக்கக் கூட தெரியாதவர்களுக்கு கூட தெரியும். அப்படியிருக்கும் போது 1962ம் ஆண்டு மருதமலை கோயிலுக்கு மின்சாரம் வழங்க திமுக எப்படி முட்டுக்கட்டை போட்டிருக்க முடியும் என்றும் நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். அண்ணாமலை மருதமலை முருகன் கோயில் குறித்து பேசிய வீடியோவும் இணையதளங்களில் பரவி வருகிறது. இதற்கு, அண்ணாமலை வரலாறு தெரியாமல் தற்குறித்தனமாக பேசி வருகிறார் என்றும் விமர்சனங்கள் பறக்கின்றன.

The post பொய் சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டும்; நித்தம் நித்தம் உண்மைக்கு மாறான ஒரு பொய்…. அண்ணாமலையின் புது உருட்டு: ஆதாரத்தோடு வெளியாவதால் மக்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Chennai ,Tamil Nadu ,BJP ,president ,
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...