×

பதற்றமான-மாநிலம்

இந்தியாவில் தான் இருக்கிறது மணி மணியாய் இயற்கை எழில் கொஞ்சும் மணிப்பூர் மாநிலம். ஆம், கடந்த 170 நாட்களுக்கு முன்பு வரை இப்படித்தான் வர்ணித்து இருக்க முடியும். ஆனால் தற்போது அம்மாநிலத்தில் சூழ்நிலை சொல்லில் அடங்காது. கலவரங்கள், வன்முறைகள், துப்பாக்கி சூடு, சடலங்கள் என்று கொடூரத்தின் உச்சம் தாண்டவமாடி வருகிறது. மெய்தி சமூகத்தினருக்கும் பழங்குடி அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி சமூகத்தினர் கடந்த ேம மாதம் மேற்கொண்ட பேரணியில் வெடித்த வன்முறை அணையாமல் புகைந்து கொண்டே இருக்கிறது. இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் வசிப்பிடங்களை விட்டு வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்துவிட்டனர்.

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். அமைதிக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் அம்மாநில மக்களின் உணர்வுகளை ஆளும் பாஜ அரசும், தொண்டு நிறுவனங்களும், அமைதி குழுக்களும் புரிந்து கொள்ளவே இல்லை. மக்கள் தொகையில் மெய்தி சமூகம் குறைவாக இருந்தாலும் கல்வி, சமூகம், பதவி என்று அனைத்திலும் அதிக சதவீதத்தில் இடம்பெற்றுள்ளனர். தற்போது அவர்களுக்கு பழங்குடி அந்தஸ்து அளிக்கப்பட்டால் குகி சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு, வேலைவாய்ப்பு, கல்வி ஆகியன பறிபோய்விடும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். இதனால் தங்கள் உரிமைகளை பாதுகாத்துக்கொள்ள வன்முறையை கையில் எடுத்துவிட்டனர்.

இவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மெய்தி சமூகத்தினரும் வன்முறையில் இறங்கிவிட்டனர். இதற்கு முன்பு இருசமூகத்தினரும் வணிக ரீதியான நட்புறவிலும் ஒற்றுமையாக இருந்து வந்தனர். ஆனால் தற்போது ஒருவர் வாழும் பகுதிக்குள் மற்றொரு சமூகத்தினர் செல்லவே அச்சப்படும் அளவிற்கு அசாதாரண சூழல் ஏற்பட்டுவிட்டது. இரு பிரிவு மக்களிடையே நம்பிக்கையை விதைத்து அமைதியை ஏற்படுத்த ஒன்றிய பாஜ அரசும், ஆளும் பாஜ அரசும் தோல்வி அடைந்துவிட்டது. பிரதமர் மோடி இதுவரை மணிப்பூர் வன்முறை குறித்து மவுனம் காத்து வருவது அம்மாநில மக்களுக்கு மட்டுமல்ல நாட்டுக்கே புரியாத புதிராக இருக்கிறது.

குகி சமூக பெண்கள் இருவரை நிர்வாணப்படுத்தி ஊர்வலம் நடத்திய சம்பவத்துக்கு பிறகு தற்போது மாணவன், மாணவி இருவரை கடத்தி பிணைக்கைதிகளாக வைத்து கொலை செய்துள்ள சம்பவத்தால் மீண்டும் அம்மாநிலத்தில் வன்முறை கட்டவிழ்க்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் மோதல் வலுத்துவருகிறது. மாணவ, மாணவிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இணைய சேவை மீண்டும் துண்டிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் தொடர் வன்முறையால் விலைவாசி உயர்வு, உணவு பஞ்சம் என்று மக்கள் வறுமையில் தவித்து வருகின்றனர். ஆனால் பாஜ அரசு இதை கண்டு கொள்வதாகவே தெரியவில்லை. ஒன்றிய, மாநில டபுள் இஞ்ஜின் அரசின் கையை மீறி மணிப்பூர் நிலவரம் கட்டுக்கடங்காமல் சென்றுவிட்டது.

இதனால் மணிப்பூரை 6 மாதத்துக்கு பதற்றமான மாநிலம் என்று அறிவித்து அமல்படுத்தியுள்ளது. 2020ம் ஆண்டு நாகாலாந்து மாநிலத்தை பதற்றம் நிறைந்த மாநிலமாக ஒன்றிய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. வன்முறையை கட்டுப்படுத்த முடியாத பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் வரலாற்று சாதனையாகவே இதை பார்க்க வேண்டும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

The post பதற்றமான-மாநிலம் appeared first on Dinakaran.

Tags : India ,Manipur ,
× RELATED இந்திய மக்களின் குரல் அதுவே தேர்தல்...