×

வயநாடு அருகே கேரள அரசு அலுவலகத்தில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்

திருவனந்தபுரம்: வயநாடு அருகே தலப்புழாவில் 6 பேர் அடங்கிய மாவோயிஸ்டுகள் கேரள வனத்துறை அலுவலகத்தை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள மாநிலம் பாலக்காடு, மலப்புரம், வயநாடு மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. அடிக்கடி இவர்கள் துப்பாக்கி மற்றும் ஆயுதங்களுடன் ஊருக்குள் வந்து பீதியை ஏற்படுத்துவது வழக்கமாகும்.

இந்நிலையில் நேற்று மதியம் வயநாடு மாவட்டம் தலப்புழா அருகே உள்ள கம்பமலை பகுதிக்கு 6 பேர் அடங்கிய மாவோயிஸ்டுகள் வந்தனர். இது வனப்பகுதியை ஒட்டியுள்ள ஒரு கிராமமாகும். அப்பகுதியில் ஒரு கேரள வனத்துறை அலுவலகம் உள்ளது. நேற்று விடுமுறை என்பதால் அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. நேராக அந்த அலுவலகத்திற்கு சென்ற மாவோயிஸ்டுகள் அலுவலக கதவு மற்றும் ஜன்னல்களை அடித்து நொறுக்கினர். இதன் பின்னர் அவர்கள் அலுவலக சுவற்றில் தமிழ் மற்றும் மலையாளத்தில் எழுதப்பட்ட போஸ்டர்களை ஒட்டிவிட்டு அங்கிருந்து காட்டுக்குள் தப்பிச் சென்றனர்.

தோட்ட நிலங்களை ஆதிவாசிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் கொடுக்க வேண்டும். தொழிலாளி என்ற நிலை மாறி அனைவரும் தோட்ட உரிமையாளர்கள் ஆக ஆயுதப் போராட்டம் அவசியமாகும் என்று அந்த போஸ்டர்களில் எழுதப்பட்டிருந்தது. இது குறித்து அறிந்ததும் போலீசார் மற்றும் தண்டர்போல்ட் அதிரடிப்படையினர் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். காட்டுக்குள் சென்று அவர்கள் தேடுதல் வேட்டை நடத்தினர். இந்த சம்பவத்தால் தலப்புழா பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

The post வயநாடு அருகே கேரள அரசு அலுவலகத்தில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Maoists ,Kerala government office ,Wayanad ,Thiruvananthapuram ,Kerala Forest Department ,Thalapuzha ,Kerala government ,Dinakaran ,
× RELATED தெலுங்கானாவில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை