புதுடெல்லி: டெல்லி கீர்த்தி நகர் மரப் பொருட்கள் சந்தைக்கு சென்ற ராகுல் காந்தி, அங்கு தச்சுத் தொழிலாளிகளை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது சில மர வேலைகளையும் ராகுல் ஆர்வமுடன் செய்தார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தொடர்ந்து, சாமானிய தொழிலாளிகளை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார். அரியானாவின் சோனிபட் மாவட்டத்தில் வயலில் நடவு செய்யும் பெண் விவசாயிகளை சந்தித்த ராகுல் அவர்களுக்கு தனது தாய் சோனியா காந்தி வீட்டில் விருந்தளித்தார். பின்னர் டெல்லியில் இருந்து சண்டிருக்கு லாரியில் பயணம் செய்து லாரி ஓட்டுநர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
சமீபத்தில் டெல்லியில் ஆசாத்பூர் மண்டியில் பழங்கள், காய்கறி விற்பனையாளர்களை சந்தித்த ராகுல் கடந்த 21ம் தேதி ஆனந்த் விகார் ரயில் நிலையத்தில் சுமை தூக்கும் கூலித் தொழிலாளிகளான போர்டர்களை சந்தித்தார். இதன் தொடர்ச்சியாக நேற்று அவர் டெல்லி கீர்த்தி நகர் மரப் பொருட்கள் சந்தைக்கு சென்றார். அங்குள்ள தச்சுத் தொழிலாளர்கள் ராகுலுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். ராகுலை பார்க்க தொழிலாளர்கள், பொதுமக்கள் பலரும் கூடினர். பின்னர் தொழிலாளர்களுடன் உரையாடிய ராகுல், அவர்களுடன் சில மர வேலைகளையும் உற்சாகமாக செய்தார்.
இந்த சந்திப்பு குறித்து ராகுல் தனது டிவிட்டரில், ‘‘ஆசியாவின் மிகப்பெரிய மரப் பொருட்கள் சந்தைக்கு சென்று தச்சுத் தொழிலாளி சகோதரர்களை சந்தித்தேன். அவர்கள் கடின உழைப்பாளிகள் மட்டுமல்ல, அற்புதமான கலைஞர்களும் கூட. நீடித்து உழைக்கக் கூடிய, அழகான மர சாமான்களை தயாரிப்பதில் வல்லுநர்கள். நாங்கள் நிறைய பேசினோம். அவர்களின் திறமைகளைப் பற்றி தெரிந்து கொண்டேன். அதில் சிலவற்றை கற்றுக் கொள்ள முயற்சித்தேன்’’ என கூறி உள்ளார். காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கில், ராகுல் தச்சு வேலை செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு, ‘பாரத் ஜோடோ யாத்திரை இன்னும் தொடர்கிறது’ என பதிவிடப்பட்டுள்ளது.
The post டெல்லி கீர்த்தி நகர் சந்தையில் தச்சுத் தொழிலாளிகளை சந்தித்து பேசினார் ராகுல்: மர வேலைகளை செய்தார் appeared first on Dinakaran.