×

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு குறுங்காடுகள் அமைக்கும் திட்டம்

திருவள்ளூர்: கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு குறுங்காடுகள் அமைக்கும் திட்டத்தை உதவி கலெக்டர் (பயிற்சி) ஆயுஷ் வெங்கட் வத்ஸ் தொடங்கி வைத்தார். கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் பொருட்டு தமிழ்நாடு முழுவதும் குறுங்காடுகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் சில நிறுவனங்கள் கண்டறியப்பட்டு குறுங்காடுகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதில், முதல் கட்டமாக அரண்வாயலில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஒரு ஏக்கர் பரப்பளவில் 8 முதல் 10 அடி உயரமுள்ள 3,500 மரக்கன்றுகள் நடப்பட்டன.

இதேபோல் குத்தம்பாக்கத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையின் வளாகத்தில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் 8 முதல் 10 அடி உயரமுள்ள 1,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு திருவள்ளூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ப.ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். உதவி பொறியாளர் சபரிநாதன் முன்னிலை வகித்தார். உதவி கலெக்டர் (பயிற்சி) ஆயுஷ் வெங்கட் வத்ஸ் குறுங்காடுகள் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். இதில் தொழிற்சாலையின் பிரதிநிதிகள் மரக்கன்றுகளை நட்டனர். இதனைத் தொடர்ந்து ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழி பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பை உபயோகத்தை ஊக்குவிக்கும் விதமாக தொழிற்சாலை ஊழியர்களுக்கு உதவி கலெக்டர் மஞ்சப்பை வழங்கினார்.

The post கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு குறுங்காடுகள் அமைக்கும் திட்டம் appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Ayush Venkat Vaths ,
× RELATED திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தேர்தலில்...