
சென்னை: கூட்டணியை அதிமுக முறித்த நிலையில், கடந்த ஒரு வாரமாக மவுனம் காத்து வரும் பாஜ தேசிய தலைமை, தற்போது அண்ணாமலையை மாநில தலைவராக தொடர அனுமதி அளித்துள்ளதோடு எடப்பாடிக்கு எதிரான அரசியலை முன்னெடுக்கவும் உத்தரவிட்டுள்ளது. இதனால், பாஜ மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன் சென்னையில் அண்ணாமலை வருகிற 3ம் தேதி ஆலோசனை நடத்தி தனி அணி அமைப்பது குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா மரணத்துக்குப் பின்னர், 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் இருந்து பாஜ தலைமையிலான கூட்டணியில் அதிமுக இடம்பெற்றது. அந்த தேர்தலில் தேனியில் மட்டும் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து நடந்த சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக தலைமையிலான அணியில் பாஜ இடம்பெற்றது. அதில் பாஜ 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதிமுக 66 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தேர்தல் தோல்விக்கு பிறகு அதிமுக- பாஜ இடையே மோதல் போக்கு உருவானது. தோல்விக்கு இரு அணியினரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர்.
இந்நிலையில் பாஜ தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். தொடர்ந்து அதிமுக, எடப்பாடியுடனான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது. ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வந்தனர். ஒரு கட்டத்தில் ஜெயலலிதா, அண்ணா குறித்து அண்ணாமலை கடுமையாக விமர்சித்தார். இதற்கு அதிமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அவர் தனது கருத்தை திரும்ப பெற வேண்டும் என்று அதிமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், அண்ணாமலை தனது கருத்தில் இருந்து பின்வாங்கவில்லை. ஒருபோதும் தான் கூறிய கருத்தில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்று அறிவித்தார். இதனால், அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்று அதிமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், எங்கள் கட்சி தலைவரை நீங்கள் சொல்லி மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று பாஜ மேலிடம் அறிவித்தது.
அதேநேரத்தில் எடப்பாடி பழனிசாமியை டெல்லிக்கு அழைத்துப் பேசிய அமித்ஷா, தமிழகத்தில் பாஜ 14 தொகுதிகளில் போட்டியிடும். அதில் ஓ.பி.ரவீந்திரநாத், டிடிவி.தினகரன், கிருஷ்ணசாமி, ஏ.சி.சண்முகம் ஆகியோருக்கு தலா ஒரு தொகுதியை நாங்கள் வழங்குவோம் என்று கூறினார். இதற்கு உடன்படாத எடப்பாடி பழனிசாமி, கட்சியினருடன் ஆலோசனை நடத்தி விட்டு பதில் சொல்கிறோம் என்று கூறிவிட்டு சென்னை திரும்பினார்.
இந்நிலையில்தான் அண்ணா குறித்து அண்ணாமலை பேசினார். இதனால் இரு கட்சியினருக்கும் இடையே மோதல் விஸ்வரூபம் எடுத்தது. இதையடுத்து கடந்த 25ம் தேதி நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தமிழகத்தில் பாஜவுடன் அதிமுக கூட்டணி கிடையாது. பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் அதிமுக விலகுவதாக அதிரடியாக அறிவித்தது. இது பாஜவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதிமுக குறித்தும் அதன் தலைவர்கள் குறித்தும் விமர்சித்த அண்ணாமலை, அதிமுக கூட்டணி முறிவு குறித்து டெல்லி மேலிடம் தான் பதில் சொல்லும் என்று கூறியிருந்தார். ஆனால், இதுவரை அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது தொடர்பாக அண்ணாமலை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. டெல்லி மேலிடமும் இதுவரை எந்த பதிலும் சொல்லாததால் தமிழக பாஜவினர் கடும் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.
அதேநேரத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தமிழக நிலவரம் குறித்து அறிக்கை அளிக்கும்படி அமித்ஷா கேட்டுக் கொண்டார். அதை தொடர்ந்து சென்னை வந்த நிர்மலா சீதாராமன், பாஜ நிர்வாகிகள் மட்டுமல்லாது, அதிமுகவினர் சிலரையும் சந்தித்துப் பேசியுள்ளார். அதை தொடர்ந்து அமித்ஷாவிடம் அவர் அறிக்கை அளித்தார். அதேநேரத்தில் டெல்லி தலைமை அண்ணாமலையை மாற்றுவது இல்லை என்ற முடிவுக்கு வந்தது.
நேற்று காலையில் தமிழக பாஜ முன்னாள் பொறுப்பாளர் சி.டி.ரவி, தமிழகத்தில் தாமரை மலரும் என்று டிவிட்டரில் பதிவிட்டார். இதனால் அதிமுகவின் கூட்டணி முறிவை பாஜ தலைமை ஏற்றுக் கொண்டதோடு, தனி பாதையில் செல்வது என்று முடிவெடுத்துள்ள தகவலும் வெளியானது. இதுகுறித்து அண்ணாமலைக்கும் தேசிய தலைமை சிக்னல் கொடுத்தது. மேலும் நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டி நம் கட்சியின் நிலைப்பாட்டை நீங்களே அறிவித்து விடுங்கள் என்று கூறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், பாஜ மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகளுடன் பாஜ தலைவர் அண்ணாமலை வருகிற 3ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார். சென்னையில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அதிமுக கூட்டணி முறிவு தொடர்பாக கட்சியினரிடம் அண்ணாமலை கருத்து கேட்க உள்ளார். அவர்கள் தெரிவிக்கும் கருத்தின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கையை அண்ணாமலை எடுப்பார் என்று தெரிகிறது. இதனால் கூட்டம் முடிந்த பிறகு தனி அணி அமைப்பது குறித்து அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வள்ளுவர் மண்ணில்
தாமரை மலரும்: சி.டி.ரவி டிவிட்
பாஜ முன்னாள் மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி டிவிட் ஒன்றை பதிவிட்டார். அந்த பதிவில், ‘புனித திருவள்ளுவர் மண்ணில் தாமரை மலரும். தமிழ்நாட்டில் பாஜ பெரிய அளவில் வளர்ச்சி பெறும்’என்று தெரிவித்துள்ளார். பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக திட்டவட்டமாக அறிவித்த நிலையில் சி.டி.ரவி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
* தமிழக பாஜ தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டதை தொடர்ந்து அதிமுக, எடப்பாடியுடனான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது.
* ஜெயலலிதா, அண்ணா குறித்து அண்ணாமலை கடுமையாக விமர்சித்ததால் அதிமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
* அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தியது. எங்கள் கட்சி தலைவரை நீங்கள் சொல்லி மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று பாஜ மேலிடம் அறிவித்தது.
The post கூட்டணி முறிந்து ஒரு வார அமைதிக்கு பின் எடப்பாடியுடன் மோத அண்ணாமலை முடிவு: அக்டோபர் 3ம் தேதி நடைபெறும் நிர்வாகிகள் கூட்டத்தில் தனி அணி பற்றி அறிவிக்கிறார் appeared first on Dinakaran.