
கூடுவாஞ்சேரி: பொதுமக்களின் பயன்பாட்டுக்காக கிளாம்பாக்கம் பஸ் நிலையம் ஆண்டு இறுதிக்குள் திறக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையான வண்டலூர் அடுத்த ஜிஎஸ்டி சாலை அருகே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ரூ.394 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், பஸ் நிலையத்தை அமைச்சர் சேகர்பாபு நேற்று காலை கிளாம்பாக்கம் பஸ் நிலைய கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். அப்போது, சி.எம்.டி.ஏ நிர்வாக முதன்மை செயலாளர் அபூர்வா, செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், கலெக்டர் ஏ.ஆர்.ராகுல்நாத் ஆகியோர் உடனிருந்தனர்.
பஸ் நிலைய ஆய்வுக்கு பிறகு அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக ஆட்சிக்காலத்தில் மக்களின் அடிப்படை தேவைகளை அறியாமல் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் கட்ட திட்டமிடப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் கட்டமைப்பு பணிகள் 60% முடிந்துள்ளது. மேலும், கூடுதலாக ரூ.70 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பணிகளை செய்து வருகிறோம். பஸ் நிலையத்தின் நுழைவாயில் முன்பு உள்ள ஜிஎஸ்டி சாலையின் இரண்டு பக்கத்திலும் ரூ.17 கோடி மதிப்பீட்டில் கல்வெட்டுகள் மற்றும் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணியும், ரூ.29 கோடி மதிப்பீட்டில் முடிச்சூர் சாலையில் ஆம்னி பேருந்து நிலையம் அமைக்கும் பணியும், ரூ.4.75 கோடி மதிப்பீட்டில் பேருந்து நிலையத்தின் முகப்பு வளைவு பணியும், பேருந்து நிலையத்திற்குள் ரூ.14.80 கோடி மதிப்பீட்டில் காவல் நிலையம் அமைக்கும் பணியும், ரூ.7.56 கோடி மதிப்பீட்டில் முதல் மீனாட்சிபுரம் வரை சாலை விரிவாக்க பணியும், ரூ.2.90 கோடி மதிப்பீட்டில் கூடுவாஞ்சேரியில் இருந்து ஆதனூர் வழியாக மண்ணிவாக்கம் வரை சாலை விரிவாக்க பணியும் இதேபோல், ஊனைமாஞ்சேரி போலீஸ் அகாடமி முதல் காரணைப்புதுச்சேரி வழியாக ஊரப்பாக்கம் வரை ரூ.6.15 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்க பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. தற்போது மேற்படிப்பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மேலும், வருகிற அக்டோபர் மாதத்திற்குள் மேற்படி பணிகள் முடிக்கப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் . இவ்வாறு அவர் கூறினார்.
* கான்டிராக்டர்களுக்கு முதன்மை செயலாளர் எச்சரிக்கை
சிஎம்டிஏ முதன்மை செயலாளர் அபூர்வா கூறுகையில், ‘ மே மாதத்திற்குள் பஸ் நிலைய பணிகளை முடித்து தருவோம் என்று சொன்னீர்கள். ஆனால் 4 மாதங்கள் ஆகியும் இன்னும் பணிகளை ஏன் முடிக்கவில்லை. சிஎம்டிஏ நிர்வாகத்தின் அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் கான்டிட்ராக்டர்களை அழைத்து, பணிகளை ஏன் இன்னும் முடிக்கவில்லை. அடுத்த மாதத்திற்குள் மேற்கண்ட பணிகளை விரைந்து முடிக்காவிட்டால் அவ்வளவுதான்’’ என்று கூறியும் அமைச்சர் முன்னிலையில் முதன்மை செயலாளர் டோஸ் விட்டார்.
The post கிளாம்பாக்கம் பஸ் நிலையம் விரைவில் திறக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.