×

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மாமல்லபுரத்தை சேர்ந்தவருக்கு சிறந்த சுற்றுலா வழிகாட்டி விருது: அமைச்சர்கள் வழங்கினர்

மாமல்லபுரம்: உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தமிழக சுற்றுலாத்துறை சார்பில் விருதுகள் வழங்கும் விழா நேற்று முன்தினம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடந்தது. இதில், சுற்றுலா வளர்ச்சிக்காக செயலாற்றிய சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த பயண பங்குதாரர், சிறந்த தங்குமிடம், சிறந்த உணவகம், சுற்றுலா வழிகாட்டிகள், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சிறந்த உணவகம், தங்குமிடம் மற்றும் படகு இல்லம் உள்ளிட்ட 44 விருதுகள் வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்தாண்டுக்கான சிறந்த சுற்றுலா வழிகாட்டியாக மாமல்லபுரத்தை சேர்ந்த பாலன் தேர்வு செய்யப்பட்டார்.

அவருக்கு, சிறந்த சுற்றுலா வழிக்காட்டிக்கான விருதை சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் வழங்கி பாராட்டினர். இவர், மாமல்லபுரம் வந்த பல்வேறு முக்கிய பிரமுகர்கள், சர்வதேச செஸ் வீரர்கள், ஜி20 மாநாட்டு பிரதிநிதிகள் உள்ளிட்ட பலருக்கு சிறந்த சுற்றுலா வழிகாட்டியாக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, சிறந்த சுற்றுலா வழிகாட்டி விருது பெற்ற பாலனை உள்ளூர் மக்கள், உள்ளூர் அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், சக சுற்றுலா வழிகாட்டிகள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

The post உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மாமல்லபுரத்தை சேர்ந்தவருக்கு சிறந்த சுற்றுலா வழிகாட்டி விருது: அமைச்சர்கள் வழங்கினர் appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,World Tourism Day ,Tamil Nadu ,
× RELATED மீன் வளத்துறை சார்பில் படகுகள் கணக்கெடுப்பு பணி தீவிரம்