×

சார்பதிவாளர் அலுவலகங்களில் சொத்து தொடர்பான புகைப்படங்கள் இணைக்கும் போது அதில் கையொப்பம் இட வேண்டும்: பதிவுத்துறை உத்தரவு


சென்னை: சார்பதிவாளர் அலுவலகங்களில் சொத்து தொடர்பான புகைப்படங்கள் இணைக்கும் போது அதில் கையொப்பம் இட வேண்டும் என்று பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்கள், அனைத்து மாவட்டப்பதிவாளர்கள், அனைத்து சார்பதிவாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்; பதிவுத்துறையில் போலியான ஆவணங்கள் பதியப்படுவதைத் தடுக்கவும் மற்றும் கட்டடங்கள் இருப்பதை மறைத்து காலி நிலம் என்று ஆவணங்கள் பதியப்படுவதனால் அரசுக்கு வரும் வருவாய் பெருமளவில் பாதிக்கப்படுவதை தடுக்கவும் Geo- Coordinates (புவியியல் ஆயங்கள்) உடன் புகைப்படம் எடுத்து அதனை ஆவணமாக இணைக்க ஏற்கனவே பார்வை -1-ou கண்டவாறு காலிமனைகளை பொறுத்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

இந்நிலையில் பதியப்படும் ஆவணத்தில் குறிப்பிடப்படும் சொத்தின் பக்கத்தில் இருக்கும் காலி இடத்தை புகைப்படம் எடுத்து அதனை ஆவணமாக சேர்த்து மோசடி பதிவு செய்யப்படுவதாக புகார்கள் வரப்பெற்றுள்ளதைத் தொடர்ந்து அரசு இது குறித்து தீவிரமாக ஆராய்ந்து அதனடிப்படையில், சார்பதிவாளர் அலுவலகங்களில் பதியப்படும் அனைத்து அசையா சொத்துக்கள் தொடர்பான அனைத்து ஆவணங்களுடன் அந்த சொத்துக்கள் குறித்த புகைப்படம் ஜியோ கோ-ஆர்டினேட்ஸோடு எடுக்கப்பட்டு அதனையும் ஆவணத்துடன் இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகிறது.

மேலும், மேற்கூறியபடி அசையா சொத்து தொடர்பான புகைப்படம் ஜியோ கோ- ஆர்டினேட்ஸோடு எடுக்கப்பட்டு கணினியில் ஒளிவருடல் செய்திட ஏதுவாக A4 அளவிலான தாளில் அச்சு எடுத்து ஆவணத்தின் ஒரு பகுதியாக இணைக்கப்பட்டு, பக்க எண் வழங்கப்பட்டு, ஒளிவருடல் செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. மேற்கூறிய புகைப்பட அச்சு பிரதியில் ஆவணம் எழுதிய மற்றும் எழுதி வாங்கிய நபர்களால் கையொப்பம் செய்யப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும், இந்நடைமுறையானது 01.10.2023 முதல் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் பின்பற்றப்படும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் எனவும் இந்நடைமுறையினை பொது மக்கள் அறியும் வண்ணம் அலுவலக விளம்பர பலகையில் இச்சுற்றறிக்கையினை ஒட்டி விளம்பரபடுத்திடவும் அறிவுறுத்தப்படுகிறது.

இந்நடைமுறையானது நேரடியாக இணையவழி தாக்கல் செய்யப்பட்டு பதியப்படும் ஆவணங்களுக்கும் (Online presentation and registration), வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் பெறும்போது பயன்படுத்தப்படும் அடமான ஆவணம், உரிமை ஆவணங்கள் ஒப்படைப்பு ஆவணம், வங்கிகள்/நிதிநிறுவனங்களால் எழுதிகொடுக்கப்படும் ரசீது ஆவணம் மற்றும் உயில் ஆவணங்களுக்கும் பொருந்தாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இந்நடைமுறை சார்பதிவகங்களில் முழுமையாக செயல்படுத்தப்படுவதை மாதாந்திர தணிக்கையின் போது ஆய்வு செய்யப்பட வேண்டும் எனவும் இந்நடைமுறையினை புகார்களுக்கு இடமின்றி செயல்படுத்திட அனைத்து அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

இச்சுற்றறிக்கை பெறப்பட்டமைக்கு துணை பதிவுத்துறை தலைவர்களால் அவர்களது மண்டலத்தை பொறுத்து அனைத்து அலுவலர்களிடமிருந்தும் ஒப்புதல் பெற்று ஒருங்கிணைந்த ஒப்புதல் அறிக்கையினை இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

The post சார்பதிவாளர் அலுவலகங்களில் சொத்து தொடர்பான புகைப்படங்கள் இணைக்கும் போது அதில் கையொப்பம் இட வேண்டும்: பதிவுத்துறை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Registry Department ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…