×

இளம் பெண் பேச்சாளர்களை உருவாக்கும் பட்டிமன்ற நடுவரின் மனைவி!

நன்றி குங்குமம் தோழி

அமுதா லியோனி

பட்டிமன்றம்… பேச்சாளர்களை உருவாக்கும் தளம். அப்படிப்பட்ட சிறந்த மேடையினை தன் வசமாக்கிக் கொண்டவர்தான் அமுதா லியோனி. இவர் பிரபல பேச்சாளர், பட்டிமன்ற நடுவர் மற்றும் தமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவர் திண்டுக்கல் லியோனி அவர்களின் துணைவியார். தன் கணவரின் பட்டிமன்ற பேச்சினால் ஈர்க்கப்பட்டு, பேச்சாளர் ஆனவர், அவரைப்போல் பேச்சுத் திறமைக் ெகாண்ட பெண்களை பேச்சாளராக உருவாக்கி வருகிறார்.

* உங்களைப் பற்றி?

நான் பிறந்தது, படிச்சது எல்லாம் திண்டுக்கல் அருகில் உள்ள “புளியமரத்துக்கோட்டை” என்ற குட்டி கிராமத்தில்தான். எங்களுடைய சாதாரண மிடில் கிளாஸ் குடும்பம் தான். அப்பாவின் வருமானத்தில் தான் எங்க குடும்பம் நகர்ந்தது. ெபரிய வசதி எல்லாம் கிடையாது. அவர் கஷ்டப்பட்டு தான் எங்களைப் படிக்க வச்சார். அதனால் என்னால் ப்ளஸ் டூ வரைதான் படிக்க முடிந்தது.

* பட்டிமன்ற பேச்சாளர்?

பட்டிமன்ற நடுவரான புகழ்பெற்ற திண்டுக்கல் லியோனி அவர்களின் மனைவி ஆன பிறகு தான் எனக்கு பேச்சாளராக வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. அவர் கலந்துகொள்ளும் அனைத்து நிகழ்ச்சிக்கும் நான் உடன் செல்வேன், இப்போதும் சென்று வருகிறேன். சிறுவயது முதலே தீவிர தமிழ் பற்று உள்ளவள். அதனால் பலர் பாராட்டும் அளவில் பேசும் திறமை என்னிடம் இருந்தது. ஆனால் பள்ளியில் படிக்கும் போது நான் எந்த வித மேடை நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டது இல்லை. எனது பேச்சுத்திறமை பற்றி என் கணவருக்கு நன்றாக தெரியும். என் கணவர் பட்டிமன்ற மேடைகளில் பலரும் ரசிக்கும்படி பேசுவார்.

அதே சமயம் அவருக்கு நல்ல குரல் வளம் இருப்பதால் பாடவும் செய்வார். எந்த சமயத்தில் எப்படி பேசினால், நகைச்சுவையாக கூறினால் எந்த திரைப்பட பாடலை பாடினால் மக்கள் வரவேற்பார்கள் என்பதை அவர் பேச்சில் இருந்து அறிந்து கொண்டேன். நான் முதன்முதலாக பேசியது எதிர்பாராதவிதமாக நடந்ததுதான். லண்டன் நிகழ்ச்சிக்கு சென்றபோது ஒரு பேச்சாளருக்கு “விசா” கிடைக்காமல் போனதால் அவருக்கு பதிலாக என் கணவர் என்னை பேச வைத்தார்.

சந்தோஷமான வாழ்க்கை திருமணத்திற்கு முன்பா? பின்பா? என்ற தலைப்பில் தான் பேசி பலத்த கைதட்டல், பாராட்டல் பெற்றேன். கிராமத்தில் பிறந்த என் பேச்சை லண்டன் மக்கள் கேட்டு ரசிப்பார்கள் என்று கனவுகூட நான் காணவில்லை. என் கணவர் என்னை பாராட்டியபோது வசிஷ்டர் வாயால் “பிரம்மரிஷி” பட்டம் பெற்றதுபோல் மெய்சிலிர்த்து மகிழ்ந்தேன். அதனைத் தொடர்ந்து அவரின் நிகழ்ச்சியில் எல்லாம் பேச ஆரம்பித்தேன்.

* திறமைமிக்க இளம் பேச்சாளர்களை உருவாக்கியது எப்படி?

பல நிகழ்ச்சிகளில் திறமை இருந்தும் பல இளம் பெண்கள் சில காரணங்களுக்காக ஒதுக்கப்பட்டு அவர்கள் கண்ணீர்விட்டு அழுவதை பார்த்து மனம் நெகிழ்ந்து போனேன். அப்படிப்பட்ட தகுதி, திறமை இருந்தும் நிராகரிக்கப்பட்ட இளம் பெண்களுக்கு வாய்ப்பு தந்து அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று விரும்பினேன். என் கணவர் தலைமையில் அவர்களை பேச வைத்தேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. கடந்த ஆறு வருடமாக ஏராளமான பட்டிமன்ற நிகழ்ச்சிகளை தமிழ்நாடு முழுவதும் நடத்தி நூற்றுக்கணக்கான இளம் பெண்களை பேசவைத்து அவர்களை சிறந்த பேச்சாளராக உருவாக்கி இருக்கிறேன். அவர்கள் பெரிய அளவில் புகழ்பெற்ற பேச்சாளர்களாக செயல்பட்டு வருவதை பார்க்கும் போது மனசுக்கு ரொம்பவே சந்தோஷமாக உள்ளது.

* மறக்க முடியாதது?

ஒரு முறை வாய்பேச முடியாத பிறவி ஊமை பெண் ஒருவர் பேச விரும்பினார். அவர் சைகையில் கூறுவதை உடன் இருந்த பெண் பேசிய போது கிடைத்த கைத்தட்டலுக்கு அந்த பெண் ஆனந்தக்கண்ணீர் விட்டு அழுத போது என் மனம் மிகவும் நெகிழ்ந்து போனது. இலங்கையில் இனப்போர் நடந்த சமயம். யாழ்ப்பாணம் செல்லும் வழியில் நூறு அடிக்கு பரிசோதனை நடைபெறும். அதை எல்லாம் தாண்டி இலங்கையில் பட்டிமன்றம் நடத்தி வந்ததை இன்றும் மறக்க முடியாது.

காரணம் நிகழ்ச்சிக்கு வந்த இலங்கை தமிழர்கள் ‘இரண்டு வருடம் கழித்து இப்போது தான் சிரிக்கிறோம்’ என்ற போது எங்களால் அழுகையை அடக்க முடியவில்லை. “வவுனியா”வில் “உயிர்இழை” அமைப்பு சார்பாக நடைபெற்ற பட்டிமன்ற நிகழ்ச்சியில் போரில் தண்டுவடம் பாதிக்கப்பட்ட இளம் பெண்களுக்கு அந்த நிகழ்ச்சிக்காக நாங்க பெற்ற சன்மானத்தினை வழங்கிய போது கிடைத்த ஆத்ம திருப்தியை மறக்க முடியாது.

தொகுப்பு: விஜயா கண்ணன்

The post இளம் பெண் பேச்சாளர்களை உருவாக்கும் பட்டிமன்ற நடுவரின் மனைவி! appeared first on Dinakaran.

Tags : Amuda Leoni Pattimanram… ,Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...