×

கோவை மத்திய சிறையில் வார்டன்களால் தாக்கப்பட்ட 7 கைதிகளுக்கு சிகிச்சை: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கோவை மத்திய சிறையில் வார்டன்களால் தாக்கப்பட்ட ஏழு கைதிகளுக்கு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை வழங்க சிறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், அவர்களின் மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது. கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சிவகங்கையைச் சேர்ந்த தினேஷ் என்பவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அவரது தாய் செங்கையம்மாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

மனுவில், கோவை சிறையில் கைதிகள்-வார்டன்கள் மோதல் குறித்து வெளியான செய்தியை பார்த்து எங்கள் வழக்கறிஞர் அப்துல் ரஹ்மானிடம், மகனை சந்தித்து வரும்படி சொன்னேன். அதன்படி தினேஷை எங்கள் வழக்கறிஞர் சந்தித்த போது, அவர் வார்டன்களால் கடுமையாக தாக்கப்பட்டதும், பலத்த காயமடைந்த நிலையில் முறையான சிகிச்சை வழங்கப்படாததும் தெரிய வந்தது. எனது மகன் உள்பட ஏழு விசாரணைக் கைதிகள் தாக்கப்பட்டுள்ளனர். காயமடைந்துள்ள எனது மகனுக்கு உரிய சிகிச்சை வழங்கும்படி சிறைத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் ஆர்.சக்திவேல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நான்கு சிறை வார்டன்களும் தாக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு சிறை கைதிகளே காரணம் எனவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தாக்குதலுக்கு உள்ளான ஏழு கைதிகளுக்கும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சை வழங்க வேண்டும். 7 கைதிகள் மற்றும் 4 வார்டன்களின் மருத்துவ அறிக்கைகளை செப்டம்பர் 29ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசுத்தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை 29ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

The post கோவை மத்திய சிறையில் வார்டன்களால் தாக்கப்பட்ட 7 கைதிகளுக்கு சிகிச்சை: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Govai Central Prison ,Chennai ,Gov Government Medical College Hospital ,Gov Central Jails ,Wardons ,Goa Central Prison ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...