×

எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவு விவசாயத்துறைக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்: கே.எஸ்.அழகிரி இரங்கல்

சென்னை: வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; சி. சுப்பிரமணியம் அவர்கள் ஒன்றிய அரசில் விவசாயத்துறை அமைச்சராக இருந்த போது, பசுமைப் புரட்சி நிகழ்த்தி நாட்டில் உணவு பஞ்சத்தை போக்குவதற்கு பெரும் துணையாக இருந்த விவசாய விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் மரணமடைந்த செய்தி மிகுந்த வேதனையையும், துயரத்தையும் தருகிறது. நாட்டில் விவசாய உற்பத்தியை பெருக்குவதற்கு ஐந்தாண்டு திட்டங்கள் மூலம் ஒன்றிய அரசின் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதில் தமது வாழ்நாளில் பெரும்பகுதியை செலவழித்தவர்.

தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டம், சூணாம்பேட்டில் அமைக்கப்பட்ட அக்ரோ பவுண்டேஷன் தலைவராக இருந்து புதிய விவசாய உத்திகளை அறிமுகப்படுத்தி விவசாயிகள் பயன்படுத்துவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் விவசாயிகளின் விளைப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்வதற்காக இவர் தலைமையில் தான் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் பரிந்துரை தான் விவசாயிகளின் விளைப் பொருட்களுக்கு கட்டுப்படியாகக் கூடிய உரிய பரிந்துரையை அறிமுகம் செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்தது.

கிராமப்புற மக்களின் மேம்பாடு, வேளாண் ஆராய்ச்சிகளுக்காக கொலம்பியா பல்கலைக்கழகத்தின் “வால்வோ” விருது, ராமன் மகசேசே விருது உட்பட தேசிய மற்றும் சர்வதேச அளவில் விருதுகளைப் பெற்றவர். உலகம் முழுவதும் உள்ள 38 பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன. எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களுடைய மறைவு விவசாயத்துறைக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவு விவசாயத்துறைக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்: கே.எஸ்.அழகிரி இரங்கல் appeared first on Dinakaran.

Tags : MS Swaminathan ,KS Azhagiri ,Chennai ,Tamil Nadu Congress Committee ,President ,KS Alagiri ,
× RELATED அதிமுக- பாஜ பிளவு என்பது தவறாக கதை,...