×

தமிழகம் முழுவதும் இன்று மிலாது நபி கொண்டாட்டம்: வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் மிலாது நபி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். இறை தூதர் முகமது நபிகள் பிறந்த தினத்தை மிலாது நபி விழாவாக மகிழ்ச்சியுடன் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு மிலாது நபி பண்டிகை 28ம் தேதி கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் மிலாது நபி வழக்கமான உற்சாகத்துடன் கொண்டப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமிய பெருமக்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பறிமாறிக்கொண்டனர். சிறப்பு கூட்டங்கள் நடைபெற்றது.

அப்போது இறைத்தூதர் முகமது நபியின் சிறப்புக்களை பற்றியும் அவரது போதனைகளைப் பற்றியும் பகிர்ந்து கொண்டனர். இந்த நாளில் முகம்மது நபியின் போதனைகளை போற்றும் விதமாக இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை வாசிப்பது மிக முக்கிய கடமையாக வைத்துள்ளனர். பெரும்பாலான இஸ்லாமியர்கள் இந்த நாளில் நோன்பு வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதே நேரத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உணவு மற்றும் உடைகளை தானமாக வழங்கினர். இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடென்ட் அபூபக்கர் அளித்த பேட்டியில், ”மனிதகுலம் இன்றளவும் மாண்புடன் மனிதத்தன்மையுடன், வரைமுறையுடன் இருப்பதற்கு அடித்தளமிட்டது நபிகள் நாயகத்தின் வாழ்வியல் நெறிமுறை தான்.

பிறந்தநாள் முதல் வளர்ந்த காலம் வரை ஒவ்வொரு நாளையும் சிறந்தநாளாய் மாற்றினார் நபிகள். வறுமை வாட்டிய போதும், உடனிருந்தோர் சிறுமை காட்டியபோதும் முகம் கோணாமல் அடுத்தவர் அகம் நோகாமல் புன்னகையால் இதயங்களை வென்ற நபிகளாரின் பிறந்தநாளே மிலாது நபி. அவரது போதனைகளும், அறிவுரைகளும் இன்றும் நமக்கு அவசியமான தேவை. அனைத்து வேறுபாடுகளும் மறந்து தான் ஈட்டிய பொருள் கொண்டு இல்லாதவர் பசி போக்குவதும்,விரல் கொண்டு கண்ணீர் துடைப்பதும் நம் கடமை” என்றார். அதே நேரத்தில் சென்னையில் பெரும்பாலான இடத்தில் இஸ்லாமியர்கள் ஏழை,எளிய மக்களுக்கு உணவுகளை வழங்கினர்.

The post தமிழகம் முழுவதும் இன்று மிலாது நபி கொண்டாட்டம்: வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர் appeared first on Dinakaran.

Tags : Miladu Nabi Celebration ,Tamil Nadu ,Chennai ,Miladu Nabi ,Nabi Milad ,
× RELATED கோடைகாலத்தில் சூரியனிலிருந்து வரும்...