
சென்னை : பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். அவரது வயது 98. பசுமை புரட்சியின் தந்தை எனவும் எம்.எஸ். சுவாமிநாதன் அழைக்கப்பட்டு வந்தார்.அதிக விளைச்சல் தரும் புதிய நெல் ரகங்களை அறிமுகப்படுத்தி, நெல் உற்பத்தியை பெருக்க வழிவகை செய்தவர் இவர்.நாட்டின் அரிசி, கோதுமை விளைச்சலை அதிகரிப்பதற்கான பசுமை புரட்சி திட்டங்களை செயல்படுத்தியவர் எம்.எஸ். சுவாமிநாதன். ஆசியாவின் நோபல் பரிசு என அழைக்கப்படும் மகசேசே விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றவர்.
வாழ்க்கை வரலாறு!
தமிழகத்தின் கும்பகோணத்தில் மருத்துவர் சாம்பசிவன்- பார்வதி தங்கம்மாள் தம்பதியின் இரண்டாவது மகனாக 1925, ஆகஸ்ட் 7ல் பிறந்தார் சுவாமிநாதன். கும்பகோணம் கத்தோலிக் லிட்டில் பிளவர் உயர்நிலைப் பள்ளியில் அவர் படித்தார். பிறகு திருவனந்தபுரம் மஹாராஜா கல்லூரியில் விலங்கியலில் பி.எஸ்சி. முடித்தார் (1944). 1943ல் வங்கப் பஞ்சத்தின் கொடுமைகளை அறிந்த சுவாமிநாதன், நாட்டின் உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன், விவசாய ஆராய்ச்சியை தனது துறையாகத் தேர்ந்தெடுத்தார்.பிறகு மெட்ராஸ் வேளாண்மைக் கல்லூரியில் (தற்போதைய தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோவை) சேர்ந்த சுவாமிநாதன், வேளாண்மையில் பி.எஸ்சி. பட்டம் பெற்றார். அதையடுத்து, டெல்லியிலுள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் (IARI) மரபியல், விதைப் பெருக்கவியல் துறையில் முதுநிலை படிப்பு பயின்ற அவர், 1949-இல் உயிரணு மரபியலில் (Cytogenetics) பட்டம் பெற்றார்.
1950-ல் பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் தாவர விதைப் பெருக்க நிறுவனத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டு, 1952-இல் பிஎச்.டி. பட்டம் பெற்றார். டெல்லியிலுள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலில் 1954 முதல் 1966 வரை, ஆசிரியர், ஆராய்ச்சியாளர், ஆய்வு நிர்வாகி ஆகிய பொறுப்புகளை வகித்த அவர், 1966 முதல் 1972 வரை அதன் இயக்குநராகப் பணி புரிந்தார். இதனிடையே கட்டாக்கிலுள்ள மத்திய அரிசி ஆராய்ச்சி நிலையத்திலும் அவர் 1954 முதல் 1972 வரை கூடுதலாகப் பணியாற்றினார்.
1966-ல் பசுமைப்புரட்சிக்கான திட்டங்கள் தீட்டப்பட்டபோது எம்எஸ்.சுவாமிநாதன் அதில் இடம்பெற்று, திட்டத்தின் வெற்றிக்கு வேளாண் ஆராய்ச்சியைப் பயன்படுத்தினார். அதன் விளைவாக, 1971 முதல் 1977 வரை தேசிய வேளாண் ஆணைய உறுப்பினராகவும், 1972 முதல் 1979 வரை, இந்திய வேளாண் ஆராய்ச்சி கூட்டமைப்பின் (ICAR) தலைவராகவும் அவர் பொறுப்பு வகித்தார்.1979-80-இல் மத்திய வேளாண் அமைச்சகத்தின் முதன்மைச் செயலாளராகவும், 1980-82-இல் மத்திய திட்டக்குழு உறுப்பினராகவும் அவர் பொறுப்பு வகித்தார். 1981-82-இல் தேசிய உயிரித் தொழில்நுட்ப வாரியத்தின் தலைவராகவும் அவர் இருந்தார்.
உலக அளவிலும் சுவாமிநாதனின் திறமை அங்கீகரிக்கப்படுகிறது. 1981-85-இல் அமெரிக்காவின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) தலைவராகவும், 1982 முதல் 1988 வரை பிலிப்பைன்ஸில் உள்ள சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிலையத்தின் (IRRI) தலைமை இயக்குநராகவும் அவர் பொறுப்பேற்றிருந்தார். 1984-90-இல் சர்வதேச இயற்கைவளப் பாதுகாப்பு சங்கத்தின் தலைவராக அவர் செயல்பட்டார்.
இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையின் நியமன உறுப்பினராகவும் (2007-13), தேசிய விவசாயிகள் நல ஆணையத்தின் தலைவராகவும் (2004-06), தேசிய வேளாண் அறிவியல் அகாதெமியின் தலைவராகவும் (1991-96, 2005-07) அவர் இருந்துள்ளார். பல்வேறு அரசுக் குழுக்களில் நிர்வாகியாகவும் பல கல்வி நிறுவனங்களின் உறுப்பினராகவும் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு, உலகம் முழுவதிலுமுள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள் 70 கெளரவ முனைவர் பட்டங்களை அளித்துள்ளன.
ராமன் மகசேசே விருது (1971), உலக உணவு பரிசு (1987), யுனெஸ்கோ மகாத்மா காந்தி விருது (2000), இந்திரா காந்தி தேசிய ஒருமைப்பாட்டுக்கான விருது (2013), இந்திய அரசின் பத்மஸ்ரீ (1967), பத்மபூஷண் (1972), பத்மவிபூஷண் (1989) உள்ளிட்ட 40-க்கு மேற்பட்ட விருதுகளையும் கௌரவங்களையும் எம்.எஸ்.சுவாமிநாதன் பெற்றுள்ளார். சென்னையில் அவர் நிறுவிய எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை நிறுவனம், நீடித்த வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சிக்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
The post பசுமை புரட்சியின் தந்தை என அழைக்கப்பட்ட வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் காலமானார்!! appeared first on Dinakaran.