×

தமிழகத்தை முன்னோடியாக கொண்டு தெலங்கானா பள்ளிகளில் காலை உணவு திட்டம்: அக்.24ம் தேதி அமலுக்கு வருகிறது!!

திருமலை: தமிழகத்தைப் போலவே தெலங்கானாவிலும் காலை சிற்றுண்டி திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது. தமிழ்நாட்டில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவு மட்டுமின்றி, காலையிலும் உணவு வழங்கி கல்வி கற்பிக்கும் விதமாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்து அதனை செயல்படுத்தி வருகிறார். இத்திட்டம் நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்ட காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்ய தெலங்கானா அரசு, அதிகாரிகள் அடங்கிய குழுவை அனுப்பி வைத்தது.

அந்த ஆய்வின் அடிப்படையில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், தெலங்கானா மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்க உத்தரவிட்டார். இந்த திட்டத்திற்கு அரசு ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. பள்ளி கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், ஊரகப் பள்ளிகள் என 28,807 பள்ளிகளில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் மூலம் 1 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் 23,05,801 மாணவர்கள் பயன்பெற உள்ளனர். இதனைத் தொடர்ந்து உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் வரை காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

வரும் அக்டோபர் 24ம் தேதி விஜயதசமி முதல் பள்ளிகளில் காலை உணவு வழங்குவதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. மாணவர்களுக்கு வழங்கப்படும் மெனுவையும் பள்ளிக் கல்வித் துறை தயாரித்துள்ளது. அதன்படி, திங்கள் கிழமை கோதுமை ரவா உப்மா மற்றும் சட்னியும், செவ்வாய் கிழமை அரிசி ரவா கிச்சடியுடன் சட்னியும் வழங்கப்படவுள்ளது. புதனன்று பம்பாய் ரவா உப்மா மற்றும் சட்னி, வியாழன் கிழமை ரவா பொங்கல் மற்றும் சாம்பார், வெள்ளிக்கிழமை தினை ரவா கிச்சடியுடன் சாம்பார், சனிக்கிழமை கோதுமை ரவா கிச்சடி மற்றும் சட்னி மாணவர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள காலை உணவு திட்டம் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

The post தமிழகத்தை முன்னோடியாக கொண்டு தெலங்கானா பள்ளிகளில் காலை உணவு திட்டம்: அக்.24ம் தேதி அமலுக்கு வருகிறது!! appeared first on Dinakaran.

Tags : Tirumalai ,Tamil Nadu ,Telangana ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...