
புதுக்கோட்டை, செப்.28:விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்றுத்துறை விவசாயிகள் சம்பா பருவ நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற தரமான விதைகளை பயன்படுத்த வேண்டும்.வேளாண்மையின் உற்பத்திக்கு விதை அடிப்படை இடுபொருளாகும். விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைக்கச் செய்வதற்காக தமிழ்நாடு அரசு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்றுத்துறையின் கீழ் விதைச்சான்றளிப்பு , விதை ஆய்வு , விதைப்பரிசோதனை மற்றும் பயிற்சி ஆகிய திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள நம்பர் 30 , ராமலிங்கம் தெரு,திருக்கோகர்ணம் என்ற முகவரியில் விதைப்பரிசோதனை நிலையம் இயங்கி வருகிறது.
விதையின் தரத்தை அறிய விதைப்பரிசோதனை செய்யப்படுகிறது. இப்பரிசோதனையில் முளைப்புத்திறன், புறத்தூய்மை, ஈரப்பதம் மற்றும் பிற ரக கலப்பு கண்டறியப்பட்டு உடனுக்குடன் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றது. இவ்விதைப்பரிசோதனை நிலையத்தில் சான்று விதை ,ஆய்வாளர் விதை, விவசாயிகளிடமிருந்தும், விதை விற்பனையாளர்களிடமிருந்தும், விதை உற்பத்தியாளர்களிடமிருந்தும் பெறப்படும் பணிவிதை மாதிரிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது.
சம்பா சாகுபடியில் அதிக மகசூல் பெற விவசாயிகள் தங்களது கைவசம் உள்ள நெல் விதைகளை விதைக்கும் சூழ்நிலையில் விதைக்க உள்ள விதையில் முளைப்புத்திறன் குறைந்த பட்சம் 80 விழுக்காடு புறத்தூய்மை 98 விழுக்காடு அதிக பட்ச ஈரப்பதம் 13 விழுக்காடுக்குள் பிறரக கலவன் ஆதார விதைக்கு 0.05 சதவிகிதமும் சான்று விதைக்கு 0.2 சதவிகிதமும் உள்ளதா? என்பதை அறிந்து விதைப்பு செய்தால் நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற வாய்ப்புள்ளது.
எனவே விவசாயிகள் தங்களது கைவசம் உள்ள நெல் விதைகளின் முளைப்புத்திறன், புறத்தூய்மை, ஈரப்பதம் மற்றும் பிற இரகக் கலவன் பிற பயிர் விதை அளவு அறிய 400 கிராம் விதையினை துணிப்பையில் இட்டு மேலும் ஈரப்பதம் அறிய தனியே 100 கிராம் அளவு விதைகளை காற்று புகாத பாலிதீன் பைகளில் இட்டு பயிர் இரகம் தேவையான ஆய்வு விபரங்களை குறிப்பிட்டு மேற்க்கண்ட முகவரியில் மாதிரிகளைக் கொடுத்து, மாதிரிக்கு ரூ.80 மட்டும் செலுத்தி விதைகளை பரிசோதனை செய்து தரமான விதைகளை பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டுமாறு மூத்த வேளாண்மை அலுவலர் சுமித்ராதேவி மற்றும் வேளாண்மை அலுவலர் செல்வம் ஆகியோர் கேட்டுக் கொண்டனர்.
The post சம்பா பருவ நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற தரமான விதைகளை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் appeared first on Dinakaran.