×

மாவட்டம் முழுவதும் 98 கிராமங்களில் முளைப்பாரி திருவிழா

ராமநாதபுரம்,செப்.28: ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று 98 கிராமங்களில் முளைப்பாரி மற்றும் கோயில் திருவிழாக்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயம் பிரதான முக்கிய தொழிலாக உள்ளது. இங்கு மானாவாரி எனும் பருவ மழையை நம்பி ஒரு போகம் விவசாயம் செய்யப்படுகிறது. மாவட்டத்தில் செப், அக்டோபரில் பெய்யக் கூடிய வடகிழக்கு பருவ மழையை எதிர்நோக்கி ஆடி பட்டத்தில் முதல் உழவும், தொடர்ந்து ஆவணி, புரட்டாசி மாதங்களில் மழை பெய்தவுடன் இரண்டாவது உழவுடன் கூடிய விதைப்பு பணிகள் நடப்பது வழக்கம்.

இதற்கு முன்னதாக தொழில் நிமித்தம் உள்ளிட்ட பல காரணங்களால் வெளி பகுதிகளில் வசிக்கும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் கிராம மக்களுக்கு வரவும், விவசாயம் செழிக்க வேண்டும் என்பதற்காகவும், ஒற்றுமைக்காக திருவிழாக்கள் நடத்தப்படுகிறது. கடந்தாண்டுகளில் விளைவிக்கப்பட்ட நெல் உள்ளிட்ட தானியங்களில் பொங்கல் வைத்தும், முளைப்பாரி எடுத்தும் திருவிழா கொண்டாடி வருவது கிராமங்களில் பல தலைமுறையாக நடந்து வருகிறது.

அதன்படி புரட்டாசி வளர்பிறை வாரமான தற்போது மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் 10 நாள் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இரவு நேரத்தில் பெண்கள் கும்மியடித்தும், இளைஞர்கள் ஒயிலாட்டம் ஆடியும், ஆடி பாடி கொண்டாடி வருகின்றனர். மாவட்டத்தில் காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் எல்லைகளின்படி ராமநாதபுரத்தில் 7, பரமக்குடியில் 30, கமுதியில் 12, ராமேஸ்வரத்தில் 12, கீழக்கரையில் 17, திருவாடானையில் 4 மற்றும் முதுகுளத்தூரில் 16 கிராமங்கள் என 98 கிராமங்களில் நேற்று திருவிழா நடந்தது.

கோயில்களின் முன்பு பொங்கல் வைத்தல், அம்மன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது. இதனை போன்று பாரம்பரிய மேளதாளங்கள், வானவேடிக்கை, சிலம்பாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற கலைகளுடன் பால்குடம், அக்னிச்சட்டி முளைப்பாரி ஊர்வலம் உள்ளிட்டவை நடந்தது.

சிறுவர், சிறுமியர், இளைஞர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு கொண்டாடப்பட்டது. மேலும் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் மேடை நாடகம், கிராமிய நிகழ்ச்சிகள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள், திருவிளக்கு பூஜை, அன்னதானங்கள் வழங்கப்பட்டது. அனைத்து பகுதிகளிலும் வரும் சனிக்கிழமை வரை திருவிழாக்கள் நடக்க உள்ளது. கிராம முளைக்கொட்டு முன்னிட்டு வெளிநாடுகள், வெளிமாவட்டங்கள், வெளியூர்களில் வேலை, படிப்பு நிமிர்த்தமாக சென்றவர்கள் விடுமுறைக்கு வந்து கொண்டாடியதால் மாவட்டம் முழுவதும் விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது.

The post மாவட்டம் முழுவதும் 98 கிராமங்களில் முளைப்பாரி திருவிழா appeared first on Dinakaran.

Tags : Mulaipari festival ,Ramanathapuram ,Mulaipari ,Ramanathapuram district ,
× RELATED நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற...