தொண்டி, செப்.28: தமிழக அரசின் புதிய திட்டமான காலை உணவு திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மாணவர்கள் கல்வியை துவங்குவார்கள். இதேபோல் புதுமைப்பெண் திட்டம் மூலம் கிராமபுற பெண்கள் மற்றும் ஏழை குடும்ப பெண்கள் தங்கள் உயர் கல்வி படிப்பை தொடர்வார்கள் என்பதில் ஐயமில்லை. இதனால் தமிழகம் கல்வி துறையில் புதிய பாதையில் வெற்றி நடை போடும் என பொதுமக்கள் கூறுகின்றனர்.
அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று பெண்களை ஒதுக்கி கல்வியில் பின்னோக்கி வைத்திருந்த சமூகத்தில் பெண்களை ஆண்களுக்கு நிகராக சரிசமமாக பாவித்த பாரதியின் கனவு பெண் தான் புதுமைப்பெண். இதை மெய்பிக்கும் வகையில் பெண்கள் அனைவரையும் கல்வி கற்கும் வகையில் மாற்ற தமிழக அரசு உயர்கல்வி கற்கும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களுக்கு வழங்கும் புதிய திட்டமான புதுமைப்பெண் திட்டத்தை துவங்கியது.
தமிழகத்தை பொருத்தவரை ஏழ, எளிய மக்களே அதிகம். இதனால் கிராமம் முதல் நகரம் வரை அரசு பள்ளிகளில் அதிக மாணவர்கள் படிப்பதை பார்க்க முடியும். தங்களது வருமானத்திற்கு ஏற்ப குழந்தைகளை பெற்றோர்கள் படிக்க வைப்பார்கள். பள்ளி படிப்பை முடிப்பதே பெரும் கஷ்டமாகி விடும். இதனால் மாணவிகள் பெரும்பாலும் தங்களது கல்வியை பாதியில் நிறுத்திக் கொள்வர்.
இதை தவிர்க்கும் விதமாக 1989ம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் கலைஞரால் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் மணப்பெண் படித்திருந்தால் கல்வி தகுதிக்கு ஏற்ப 25 ஆயிரம் ரூபாயும் 4 கிராம் தங்கமும் வழங்கப்பட்டது.
இது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பத்தாவதோடு படிப்பை நிறுத்த நினைத்தவர்கள் மேலும் படிக்க வைத்தனர்.
அடுத்த காலக்கட்டத்தில் 25 ஆயிரம் ரூபாய் 50 ஆயிரமாகவும், 4 கிராம் தங்கம் 8 கிராம் தங்கமாகவும் மேலும் விரிவு படுத்தப்பட்டது. இந்த திட்டத்தை போலவே தற்போது தமிழக அரசு புதுமைப்பெண் திட்டமாக மாற்றியுள்ளது. ஆறாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலும் அரசு பள்ளியில் படித்த மாணவிகள் உயர் கல்விக்கான பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பு மற்றும் தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடை நில்லாமல் படிக்கும் காலம் வரையிலும் மாதம் ஆயிரம் ரூபாய் அந்தந்த மாணவிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
இதற்காக 698 கோடி ரூபாய் அரசு ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் 6 லட்சம் மாணவிகள் பயன் அடைவார்.
கிராம பகுதிகளில் பெண் கல்வி என்பது கேள்வி குறிதான். பொருளாதார நெருக்கடி, திருமணம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பள்ளி படிப்பை கூட முடிக்க முடியாத எத்தனையோ குடும்பங்கள் இன்றும் உண்டு. தற்போது அரசு அறிவித்துள்ள இந்த திட்டத்தின் மூலம் மாணவிகள் தங்களுக்கு தேவையான பொருளாதாரத்தை அரசிடமிருந்து தாங்களே பெற்றுக் கொள்வதால் கல்வி என்பது இடைநிறுத்தம் இல்லாமல் தொடரும். இது பெண் கல்வி முன்னேற்றத்தின் ஒரு முக்கிய புள்ளியாக்கும். கல்வி துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்த தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
காலை சிற்றுண்டி உணவு திட்டம், பள்ளி மேலாண்மை குழு அமைத்து பெற்றோர் வசம் பள்ளியின் வளர்ச்சியை கண்காணிக்கும் பொருப்பை வழங்கி ஒவ்வொரு மாதம் கூட்டம் நடத்தி அரசிற்க்கு அறிக்கை சமர்க்க சொல்லுவது என அசத்தி வருகின்றனர். புதுமைப்பெண் திட்டம் மூலம் தமிழகத்தில் பெண்கள் உயர்கல்வி பயின்றோர் எண்ணிக்கை உயரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. பெண்கள் முன்னேறினால் நாடு முன்னேறும் என்ற சொல்லிற்கு இணங்க தமிழகம் முன்னேற்ற பாதையில் செல்லும் என்பதில் ஐயமில்லை.
திருவாடானை அரசு கல்லூரியில் உயர் கல்வியை தொடர புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் சுமார் 80க்கும் மேற்பட்ட மாணவிகள் பயன் அடைவது குறிப்பிடத்தக்கது. காலை சிற்றுண்டி உணவு திட்டத்தின் மூலம் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரையிலும் படிக்கும் சிறார்கள் பெரும் பயன் அடைகின்றனர். தினமும் ஒரு வகை உணவு கொடுப்பது மேலும் சிறப்பு. கல்வி துறையில் தொடர்ந்து புரட்சியை ஏற்ப்படுத்தி வரும் முதல்வரை கல்வியாளர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
இல்லத்தரசி தேவி கூறியது, தமிழக அரசின் காலை உணவு திட்டம் மிகவும் பயனுள்ள திட்டமாகும். வீட்டில் சாப்பிடாத குழந்தைகள் கூட சக குழந்தைகளுடன் அமர்ந்து சாப்பிட்டு விடுகின்றனர். இது பெற்றோர்களான எங்களுக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. மேலும் புதுப் பெண் திட்டத்தின் மூலம் பொருளாதார ரீதியாக படிப்பை நிறுத்தியவர்கள் இல்லை என்ற நிலை ஏற்படும். எங்கள் காலங்களில் இதுபோன்ற திட்டங்களை அரசு செயல்படுத்தி இருந்தால் நாங்களும் கல்லூரி சென்றிருப்போம்.
இனி வரும் காலம் அனைத்து பெண்களும் உயர் கல்வியை முடித்திருப்பர் என்பது மிகவும் மகிழ்ச்சியான விசயம். பெண் பிள்ளைகளை படிக்க வைக்க யாரையும் நம்பி இருக்க தேவையில்லை என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
The post தமிழ்நாட்டில் கல்வி துறையில் புதுமைப்பெண், காலை உணவுத் திட்டத்தால் புரட்சி appeared first on Dinakaran.
