கோவில்பட்டி, செப். 28: பிரதோஷத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட சிவன் கோயில்களில் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் வழிபாடுகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பிரதோஷ வழிபாடு சுபமங்களம் தரும். பதவி, புகழ் வருவதுடன், மாயைகளில் சிக்கி அலைக்கழியாத நிலையையும் அளிக்கும். பிரதோஷ வழிபாடு சகல தோஷமும் போக்கி சந்தோஷம் அளிக்கும் என்பதும் ஆன்றோர்களின் ஐதீக வாக்காகும். நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் கோயிலில் நடை திறக்கப்பட்டு சங்கல்பம், கணபதி பூஜை, ஸ்தபன கும்பகலச பூஜை, ருத்ர ஜெபம், வருணஜெபம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து நந்தியம் பெருமானுக்கு மஞ்சள் பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான அபிஷேகங்களுடன் சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது.
பூஜைகளை பட்டர்கள் செண்பகராமன், ரகு ஆகியோர் செய்தனர். பூஜையில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் ராஜகுரு, உறுப்பினார்கள் திருப்பதி ராஜா, சண்முகராஜா, ரவீந்திரன், கோயில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி, ஆய்வாளர் சுககளைபிரியா மற்றும் சுற்றுவட்டார மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல் தூத்துக்குடி சிவன் கோயில் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியம் பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் திரளானோர் பங்கேற்று தரிசித்தனர்.
The post சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு appeared first on Dinakaran.