×

நாட்டில் வேலையில்லா திண்டாட்டத்தால் போர்ட்டர் வேலை பார்க்கும் இன்ஜினியர்கள்: ராகுல் வீடியோ வெளியீடு

புதுடெல்லி: ரயில் நிலையத்தில் போர்ட்டர்களுடன் உரையாடிய வீடியோவை வெளியிட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நாட்டில் வரலாறு காணாத வேலையில்லா திண்டாட்டம் நிலவுவதால் இன்ஜினியரிங் பட்டதாரிகளும் 2 வேளை சாப்பாட்டிற்காக போர்டர்களாக வேலை செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 21ம் தேதி டெல்லி ஆனந்த் விகார் ரயில் நிலையத்தில் போர்டர்களை சந்தித்து அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்தார். அப்போது போர்டர்களுடன் உரையாடிய ராகுல், அவர்களின் சிவப்பு நிற சீருடையும் பேட்ஜ்ஜும் அணிந்து பெட்டி தூக்கிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இதைத் தொடர்ந்து போர்டர்களுடன் உரையாடிய முழு வீடியோவை ராகுல் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.

அதில் ராகுல் கூறியிருப்பதாக காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியாவில் மிகவும் கடினமாக உழைக்கும் வர்க்கம் கூலித் தொழிலாளிகள் தான். இன்று இந்தியாவில் லட்சக்கணக்கான படித்த இளைஞர்கள் ரயில் நிலையங்களில் போர்ட்டர்களாக வேலை செய்து சாப்பிடும் நிலையில் உள்ளனர். இதற்கு காரணம், வரலாற்றில் இல்லாத அளவுக்கு நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. படிப்பறிவு பெற்ற குடிமகன் கூட இரண்டு வேளை சாப்பிடுவதற்கு சம்பாதிக்க போராட வேண்டி உள்ளது.

ஒருநாளைக்கு ₹400 அல்லது ₹500 சம்பாதிக்கிறார்கள். இது வீட்டு செலவுக்கு கூட போதாது. அப்படியிருக்கையில் சேமிப்பை பற்றி எல்லாம் நினைத்து கூட பார்க்க முடியாது. உணவு, தங்குமிடம், கல்வி, ஆரோக்கியம் என எல்லா அடிப்படை தேவைகளின் விலையும் அதிகரித்து விட்டது. அவர்கள் எப்படி வாழ முடியும்?

ரயில்வேயில் வேலை செய்யும் ஊழியர்களைப் போல இவர்களுக்கு அதிக மாத சம்பளம், ஓய்வூதியம், மருத்துவ காப்பீடு என எந்த சலுகைகளும் இல்லை. எனவே சுமையை சுமப்பவர்களின் தோள்கள் இன்று நிர்ப்பந்தங்களின் காரணமாக குனிந்துள்ளன. ஆனாலும், கோடிக்கணக்கான இந்தியர்களைப் போலவே அவர்களின் நம்பிக்கையும் உள்ளது. காலம் மாறும் என காத்திருக்கின்றனர். இவ்வாறு ராகுல் கூறி உள்ளார்.

போர்ட்டர்களின் தங்குமிடங்களை பார்த்த ராகுல் அவர்களின் பிரச்னைகளை கேட்டறிந்தார். அப்போது சிலர், இன்ஜினியரிங் படித்தும் வேலை கிடைக்காததால் போர்ட்டராக இருப்பதாக ராகுலிடம் கூறும் காட்சிகள் வீடியோவில் இடம் பெற்றுள்ளது.

The post நாட்டில் வேலையில்லா திண்டாட்டத்தால் போர்ட்டர் வேலை பார்க்கும் இன்ஜினியர்கள்: ராகுல் வீடியோ வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Rahul ,New Delhi ,Congress ,president ,Rahul Gandhi ,
× RELATED மபி, சட்டீஸ்கரில் தோற்றது ஏன்? கார்கே, ராகுல் தலைமையில் ஆய்வு