
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக மக்களின் முதுகெலும்பு வேளாண்மை என்றால், அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் உயிர் மூச்சு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களாகும். தமிழகம் முழுவதும் சுமார் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் சுமார் 2 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து வருகிறது.
தற்போது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் இரண்டாம் மின்கட்டண உயர்வு, மின்சார நிலைக் கட்டணம், பீக் ஹவர் கட்டணம், சோலார் தகடுகள் பொருத்தி அதன்மூலம் உபயோகிக்கப்படும் மின்சாரத்திற்கு கூடுதல் கட்டணம் போன்றவற்றால் பெரும் சரிவை சந்தித்து வருகிறது.
மின் கட்டண உயர்வால், பொருட்களின் அடக்க விலை கடுமையாக உயர்ந்துள்ளது என்றும், இந்த விலை உயர்வு மக்களின் தலையில்தான் விழுகிறது என்றும், இதனால், வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், இதன் காரணமாக தமிழகமெங்கும் சுமார் 25 சதவீத தொழிற்சாலைகள் மூடப்படும் அபாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக போராட்டம் நடத்திவரும் தொழில் முனைவோர் கூறியுள்ளனர். எனவே, உடனடியாக மின்கட்டண உயர்வை திரும்ப பெற்று, தமிழகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை மீண்டும் உச்சம்பெற தேவையான நடவடிக்கைகளை எடுக்க திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post தமிழகத்தில் மின்கட்டண உயர்வை திரும்ப பெற்று சிறு, குறு, நடுத்தர தொழில் துறை மீண்டும் உச்சம்பெற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி கோரிக்கை appeared first on Dinakaran.