×

இன்று உலக சுற்றுலா தினம்: பெரம்பலூருக்கு பெருமை சேர்க்கும் சுற்றுலா தலங்கள்

பெரம்பலூர்: ஐக்கிய நாடுகள் சபை 1980ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதியை உலக சுற்றுலா தினமாக அறிவித்தது. சுற்றுலா செல்ல விரும்பாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். இன்று மனிதன் நிலவுக்கும் சுற்றுலா செல்ல தயாராகி விட்டான். இன்றைய உலகில் பல்வேறு நெருக்கடிகளால் மன உளைச்சலில் தவிக்கும் மக்களுக்கு சுற்றுலா மன நிம்மதியை தருமென்பது உண்மை. நண்பர்களோடு, உறவினர்களோடு, குடும்பத்தோடு சென்று குதூகளிக்க சுற்றுலா தலங்கள் உலகெங்கும் உள்ளன. இவை கலாச்சார சுற்றுலா, கல்விச் சுற்றுலா, சுற்றுச்சூழல் சுற்றுலா, பாரம்பரியச் சுற்றுலா எனப் பல வகைகளில் பரிணமித்துள்ளது. சொர்க்கமே என்றாலும் நம்மூரை போல் ஆகுமா என்ற படாலுக்கேற்க உள்ளூர் சுற்றுலாத் தலங்களுக்கு இணையாக வேறெதுவும் இல்லை என்பவர்களும் உள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ளது போல பெரம்பலூர் மாவட்டத்திலும் சுற்றுலாத் தலங்கள் பல உள்ளன. இம்மாவட்டத்திற்கு வரலாற்று ரீதியாக பெருமை சேர்க்கும் சுற்றுலாத் தலமாக இருப்பது ரஞ்சன்குடி கோட்டை. கிபி 16ம் நூற்றாண்டின் இறுதியில் தூங்கானை மறவன் என்ற குறுநில மன்னரால் இதன் கட்டுமானப் பணி தொடங்கப்பட்டது.

சந்தாசாஹிப், பிரெஞ்சு கூட்டுப் படைக்கும், முகமதுஅலி, ஆங்கிலேய கூட்டுப் படைக்கும் இடையே 1751ம் ஆண்டு நடந்த வால்கொண்டா போர் இந்த ரஞ்சன்குடி கோட்டையை மையமாக வைத்து நடந்ததாக வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. இதில்தான் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கதை வசனத்தில் உருவான பொன்னர் சங்கர் திரைபடத்தின் பெரும்பாலான படப் பிடிப்புகள் நடத்தப்பட்டன. இந்தக் கோட்டை பெரம்பலூர் மாவட்ட சுற்றுலா தலங்களில் பிரதானமான ஒன்றாகும். இது இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மற்றொரு சுற்றுலா மையம் சாத்தனூரில் உள்ள கல்மர படிவம். 12 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, பூக்காத தாவர வகையைச் சேர்ந்த மரமொன்று கல்லாகிப் போன, உலகின் மிகப் பெரிய கல்மரப் படிமம் இது. இந்திய புவியியல் ஆய்வுத் துறைக்குத் தலைமை ஏற்ற முதல் இந்தியரான எம்.எஸ் .கிருஷ்ணன் 1940ல் ஆய்வு மேற்கொண்டபோது, இந்த கல்மரம் கண்டறியப்பட்டு இந்திய தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் கிபி 9ஆம் நூற்றாண்டின் இறுதியில் பராந்தக சோழன் ஆட்சிக் காலத்தில், அதாவது தஞ்சை பிரகதீஷ்வரர் திருக்கோயிலுக்கு 100 ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்ட சிவன் கோயிலான வாலி கண்டபுரம் வாலாம்பிகை சமேத வாலீஸ்வரர் திருக்கோயிலும் பெரம்பலூர் மாவட்ட சுற்றுலா தலங்களில் ஒன்றாக உள்ளது. ராமாயண காலத்தில் இங்குதான் வாலியை ராமன் மறைந்திருந்து கொன்றார் என்பதற்காக வாலி கொன்றபுரம் எனக்கூறி பின்னாளில் வாலி கண்டபுரம் என மறுவி வந்ததாகவும் கூறப்படுவதுண்டு. இதுவும் இந்திய தொல்லி யல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அதேபோல், பெரம்பலூர் அருகேயுள்ள சிறுவாச்சூரிலுள்ள புகழ்பெற்ற மதுர காளியம்மன் கோயில் ஆதி சங்கரரால் வழிபாடு செய்து பாடப்பட்ட சிறப்புக் கொண்டது. சிலப்பதிகார கண்ணகியின் சினம் தணித்த வல்லமை கொண்டதாகக் கருதப்படும் இக்கோயிலில் தங்கத்தேர் உள்ளது குறிப்பிடத் தக்கது. அதோடு பச்சைமலைத் தொடர்ச்சியில் லாடபுரம் அருகேயுள்ளது மயிலூற்று அருவி. வடகிழக்குப் பருவ மழையின் போது ஆர்ப்பரித்து கொட்டும் அருவி பாறை மீது அமர்ந்துள்ள மயில் தனது தோகையை விரித்துக் கீழே தொங்க விட்டதுபோல் இருப்பதால், மயிலூற்று அருவியென்று இதற்குப் பெயர். இதிலிருந்து வரும் தண்ணீரால் கோனேரி ஆறு உற்பத்தியாகிறது.

இதேபோல் பச்சை மலை- செம்மலை ஆகியவற்றை இணைத்து, அன்னமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட விசுவக்குடி மற்றும் தொண்டமாந்துறை இடையே, கல்லாற்றின் குறுக்கே 2015ஆம் ஆண்டு கட்டப்பட்ட விசுவக்குடி அணைக்கட்டு இங்கு உள்ளது. மருதையாற்றின் குறுக்கே கொட்டரையில் கட்டப்பட்ட அணைக்கட்டும் தற்போது பெரம்பலூர் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக உருவெடுத்து வருகிறது. இதுபோன்ற சுற்றுலா தலங்களை பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் முறையாகப் பராமரித்து, புனரமைத்து, சுற்றுலா பயணிகளுக்கான குடிநீர், கழிப்பிடம், போக்குவரத்து, சாலை வசதிகளையும் செய்து கொடுத்தால் பெரம்பலூர் மாவட்ட சுற்றுலா தலங்கள் மேலும் பிரசித்தி பெறும். மாவட்ட மக்களின் மனம் கவர்வதோடு, சுற்றுலா ஆர்வலர்களை சுண்டி இழுக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.

The post இன்று உலக சுற்றுலா தினம்: பெரம்பலூருக்கு பெருமை சேர்க்கும் சுற்றுலா தலங்கள் appeared first on Dinakaran.

Tags : World Tourist Day ,Perambalur ,United Nations ,World Tourism Day ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் தொழில் முனைவோர்களுக்கு அழைப்பு