×

நாய் பிடிக்கும் மற்றும் கால்நடை மருத்துவப் பணியாளர்களுக்கான வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி முகாமினை தொடங்கி வைத்தார் மேயர் பிரியா

சென்னை: உலக வெறிநாய்க்கடி நோய் தினத்தை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நாய் பிடிக்கும் மற்றும் கால்நடை மருத்துவப் பணியாளர்களுக்கான வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி முகாமினை மேயர் பிரியா இன்று தொடங்கி வைத்தார். உலக வெறிநாய்க்கடி நோய் தினத்தை முன்னிட்டு, வெறிநாய்க்கடி நோய் தாக்கத்திலிருந்து பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நாய் பிடிக்கும் பணியாளர்கள் மற்றும் கால்நடை மருத்துவப் பணியாளர்களைப் பாதுகாத்திடும் வகையில் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி முகாமினை மேயர் பிரியா இன்று (27.09.2023) ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, மேயர் நாய் பிடிக்கும் பணியாளர்களுக்கு சீருடைகள், காலணிகள், கையுறைகள் மற்றும் நாய் பிடிக்கும் வலைகளை வழங்கினார்.

பின்னர், மேயர் தலைமையில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் உலக ரேபிஸ் நோய்த்தடுப்பு தின உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர். 1885ஆம் ஆண்டு லூயிஸ் பாஸ்டர் என்ற விஞ்ஞானி வெறிநாய்க்கடி நோய் (Rabies) என்ற கொடிய நோய்க்கான தடுப்பு மருந்தினை கண்டுபிடித்தார். இவர் செப்டம்பர் 28, 1895 அன்று மறைந்தார். இவரது நினைவைப் போற்றும் வகையில் 2007ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் 28ஆம் நாள் உலக வெறிநாய்க்கடி நோய் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு 17ஆவது உலக வெறிநாய்க்கடி நோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில், மேயர் பேசும்போது தெரிவித்ததாவது : ரேபிஸ் நோய் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், நோய் பாதித்த நபர் மற்றும் அவரின் குடும்பத்தை எவ்வாறு பாதிக்கும் என்றும், தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவம் குறித்தும், நாய் கடித்தால் மட்டுமே ரேபிஸ் பரவும் என்றில்லாமல், என்னென்ன விலங்குகள் கடித்தால் ரேபிஸ் பரவும் என்று இன்று சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டது.

நாய், பூனை போன்ற விலங்குகள் கடித்தவுடன் அதற்கான தடுப்பூசி மற்றும் சிகிச்சையை உடனடியாக மேற்கொண்டால் மட்டுமே இந்த நோய்க்கான தீர்வினைக் காணமுடியும். இதுகுறித்த விழிப்புணர்வினை பொதுமக்களுக்கு ஏற்படுத்திடும் வகையில் தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நாய் பிடிக்கும் பணியாளர்கள் மற்றும் கால்நடை மருத்துவப் பணியாளர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில், பணியில் ஈடுபடும் போது சிறு கீறல் ஏற்பட்டாலும் அதன் மூலம் ஏற்படும் நோய் தாக்கத்தினால் நீங்கள் பாதிக்கப்படுவதுடன் உங்களது குடும்பமும் பாதிக்கப்படும் என்பதால், கட்டாயமாக கையுறைகளை அணிந்து, அவரவருக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து உபகரணங்களை முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் நாய் பிடிக்கும் பணிகளில் ஈடுபடும் பொழுது வழங்கப்பட்டுள்ள சீருடைகளைக் கட்டாயம் அணிந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் நாய் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தெருநாய்கள் மூலம் வெறிநாய்க்கடி நோய் பரவுவதைத் தடுக்கும் வகையில், புளியந்தோப்பு, சோழிங்கநல்லூர், மீனம்பாக்கம், கண்ணம்மாபேட்டை மற்றும் லாயிட்ஸ் காலனி ஆகிய 5 நாய் இனக்கட்டுப்பாட்டு மையங்களும், திரு.வி.க.நகர், நுங்கம்பாக்கம், கண்ணம்மாபேட்டை மற்றும் மீனம்பாக்கம் ஆகிய 4 செல்லப்பிராணிகள் சிகிச்சை மையங்களும் செயல்பட்டு வருகின்றன.

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தெருநாய்கள் குறித்து பொதுமக்கள் அளிக்கும் புகாரின் அடிப்படையிலும், நாய்கள் தொல்லை அதிகம் உள்ள இடங்களிலும் தெருநாய்கள் பிடிக்கப்பட்டு, அவற்றிற்கு அனுபவம் வாய்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் மூலம் அவற்றிற்கு இனக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை மற்றும் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அறுவை சிகிச்சை முடிந்து குணமடைந்த பின்னர் நாய் இனக்கட்டுப்பாட்டு விதி 2023ன்படி அவைகள் மீண்டும் பிடித்த இடங்களிலேயே விடப்படுகின்றன. மேலும், தெருநாய்கள் குறித்து மாநகராட்சியின் 1913 என்ற உதவி எண்ணில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, 16 தெருநாய்கள் பிடிக்கும் வாகனங்களும், ஒவ்வொரு வாகனத்திலும் நாய் பிடிக்கும் வலைகளுடன் 5 நாய் பிடிக்கும் பணியாளர்கள் மூலமாக நாய் இனக்கட்டுப்பாட்டு விதிகள் 2023ன்படி மனிதாபிமான முறையில் நாய் பிடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2022ஆம் ஆண்டு முதல் இதுநாள் வரை 23,516 தெருநாய்கள் பிடிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

செல்லப் பிராணிகள் சிகிச்சை மையங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் செல்லப்பிராணிகளுக்கு பொதுவாக ஏற்படும் அனைத்து வகை நோய்களுக்கும் இலவசமாக சிகிச்சை வழங்கப்படுவதுடன், உடல்நலக் குறைவு ஏற்படாத வகையில் தடுக்க கால்நடை உதவி மருத்துவர்களால் ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகிறது. வெறிநாய்க்கடி நோய் இல்லா சென்னை (Rabies free Chennai) என்ற இலக்கினை அடையும் பொருட்டு, செல்லப் பிராணிகள் சிகிச்சை மையங்களில் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி முற்றிலும் இலவசமாக செலுத்தப்படுகிறது. நாய் கடித்தால் தான் வெறிநாய்க்கடி நோய் தொற்று ஏற்படும் என்பது இல்லை. நம் உடலில் சிறு கீறல் இருந்து அதில் பாதிக்கப்பட்ட நாயின் உமிழ்நீர் பட்டாலும் வெறிநாய்க்கடி நோய் தாக்கும்.

நாயினால் கடிபட்டவர் உடனடியாக கடிபட்ட இடத்தை சோப்புப் போட்டு சுத்தமான குழாய் நீரால் 15 நிமிடங்கள் கழுவிய பின்னர் உடனடியாக மருத்துவச் சிகிச்சைக்குச் சென்று உரிய சிகிச்சையினை எடுத்துக் கொள்ள வேண்டும். பெருநகர சென்னை மாநகராட்சி விதிகளின் படி, செல்லப்பிராணிகள் வளர்க்கும் உரிமையாளர்கள் அதற்கான உரிமம் (Pet License) பெற்றிருக்க வேண்டும். இதற்கென மேற்கண்ட மையங்களிலும், இணையதளம் வாயிலாகவும் செல்லப்பிராணிகளுக்கான உரிமம் ரூ.50/- என்ற கட்டணத்தில் வருடத்திற்கு ஒருமுறை புதுப்பிக்கும் வகையில் வழங்கப்படுகிறது. வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி போடப்பட்ட பிறகே நாய்களுக்கு உரிமம் வழங்கப்படுவதால் செல்லப்பிராணிகள் மூலம் மனிதர்களுக்கு ரேபிஸ் நோய் பரவுவது முற்றிலும் தவிர்க்கப்படுகிறது.

The post நாய் பிடிக்கும் மற்றும் கால்நடை மருத்துவப் பணியாளர்களுக்கான வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி முகாமினை தொடங்கி வைத்தார் மேயர் பிரியா appeared first on Dinakaran.

Tags : Mayor Priya ,Chennai ,PTI ,World Veterinary Disease Day ,Metropolitan ,Dinakaran ,
× RELATED செல்லப்பிராணிகள் வளர்ப்போர்...